Published:Updated:

12 சென்ட்... ஆண்டுக்கு ரூ.3,60,000 லாபம்! - நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கோழிக் குஞ்சுகள்!

கோழிகளுடன் ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுடன் ஜெயராமன்

கால்நடை வளர்ப்பு

12 சென்ட்... ஆண்டுக்கு ரூ.3,60,000 லாபம்! - நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கோழிக் குஞ்சுகள்!

கால்நடை வளர்ப்பு

Published:Updated:
கோழிகளுடன் ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுடன் ஜெயராமன்

ஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் கோவில்வெண்ணிக்கு அருகில் உள்ள சேருமா நல்லூரைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், நாட்டுக்கோழிகள் மற்றும் குஞ்சுகள் உற்பத்திமூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். குறைந்த இடத்திலும் அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்ய முடியும் என்பதைத் தனது தனித்துவமான தொழில்நுட்பம் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். கோழிக்குஞ்சு களுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த ஜெயராமன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 12-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டு இருக்கும்போதே, வயலுக்குப் போயி அப்பாவுக்குத் துணையாக வேலைகள் பார்ப்பேன். பள்ளிப் படிப்பு முடிச்ச பிறகு, கொஞ்ச நாள் விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டேன். ஆனால், அதுல உழைப்புக்கேத்த லாபம் இல்லாததுனாலயும், குடும்பச் சூழ்நிலைனாலயும் வெளியில் வேலைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. எனக்கு இயந்திரவியல் துறையில் ஆர்வம் அதிகம். பெங்களூருல பொக்லைன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையில 6 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, திருப்பூர்ல நண்பர்களோடு சேர்ந்து சாயப் பட்டறைக்கான தொட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தினேன்.

கோழிகளுடன் ஜெயராமன்
கோழிகளுடன் ஜெயராமன்

சில தனிப்பட்ட காரணங்களால், சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். இதுக்கிடையில தஞ்சாவூர்ல உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தோட தொடர்பு ஏற்பட்டுச்சு. அங்க வேலைபார்த்த பேராசிரியர்கள் நாகூர் மீரான், மூலிகை கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி போன்ற சிலரின் வழிகாட்டு தல்கள், கோழி வளர்ப்பைத் தொடங்க காரணமா இருந்துச்சு. அது இப்ப வரைக்கும் எனக்குத் துணையா இருக்கு’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

மீன், வான்கோழி

‘‘ஊர் பொதுக்குளத்தை ஏலம் எடுத்து 7 வருஷம் மீன் வளர்ப்புல ஈடுபட்டேன். நல்ல லாபம் கிடைச்சது. ஆனாலும், சில பிரச்னைகளால், அதைக் கைவிட்டுட்டேன். 1997-லயிருந்து 2012-ம் வருஷம்வரைக்கும் வான்கோழிகள் வளர்த்தேன். அதுவும் எனக்கு லாபகரமாகத்தான் இருந்துச்சு. 300 கோழிகள்ல ஆரம்பிச்சது, படிபடியாக அதிகரிச்சி, 1,000 கோழிகளுக்கு மேல பெருகிடுச்சு. இடைத்தரகர்கள், வியாபாரி களை மட்டுமே அதுல சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். அவங்களோட ஏற்பட்ட சில பிரச்னைகளால், வான்கோழி வளர்ப்புல தொடர்ந்து நீடிக்க முடியல.

குத்தகை குளத்துல மீன் வளர்த்தது, வியாபாரிகளை நம்பி வான்கோழி வளர்த்தது... இந்த ரெண்டு அனுபவமும் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திச்சு. மிகத் தெளிவா, தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட உறுதுணையா இருந்துச்சு. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் இயன்ற வரைக்கும் சொந்த இடத்துலதான் செய்யணும். அந்தத் தொழில், வியாபாரி களைச் சார்ந்ததாகவும் இருக்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். இதுக்கு நாட்டுக் கோழி வளர்ப்புதான் ஏற்றதுனு முடிவெடுத்து, 2012-ல இருந்து இதைச் செஞ்சிக்கிட்டு இருக்கேன்’’ என்றவர் கோழிக்கொட்டகை யைச் சுற்றிக்காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.

ஒரு தாய்க்கோழி மூலமாக 45 நாள்களுக்கு ஒரு தடவை, குறைந்தபட்சம் 12 முட்டைகள் வீதம் வருஷத்துக்கு 96 முட்டைகள் கிடைக்குது.


‘‘என்னோட வீடு, கோழிக்கொட்டகை, தோட்டம் எல்லாமே ஒருங்கிணைஞ்சு இருக்குற மாதிரி அமைச்சிருக்கேன். இது எல்லாமே சேர்த்து மொத்தம் 12 சென்ட் தான். சுமார் ஒரு சென்ட்ல வீடு, 10 அடி அகலம், 20 அடி நீளத்துல கொட்டகை, மீதி பரப்புல தோட்டம் அமைஞ்சிருக்கு.

50 தாய்க்கோழிகள்

பெருவிடை மற்றும் சிறுவிடை ரகங்களில் 50 தாய்க்கோழிகள், 5 சேவல் வளர்க்குறேன். இரவு நேரங்கள்ல மட்டும் கொட்டகைக்குள்ளார அடைச்சி வெச்சிருப்பேன். பகல் நேரங்கள்ல மேய்ச்சலுக்கு விடுவேன். என்னோட தோட்டம் சின்னதா இருக்குறதுனால, பெரும்பாலும் சுற்றுவட்டார பகுதிகள்ல வெளி மேய்ச்சலுக்குப் போயிட்டு, இருட்ட ஆரம்பிச்சதும் தானாகவே கொட்டகையில் வந்து அடைஞ்சிடும்.

கோழிகளுடன் ஜெயராமன்
கோழிகளுடன் ஜெயராமன்


தாய்க்கோழிகள் முட்டையிட்டதும், அதை எடுத்து இங்குபேட்டர்ல வெச்சுதான் குஞ்சுகள் பொரிச்சி எடுக்குறோம். ஒரு தாய்க்கோழி மூலமாக 45 நாள்களுக்கு ஒரு தடவை, குறைந்தபட்சம் 12 முட்டைகள் வீதம் வருஷத்துக்கு 96 முட்டைகள் கிடைக்குது. 50 தாய்க்கோழிகள் மூலம் 4,800 முட்டைகள் கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தால் மாசம் 400 முட்டைகளை இங்குபேட்டர்ல வெச்சி குஞ்சுகள் பொரிச்சி எடுக்குறோம். கரு வளர்ச்சி அடையாத முட்டை, கரு சிதைவுற்ற முட்டைகள் நீங்கலாக, 80 சதவிகிதம் பொரிப்புத்திறனோடு 320 குஞ்சுகள் கிடைக்கும்.

இதைத்தவிர, சுற்றுவட்டார கிராமங்கள்ல உள்ள விவசாயிகள்ட்ட இருந்தும் முட்டைகள் வாங்கி பொரிக்கிறேன். மேய்ச்சல்ல வளர்க்கக்கூடிய நாட்டுக்கோழிகள்ல இருந்து கிடைக்குற முட்டைகளை மட்டும்தான் வாங்குவேன். முட்டையிட்ட அடுத்த ஒரு மணிநேரத்துக்குள்ள அதை எடுத்துப் பிரிட்ஜ்ல வெச்சிருக்கணும். அதிகபட்சம் 10 நாள்களுக்குள் அதை வாங்கிக்கிட்டு வந்து பொரிப்பான்ல வெச்சாதான், அந்த முட்டையில் பொரிப்புத்திறன் இருக்கும். ஒரு முட்டைக்கு 12 ரூபாய் வீதம் விலை கொடுத்து, மாசத்துக்கு 800 முட்டை இப்படி வாங்கி, இங்குபேட்டர்ல பொரிச்சி எடுக்குறேன். இதுல 60 சதவிகிதம்தான் பொரிப்புத்திறன் இருக்கும். 480 குஞ்சுகள் கிடைக்கும். ஆக, என் பண்ணையில 320, வெளியில வாங்குறதுல 480னு மாசத்துக்கு மொத்தம் 800 குஞ்சுகள் கிடைக்கும். இதுல 750 குஞ்சுகள் பிழைப்புத்திறனோடு விற்பனைக்குத் தேறி வரும்’’ என்றவர், தனது கூண்டு வளர்ப்புமுறை பற்றி விவரித்தார்.

கோழிகளுடன் ஜெயராமன்
கோழிகளுடன் ஜெயராமன்


கூண்டு முறை

‘‘என்னோட கொட்டகையில் 200 சதுர அடிதான் இடம் இருக்கு. குஞ்சுகளையும் தாய்க்கோழிகளையும் ஒண்ணா விட முடியாது. இடப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், குஞ்சுகளை எளிதாக இடம் மாற்றி, கொட்டகையை அவ்வப்போது சுத்தப்படுத்தி, தூய்மையாகப் பராமரிக்குற துக்காகவும், நானே என்னோட முயற்சியில பிரத்யேகமான கூண்டுகளை உருவாக்கி, அதுலதான் குஞ்சுகளை வளர்க்குறேன். வயசுக்கு ஏற்ற மாதிரி குஞ்சுகளைத் தனித்தனி கூண்டுகள்ல பிரிச்சி வளர்க்கவும் இது உதவியாக இருக்கு. பெரிய குஞ்சுகளையும் சின்னக் குஞ்சுகளையும் ஒண்ணா விட்டால், சின்னக் குஞ்சுகளுக்குத் தீவனம் கிடைக்காமல் போயிடும். கூண்டுகள்ல குஞ்சுகள் வளர்க்குறது சிறப்பானது. இயந்திரவியல் தொழில்நுட்பத்துல எனக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்குறதுனால, இது கைகூடி யிருக்கு. சதுர, செவ்வக வடிவ கூண்டுகள்ல கோழிக் குஞ்சுகளை வளர்த்தோம்னா, அது எல்லாம் கூட்டமாக மூலைகள்ல அடைஞ்சி இறப்புகள் ஏற்படும். வட்ட வடிவம், நீள் வட்ட வடிவ கூண்டுகளாக இருந்தால் அதுமாதிரியான பாதிப்புகள் ஏற்படாது’’ என்றவர் விற்பனை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு


மாதம் ரூ.30,000

‘‘ஒருநாள் வயசுடைய குஞ்சு 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதற்கு மேற்பட்ட வயசுடைய குஞ்சுகளை, ஒரு நாளுக்கு 2 ரூபாய் வீதம் விலை கூட்டி விற்பனை செய்றேன். உதாரணத்துக்குச் சொல்ல ணும்னா, 10 நாள்கள் வயசுடைய குஞ்சு 80 ரூபாய்னு விற்பனைச் செய்றேன். அதிக பட்சம் 15-30 நாள்கள் வயசுல விற்பனை செஞ்சிடுவேன். அதுக்கு மேல வெச்சிக்கிட்டா, குஞ்சுளோட எண்ணிக்கை பெருகிக்கிட்டே போயிடும், பராமரிப்புல பல சிரமங்கள் ஏற்படும். 750 குஞ்சுகள்ல 500 குஞ்சுகளைப் பெரும்பாலும் ஒருநாள் வயசுலயே விற்பனை செஞ்சிடுவேன்.

ஒரு குஞ்சுக்கு 60 ரூபாய் வீதம், 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதியுள்ள 250 குஞ்சுகளுக்குத் தலா 100 ரூபாய் வீதம் 25,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆகமொத்தம் ஒரு மாசத்துக்கு 55,000 வருமானம். இதுல தீவனம், மின்சாரம், மருத்துவச் செலவு எல்லாம் போக, 30,000 ரூபாய் லாபமாகக் கையில் மிஞ்சும். வருஷத்துக்கு 3,60,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு,

ஜெயராமன்,

செல்போன்: 99947 09294.

தோட்டத்தில் புழுப் பூச்சிகளை உருவாக்குதல்

தோட்டத்தில் நிழல் பாங்கான இடத்தில் வைக்கோல், இலைதழைகளைப் போட்டு, அதன்மேல் ஈர சாணத்தையும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நிறைய புழுப் பூச்சிகள் உருவாக்கிடும். கோழிகள் அதை விரும்பிச் சாப்பிடும். வெளி மேய்ச்சலிலும் அதற்குத் தேவையான உணவு கிடைத்துவிடும். நாட்டுக்கோழிகளைப் பொறுத்தவரை மேய்ச்சலுக்குப் போய்த் தீனி சாப்பிட்டால்தான் அது ஆரோக்கியமாக வளரும்.

இன்குபேட்டர்
இன்குபேட்டர்

மூலிகை மருத்துவம்

நோய் எதிர்ப்பாற்றலை அதிகப் படுத்திட்டாலே, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல், அம்மை போன்ற நோய்கள் பெரும்பாலும் வராது. கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி வழிகாட்டுதல்கள் எனக்கு ரொம்பவே உறுதுணையாக இருக்கு. முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிஞ்சி வந்த மறுநாள்ல இருந்து அடுத்த 15 நாள்கள் வரைக்கும் தினமும் சீரகத் தண்ணீர் கொடுக்குறேன். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வச்சு, நல்லா ஆறின பிறகு, இதுல அரை லிட்டர் எடுத்து, 100 குஞ்சுகளுக்குக் கொடுப்போம்.

சீரகத் தண்ணீர்ல அபரிதமான சத்துகள் இருக்கு. அது கோழிக்குஞ்சுகளோட நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதோடு, குஞ்சுளோட வளர்ச்சிக்கும் பயன்படுது. அம்மைநோய் வந்தால் 5 கிராம் மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி வேப்பிலை, 2 மிளகு, ஒரு சிறு பல் பூண்டு, 10 குப்பைமேனி இலை, ஒரு கற்பூரம் இவற்றை ஒன்றாகக் கலந்து நன்கு அரைத்து, விளக்கெண்ணெயில் சூடுபடுத்தி, நன்கு ஆறிய பிறகு, உள்மருந்தாகவும் வெளிப்பூச்சாகப் புண்களிலும் தடவலாம். குஞ்சுகளாக இருந்தால் இதில் மிளகு அளவு தர வேண்டும். பெரிய கோழி என்றால் புளியங்கொட்டை அளவு உள் மருந்தாகத் தரலாம், தினமும் இருவேளை வீதம் மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும்.

நீள் வட்ட (ஓவல்) வடிவ கூண்டு

நீள் வட்ட (ஓவல்) வடிவ கூண்டு
நீள் வட்ட (ஓவல்) வடிவ கூண்டு


“3 அடி அகலம், 6 அடி நீளம், 1.5 அடி உயரத்துல இந்தக் கூண்டை வடிவமைச்சிருக்கேன். இதுலயும் மூலைகள் கிடையாது. இதுல 1 - 15 நாள்கள் வயதுடைய 250 குஞ்சுகள் வளர்க்கலாம். வட்ட வடிவ கூண்டு, நீள் வட்ட வடிவ கூண்டு எதுவாக இருந்தாலும், அரையடி உயரத்துக்குச் சுற்றிலும் பிளாஸ்டிக் சீட் அல்லது இரும்பு தகரம் வெச்சி அடைக்குறது ரொம்ப முக்கியம். குளிரைத் தாங்கவும், மற்ற உயிரினங்களால் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவும் இது அவசியம். எக்காரணம் கொண்டும், சணல் அல்லது பாலித்தீன் சாக்குகளை இதற்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால், கோழிக்குஞ்சுகள் அதைக் கொத்திச் சாப்பிட்டு உயிருக்கே ஆபத்து நேரிடும்” என்கிறார் ஜெயராமன்.

நீள் வட்ட அடுக்குக் கூண்டு

நீள் வட்ட அடுக்குக் கூண்டு
நீள் வட்ட அடுக்குக் கூண்டு


“இந்தக் கூண்டின் ஒட்டுமொத்த உயரம் 5 அடி. இதன் நீளம் 4 அடி, அகலம் 2 அடி. இதுல மூன்று அடுக்குகள் இருக்கு. ஒவ்வோர் அடுக்கும் 1.5 அடி உயரம். ஓர் அடுக்குக்கும் இன்னோர் அடுக்குக்கும் கால் அடி இடைவெளி இருக்கு. ஒவ்வோர் அடுக்குக்கும் கீழே டிரே இருக்கு. இதுல பிளாஸ்டிக் சீட்டைப் போட்டு, அதுல பேப்பரைப் போட்டு வச்சிடுவேன். எச்சங்களைச் சுத்தப்படுத்த இது வசதியாக இருக்கு. ஒவ்வோர் அடுக்குலயும் 1 - 7 நாள்கள் வயசுடைய 100 குஞ்சுகள் வளர்க்கலாம். இந்த அடுக்கு முறை நீள் வட்டக் கூண்டில் மொத்தம் 300 குஞ்சுகள் வளர்க்கலாம். ஒவ்வோர் அடுக்குலயும் நம்மோட தேவைக்கு ஏற்பத் தனித்தனியாக வெவ்வேறு வயசுகள்ல குஞ்சுகளை வளர்க்கலாம். ஏற்கெனவே சொன்னதுபோல் இந்தக் கூண்டிலும் ஒவ்வோர் அடுக்கிலும் அரையடி உயரத்துக்குத் தகரம் அல்லது பிளாஸ்டிக் சீட் கொண்டு அடைப்பு ஏற்படுத்த வேண்டும். இந்த மூன்று வகையான கூண்டுகளிலுமே மின் பல்பு பொருத்தி, புரூடராகப் பயன்படுத்துகிறோம். குஞ்சுகளுக்கு வெப்பம் முக்கியம்” என்கிறார் ஜெயராமன்.

வட்ட வடிவ கூண்டு

வட்ட வடிவ கூண்டு
வட்ட வடிவ கூண்டு


4 அடி சுற்றளவு, 1.5 அடி உயரத்துல இதை வடிவமைச்சிருக்கேன். சுற்றுப்பகுதி மற்றும் மேல் பகுதிக்கு, அரை இன்ச் இடைவெளி கொண்ட கம்பிவலையும், கூண்டின் அடிப்பகுதிக்குக் கால் இன்ச் இடைவெளி கொண்ட கம்பிவலையும் பயன்படுத்தியிருக்கேன். இதுல கோழிக் குஞ்சுகள் நிக்க முடியும், நடக்க முடியும். கால்கள் மாட்டாது. இந்தக் கூண்டில் 1-10 நாள்கள் வயசுடைய 125 குஞ்சுகள் வளர்க்கலாம். 10 - 20 நாள்கள் வயசுடைய குஞ்சுகளாக இருந்தால் 80 குஞ்சுகள் வளர்க்கலாம். அதற்கு மேற்பட்ட குஞ்சுகளாக இருந்தால், 50 குஞ்சுகள் வளர்க்கலாம். இது மாதிரி கம்பி வலையைக் கூண்டில் அமைச்சோம்னா, காற்றோட்டமும் கிடைக்கும். இந்தக் கூண்டின் அடிப்பகுதிக்குக் கீழே நாலு முனைகள்லயும் அரையடி உயரத்துக்குக் கால்கள் அமைச்சிருக்கேன். ஒரு கூண்டின் மேல் இன்னொரு கூண்டை அடுக்கி வைக்க இது உதவியாக இருக்கும். அதிகபட்சம் மூன்று கூண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம். ஒவ்வொரு கூண்டின் மேல் பகுதியிலும் பிளாஸ்டிக் சீட்டைப் போட்டு, அதுல ஒரு பேப்பரை போட்டு வச்சிட்டோம்னா, கோழிக்குஞ்சுகளோட எச்சம் அதுல விழுந்துடும். கூண்டு சுகாதாரமாக இருக்கும். தேவைக்கேற்ப, பேப்பரை எடுத்து அப்புறப்படுத்திட்டு, புது பேப்பர் போட்டுக்கலாம். என்கிட்ட இப்ப வட்ட வடிவ கூண்டு இரண்டு இருக்கு. 2012-ம் வருஷம் இந்தக் கூண்டுகளைச் செஞ்சேன். ஒரு கூண்டு செய்ய 4,500 ரூபாய் செலவாச்சு” என்கிறார் ஜெயராமன்.