Published:Updated:

ஒரு ஏக்கர்... 2,62,000 ரூபாய்! - செம்மையான லாபம் தரும் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரி!

அறுவடை செய்த கத்திரிக்காயுடன்
ஜான் இமானுவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடை செய்த கத்திரிக்காயுடன் ஜான் இமானுவேல்

மகசூல்

த்திரிக்காய் லாபகரமான பயிர். ஆனால், இதைச் சாகுபடி செய்வது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. ரசாயன முறையில் வீரிய ரகக் கத்திரிச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சிநோய்த் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, மைக்கேல்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜான் இமானுவேல், இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரிச் சாகுபடி செய்து வெற்றிகரமாக மகசூல் எடுத்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

கத்திரி வயல்
கத்திரி வயல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காய்கள் பறித்துக்கொண்டிருந்த ஜான் இமானுவேல் உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். “எனக்குக் கத்திரிச் சாகுபடியில 20 வருஷத்துக்கு மேல அனுபவமிருக்கு. மாத்தூர் கத்திரி, கண்ணாடிக் கத்திரியெல்லாம் சாகுபடி செஞ்சிருக்கோம். சமீபகாலமா செவந்தம்பட்டி கத்திரிக்கு வரவேற்பு அதிகமாக இருக்குறதுனால, இந்த முறை இதைப் பயிர் பண்ணியிருக்கோம். நாங்க எப்போதுமே நாட்டுக்கத்திரிதான் சாகுபடி செய்வோம். இதுலதான் பலன்கள் அதிகம். குறிப்பா, வேர்ப்பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்காது. ஒரு சில செடிகள்ல லேசா வந்தாலும்கூட, உடனே கட்டுப்படுத்திடலாம்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

வீரிய ரகக் கத்திரியில வேர்ப்பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க முடியாது. அதுல நோய் எதிர்ப்பாற்றல் இருக்காது. ஒரு செடியில் வந்துட்டாலே அடுத்த சில மணிநேரங்கள்ல வேகமாக அடுத்தடுத்த செடிகளுக்குப் பரவிடும். என்னதான் அதிகமாகப் பூச்சிக்கொல்லி தெளிச்சாலும் கட்டுப் படுத்துறது ரொம்பக் கஷ்டம். செடிகள் கருகிடும். நாட்டுக்கத்திரியைத்தான் மக்களும் அதிகம் விரும்புறாங்க. அதுதான் சுவையா, வாசனையா இருக்கு. தோல், சதை மென்மையா இருக்கு. சாம்பார், கூட்டுனு எதுல போட்டாலும் சீக்கிரத்துல கரைஞ்சி, சுவையை அதிகப்படுத்தும். ஆனால், வீரிய ரகக் கத்திரி அப்படியே கல்லு மாதிரி கிடக்கும்” என நாட்டுக்கத்திரியின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சின்ன வயசுல இருந்தே, அப்பா கூடச் சேர்ந்து விவசாயத்தைக் கவனிக்குறேன். படிச்சி முடிச்சி, தனியார் பள்ளியில தமிழ் ஆசிரியரா வேலை பார்க்குறேன். ஆனாலும் விவசாயத்தை விடலை. வேலை நேரம் போக, மற்ற நேரங்கள்ல வயல்லதான் இருப்பேன்.

சாம்பல், செறிவூட்டப்பட்ட எரு
சாம்பல், செறிவூட்டப்பட்ட எரு

எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. இது வண்டல் மண் பூமி. இயற்கை முறையில தலா ஒரு ஏக்கர்ல கத்திரி, வாழை, ரசாயன முறையில ஒன்றரை ஏக்கர்ல உளுந்து, அரை ஏக்கர்ல வெற்றிலையும் பயிர் பண்ணி யிருக்கோம்” என்றவர், கத்திரிச் சாகுபடி அனுபவம் குறித்துப் பேசினார்.

“நாங்க தொடர்ச்சியா நாட்டுக் கத்திரிக்காய்ச் சாகுபடி செஞ்சுகிட்டு வந்தாலும், 10 வருஷத்துக்கு முன்ன, அதிகமா ரசாயன உரம், பூச்சிக்கொல்லிப் பயன் படுத்தினோம். அதோட பாதிப்புகளைக் கண்கூடா உணர்ந்தோம். செலவு அதிக மானதோடு பல பின்னடைவுகளையும் சந்திச்சோம். அதுக்கு பிறகுதான் படிப்படியாக ரசாயன பயன்படுகளைக் குறைச்சிக்கிட்டே வந்தோம். இந்த முறை முழுமையா 100 சதவிகிதம் இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி, செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரிப் பயிர் பண்ணியிருக்கோம். நிலத்தில முன்ன இருந்த ரசாயனத்தன்மையைப் போக்குறதுக்காக, ஏக்கருக்கு 25 கிலோ நவதானியம் தெளிச்சு, 45-ம் நாள் பூப்பூக்கும்போது சேத்துழவு செஞ்சு மடக்கி உழுதோம்.

அறுவடை செய்த கத்திரிக்காயுடன்
ஜான் இமானுவேல்
அறுவடை செய்த கத்திரிக்காயுடன் ஜான் இமானுவேல்

கத்திரிச் சாகுபடிக்குச் சேற்றுத்தன்மை இருக்கக் கூடாது. நிலம் காய்றதுக்குச் சில மாதங்கள் ஆகும். அதுவரைக்கும் சும்மா போட்டு வைக்க வேண்டாம்னு, சீரகச் சம்பா நெல் பயிர் பண்ணினோம். அதுக்கு எந்தச் செலவுமே கிடையாது. ஒரு தடவை மட்டும் பஞ்சகவ்யாவுல சூடோமோனஸ் கலந்து தெளிச்சேன். 23 மூட்டை நெல் மகசூல் கிடைச்சுது. நெல் அறுவடை செஞ்சு முடிச்சதும், அடுத்த சில நாள்களுக்கு நிலத்தை நல்லா காயவிட்டு, புழுதி உழவு ஓட்டி, கத்திரிச் சாகுபடியைத் தொடங்கினோம்.

நாற்றுகள் வெளியில் வாங்கக் கூடாது

கத்திரிச் சாகுபடியில நாற்று விஷயத்துல கவனமா இருக்கணும். நாமளே சொந்தமாக உற்பத்தி செஞ்சாதான் நாற்று தரமா இருக்கும். வெளியில வாங்குற நாற்றுகள்ல நோய் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம். தரமான விதையை வாங்கி, பஞ்சகவ்யா, டிரைக்கோ டெர்மா விரிடி கலந்த கரைசல்ல விதைநேர்த்தி செஞ்சு, இயற்கை முறையில உற்பத்தி செய்யக்கூடிய நாற்றுகள் தரமாக இருக்கும். பூச்சி, நோய் எதிர்ப்புத்திறனும் அதிகமா இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகசூல்

நாற்று நடவு செஞ்சதுல இருந்து இப்ப, 150 நாள்கள் ஆகுது. 45-ம் நாள்ல இருந்து செடிகள்ல காய்கள் கிடைக்க ஆரம்பிச்சுது. இந்த ஒரு ஏக்கரல 9,000 செடிகள் இருக்கு. இதை நாலு பகுதிகளா பிரிச்சி, தினமும் காய் பறிக்குறோம். முதல் பறிப்புல 30 கிலோ, அடுத்தநாள் 60 கிலோனு மகசூல் அளவு கூடிக்கிட்டே வந்துச்சு. 50 நாள்களுக்கு மேல சரசாரியா தினமும் 150 கிலோ காய்கள் கிடைச்சிக்கிட்டு இருக்கு. பறிப்புக்கு வரத் தொடங்கியதுல இருந்து இதுவரைக்கும் 100 நாள் காய் பறிச்சி இருக்கோம். மொத்தம் 12 டன் மகசூல் கிடைச்சிருக்கு.

ஒரு ஏக்கர்... 2,62,000 ரூபாய்! - செம்மையான லாபம் தரும் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரி!

இந்தப் பகுதியில இருக்கக் கூடை வியாபாரிகள் தினமும் வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. கிலோவுக்குக் குறைந்தபட்சம் 20 ரூபாய் விலை கிடைக்குது. கூடை வியாபாரிகள் எங்ககிட்ட இருந்து வாங்கிக் கிட்டுப் போயி, நேரடியாக வீடுகள்ல விற்பனை செய்றாங்க. இதனால் இடைத் தரர்கள் தவிர்க்கப்படுறாங்க’’ என்றவர் நிறைவாக,

“இயற்கை முறையில உற்பத்தி செஞ்ச நாட்டுக்கத்திரிக்காய் என்பதால், மக்களும் விரும்பி வாங்குறாங்க. இதுவரைக்கும் 2,40,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இன்னும் மூணு மாசத்துக்குக் காய்கள் பறிக்கலாம். இனிமேல் படிப்படியாக மகசூல் குறைஞ்சிடும். இனிவரும் நாள்கள்ல சராசரியாகத் தினமும் 80 கிலோ வீதம் 7,200 கிலோ மகசூல் கிடைக்க வாய்ப்பு இருக்குது. அது மூலமா 1,44,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம், இந்த ஒரு ஏக்கர் கத்திரிச் சாகுபடி மூலம், 3,84,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவும் போக, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல நிகர லாபம் கிடைக்கும்” என்றார்.

தொடர்புக்கு, ஜான் இமானுவேல், செல்போன்: 94426 61880

ஒரு ஏக்கர்... 2,62,000 ரூபாய்! - செம்மையான லாபம் தரும் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரி!

இலவசமாகக் கிடைக்கும் ஒட்டுண்ணி அட்டைகள்!

“திருச்சியில் உள்ள மத்திய பயிர் பாதுகாப்பு மையத்துல இலவசமாக ஒட்டுண்ணி அட்டைகள் கொடுக்குறாங்க. இதுல நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் இருக்கும். இதைச் செடிகளின் இலைகள்ல பொருத்தி வெச்சிடோம்னா, குஞ்சு பொறிச்சு, தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திடும். இது காய்ப்புழு உள்ளிட்ட பலவகையான பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கு” என்கிறார் இமானுவேல்.

செவந்தம்பட்டி கத்திரிச் சாகுபடி!

நாற்று உற்பத்தி

ரு ஏக்கர் நாற்று உற்பத்திக்கு 250 கிராம் விதை தேவை. 500 மி.லி பஞ்சகவ்யாவில் 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். இதில் நாட்டுக்கத்திரி விதைகளை விதைநேர்த்தி செய்து, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். இதற்கு 2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். மண்வெட்டியால், ஒரு அடி ஆழத்துக்கு மண்ணைக் கொத்தி, புழுதியாக்க வேண்டும். தண்ணீர்விட்டு, நன்கு காய்ந்த பிறகு, மீண்டும் மண்ணைக் கொத்த வேண்டும். இதுபோல் செய்வதால் களைகள் முழுமையாக நீங்கும். ஜீவாமிர்தம் கலந்து செறிவூட்டப்பட்ட 30 கிலோ எரு போட்டு, மண்ணை நன்கு கொத்தி, பொலபொலப்பாக்கி, சமப்படுத்தி, 5 அடி நீளம் 4 அடி அகலத்திற்குப் பாத்திகள் அமைக்க வேண்டும். விதைக்கு விதை அதிக இடைவெளி இருக்குமாறு விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். இடைவெளி அதிகமாக இருந்தால்தான் நாற்றுகள் தரமாக வளரும். விதைகளை லேசாக மூடும் அளவுக்கு மண்ணைக் கிளறிவிட்டு, கீற்று மட்டைமூலம் மூடாக்குப் போட்டு, தினமும் காலை, மாலை இருவேளை இதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் மூடாக்கை நீக்க வேண்டும். விதைகள் முளைக்கத் தொடங்கியிருக்கும். 15-ம் நாள் களையெடுத்துவிட்டு, 13 லிட்டர் தண்ணீரில், தலா 100 மி.லி பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் மீண்டும் இதுபோல் தெளிக்க வேண்டும். 25-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நன்கு புழுதி உழவு ஓட்டி, தண்ணீர்ப் பாய்ச்சி, நிலத்தை நன்கு காய விட வேண்டும். மீண்டும் புழுதி உழவு ஓட்டி, தண்ணீர் விட்டு, நன்கு காய்ந்ததும் மீண்டும் உழவு ஓட்ட வேண்டும். இதுபோல் நான்கு முறை செய்ய வேண்டும். மண்ணைப் பொலபொலப்பாக மாற்றுவதற்கும், களைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இது மிகவும் அவசியம். இரண்டரை அடி அகலம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பார்கள் கிழக்கு மேற்காக இருந்தால் சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் நன்கு கிடைக்கும். பாரின் ஒரு ஓரத்தில் மட்டும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி இரண்டரை அடி இடைவெளி இருக்குமாறு நாற்று நடவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 9,000 நாற்றுகள் நடவு செய்யலாம். 15 மற்றும் 35-ம் நாள் ஒரு கைப்பிடி செறிவூட்டப்பட்ட எருவுடன், எண்ணெய் நீக்கப்படாத வேப்பங்கொட்டை தூள் 50 கிராம் கலந்து, ஒவ்வொரு செடிக்கும் வேர்ப் பகுதியில், நான்கு விரற்கடை தள்ளித் தூவ வேண்டும். இது வேர்மீது நேரடியாகப் படக் கூடாது. 20-ம் நாள் மஞ்சள் பூச்சிகள் தென்படும். அதனை நசுக்கி அப்புறப்படுத்திவிட்டு, 130 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டிக் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் கொண்டைப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, 10 இடங்களில் பானைகளில் ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைத்தூளைத் தண்ணீரில் கலந்து வைக்க வேண்டும்.

பூப்பூக்கத் தொடங்கியதும் 130 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். தேவைக்கு ஏற்பக் களை எடுக்க வேண்டும். செடிகள் எப்போதும் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் இருக்க, நடவிலிருந்து நான்காவது வாரம், 130 லிட்டர் தண்ணீரில் 3.5 லிட்டர் பஞ்சகவ்யா, 1 கிலோ சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். 5-ம் வாரம் 130 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளிக்க வேண்டும். 6-ம் வாரம் 130 லிட்டர் தண்ணீரில் 2.5 லிட்டர் மீன் அமிலம், 7-ம் வாரம் 130 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 8-ம் வாரம் 130 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் தேமோர் கரைசல், 7.5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி, 1.5 லிட்டர் மீன் அமிலம் என வாரந்தோறும் ஏதேனும் ஒரு கரைசலை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். கத்திரிச் சாகுபடியில் பூச்சி நோய்த்தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், வரும் முன் காப்போம் நடவடிக்கை மிகவும் அவசியமானது.

கொண்டைப்பூச்சித் தாக்குதல்!

“நாற்று நடவு செஞ்ச அடுத்த சில வாரங்கள்ல கொண்டைப்பூச்சித்தாக்குதல் ஏற்படும். இப்பூச்சித் தாக்கிய கிளைகளை ஆரம்பத்துலயே கண்டறிஞ்சு, அப்புறப் படுத்திடணும். ஏக்கருக்கு 10 இடங்கள்ல மண்பானையைப் புதைச்சி, தண்ணி ஊத்தி, ஒரு பானைக்கு 150 கிராம் ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிராம் வேப்பம்கொட்டைத்தூளைக் கலந்து வெச்சிடுவோம். இதோட வாசனையால கொண்டைப்பூச்சிகள் ஈர்க்கப்பட்டு, பானைக்குள் விழுந்து செத்துடும்” என்கிறார் இமானுவேல்.

நானே செய்த கவர்ச்சிப்பொறி!

‘‘இந்தப் பகுதியில் கத்திரியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இலையில பச்சையத்தைச் சாப்பிடுறதுனால, செடி பழுப்பு நிறத்துக்கு மாறிடும். சாயங்காலம் 6 மணியிலிருந்து 9 வரைக்கும்தான் இதோட தொல்லை இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, 4 அடி நீளம் 3 அடி அகலத்துக்குத் தகரப் பலகையைத் தயார் செஞ்சி, விளக்கெண்ணெயைத் தடவி வெச்சிருக்கேன். இதுல 100 வாட்ஸ் பல்பு பொருத்தியிருக்கேன். இதுக்குக் கீழே, ஒரு பாத்திரத்துல சோப்புத்தூளைத் தண்ணில கரைச்சி வெச்சிருக்கேன். சாயந்தரம் 6 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் பல்பு எரியவிடுவோம். இதோட வெளிச்சத்தால, வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட இன்னும் பல பூச்சிகள் வந்து, பலகையில் உட்கார்ந்து ஒட்டி, செத்துப்போயிடும். சில பூச்சிகள் சோப்பு தண்ணியில விழுந்து செத்துப்போயிடும். தோட்டம் முழுக்க வெளிச்சம் படக்கூடிய வகையில, இந்தப் பலகையை அமைச்சிருக்கேன். இது மிகப்பெரிய அளவுல கைக்கொடுக்குது. 3 நாளைக்கு ஒரு தடவை விளக்கெண்ணெய் தடவிக்கிட்டே இருப்போம்.

தோட்டம் முழுக்க 10 இடங்கள்ல, மஞ்சள் நிறப் பசை அட்டை அமைச்சிருக்கோம். ஆனாலும் கூட அதைவிட, பல்பு வெளிச்சத்துக்கு வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகள் அதிகமாகக் கட்டுப்படுது” என்கிறார் இமானுவேல்.

கத்திரியில் மிகப்பெரும் சவாலே வேர்ப்பூச்சிதான்!

“கத்திரிச் சாகுபடியில் வேர்ப்பூச்சித்தாக்குதலைச் சமாளிக்குறது ரொம்பக் கஷ்டம். இதுக்கு பயந்தே, விவசாயிகள் கத்திரிச் சாகுபடியை அதிகமாக விரும்புறதில்லை. ஆனால், என்னோட கத்திரிச் செடிகள்ல வேர்ப்பூச்சித்தாக்குதல் அதிகமா இல்லை. ஏதாவது, ஒரு செடியில தென்பட்டாலே, தலா 250 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, பெருங்காயத்தூள், வசம்புத்தூள், மஞ்சள்தூள் இந்த ஐந்தையும் 1,000 லிட்டர் தண்ணியில கலந்து வேர்ப்பகுதிகள்ல ஊத்துவோம். இதன்மூலம் வேர்ப்பூச்சித்தாக்குதலை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியுது” என்கிறார் இமானுவேல்.

இன்னைக்கு 60 ரூபாய்!

மானுவேலுவிடம் செவந்தம்பட்டி கத்திரி கொள்முதல் செய்யும் கூடை வியாபாரியான மகாலிங்கத்திடம் ஆகஸ்ட் 4-ம் தேதி பேசியபோது, “கடந்த நாலு நாள் திருக்காட்டுப்பள்ளி சந்தையில நாட்டுக்கத்திரி கிலோ 50-60 ரூபாய் வரைக்கும் விலை போயிக்கிட்டு இருக்கு. இன்னைக்கு 60 ரூபாய். ஆனால் நான், விவசாயி இமானுவேலுக்கிட்ட கிலோ 20 ரூபாய்க்கு கொள்முதல் செஞ்சி, மக்கள்கிட்ட 40 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இது கெமிக்கல் இல்லாத நாட்டுக்கத்திரிங்கிறதுனாலயும், மார்க்கெட்டைவிடப் பெரும்பாலும் விலை குறைவாக இருக்குறதுனாலயும் சுற்றுவட்டார வீடுகள்ல நிரந்தரமாக எங்ககிட்ட வாங்கிக்கிறாங்க. மார்க்கெட்ல வாங்குற காய் இந்தளவுக்குப் பிரஷ்ஷா இருக்காது. வீடு தேடி போயி கொடுக்குறதுனாலயும், இதை அதிகமாக விரும்புறாங்க. மார்க்கெட்ல விலை ஏறினாலும் இறங்கினாலும், நாங்க 20 ரூபாய்னு கொள்முதல் பண்ணி, 40 ரூபாய்னு விற்பனை செய்றோம். எப்பயாவது ஒரு சில சமயங்கள்ல மட்டும் 5 ரூபாய் கூடும், குறையும்” என்றார்.

செங்கல் காலவாசல் சாம்பல்

“சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், செம்பேன் மற்றும் ஒட்டுண்ணிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, செங்கல் காலவாசலில் எரியூட்டப்பட்ட சாம்பலைப் பயன்படுத்துறோம். மண்பானைகள் எரியூட்டப்பட்ட சாம்பலையும் இதுக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் அடுப்பெரிக்கும்போது கிடைக்கக்கூடிய சாம்பலைவிட இதுக்குதான் வீரியம் அதிகமாக இருக்கு. காரணம் மண்ணோடு சேர்ந்து எரிக்கப்பட்ட சாம்பலாக இருக்குறதால, இதுக்கு பலன் அதிகமாக இருக்கு. நாற்று நடவு செஞ்சதுல இருந்து 30, 50 மற்றும் 80-ம் நாள்கள்ல ஏக்கருக்கு 50 கிலோ வீதம் இந்தச் சாம்பலைப் பரவலாகத் தூவணும்” என்கிறார் இமானுவேல்.

செறிவூட்டப்பட்ட எரு

மாட்டு எரு 250 கிலோ, ஆட்டு எரு 150 கிலோ, நகராட்சிக் குப்பையில் மறுசுழற்சி செய்து தயார் செய்யப்பட்ட நுண்ணுரம் 250 கிலோ, 150 கிலோ மண்புழு உரம்... இவற்றோடு 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து, நன்கு கிளறிவிட்டு, 15 நாள்கள் நிழலில் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட எரு தயாராகிவிடும். தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் இமானுவேல்.