Published:Updated:

வறட்சியிலும் வருமானம் கொடுக்கும் நாட்டு வேம்பு!

வளர்ந்து நிற்கும் வேப்ப மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ந்து நிற்கும் வேப்ப மரங்கள்

சூழல் காடு

மிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத உறவாக இருக்கிறது வேப்ப மரம். தமிழ்நாட்டின் பாரம்பர்ய மரங்களில் முதன்மையானதாக இருக்கும் இதன் இலை, காய், பூ, பட்டை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால்தான் இதைத் தெய்வமாகப் போற்றிப் பாதுகாத்துள்ளனர் முன்னோர்கள். வேம்பின் காற்றை சுவாசித்தாலே நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். விதைகள் தானாக மண்ணில் விழுந்து, பெரும் விருட்சமாக உருவெடுத்த வேப்ப மரங்கள் ஏராளம். குறிப்பாக நாட்டு வேம்பு, வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கை இடர்ப்பாடுகளிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வரும் நிலையில், இயற்கைப் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தக்கூடிய வேப்பங்கொட்டை, வேப்பெண்ணெய், வேப்பம் பிண்ணாக்கு போன்ற பொருள்களுக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை. மற்ற மரங்களைத் தனித் தோப்பாகச் சாகுபடி செய்யும் விவசாயிகள், வேம்புச் சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும், சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட சிலர், வேம்பு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கருப்பையா
கருப்பையா

புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் நார்த்தாமலைக்கு அருகில் அமைந்துள்ளது தக்கிரிப்பட்டி. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும், விவசாய நிலங்கள் வறண்டுபோய்த் தரிசாகக் கிடக்கின்றன. ஆங்காங்கே வேலிக்கருவை, தைல மரங்கள். இவற்றிற்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது கருப்பையாவின் வேப்பந்தோப்பு. இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

ஒரு விடுமுறை நாளில் நாம் அங்கு சென்றோம். வேப்ப மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கருப்பையா, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘எனக்கு இதுல லாப நோக்கம் கிடையாது. புவி வெப்பமயமாதலைத் தடுத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்கவும்தான் இந்த வேப்பமரக் குறுங்காட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வறட்சியிலும் வருமானம் கொடுக்கும் நாட்டு வேம்பு!

எங்களுக்குப் பூர்வீக நிலம் ரெண்டு ஏக்கர் இருக்கு. அப்பா காலத்துல முப்போகம் விளைச்சல் கொடுத்த பூமி. அப்பெல்லாம், பக்கத்துல இருக்கக்கூடிய ஏரி, குளத்துல இருந்து பாசனத்துக்குத் தண்ணி கிடைக்கும். கிணத்துப் பாசனம் மூலமும் பயிர் செஞ்சோம். இப்போ ஏரி, குளங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புனால தூர்ந்துபோயிருச்சு. அதனால, இங்க இருக்குற விவசாயிகள் நிலங்களைப் பத்து, பதினஞ்சு வருஷமா பயிர் செய்யாம சும்மாதான் போட்டு வெச்சிருக்காங்க. சிலர் தைல மரங்களைப் பயிர் செஞ்சிருக்காங்க. அது தன் பங்குக்கு, காற்றின் ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சிடுச்சு. இப்போ நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போயிருச்சு.

இதைப்போய் தனிப்பயிராக யாராவது சாகுபடி செய்வாங்களான்னு கேலி செஞ்சாங்க. கிலோவுக்கு 50 ரூபாய் வீதம், 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஆழ்துளைக் கிணத்துல தண்ணீர் இல்லைங்கிறதனால, நானும் சில வருஷங்கள் சும்மாதான் நிலத்தைப் போட்டு வெச்சிருந்தேன். சும்மா கிடக்கிற நிலத்தைப் பார்க்கிறதுக்கே கஷ்டமா இருக்கும். அதனால, இந்தப் பக்கம் வராமலே இருந்தேன். இந்தச் சூழ்நிலையில ஒருநாள், இதை நாம இப்படியே சும்மா போட்டு வைக்கக் கூடாது. சுற்றுச்சூழல் ஆரோக்கியமா இருக்கணும், பறவைகள் கூடுகட்டி வாழணும். பசுமையா இருக்கும் தோட்டத்தைப் பார்த்து நாம சந்தோஷப்படணும்னு தோணுச்சு. உடனே, இந்த ரெண்டு ஏக்கர்ல, நாட்டு வேம்பை நடவு செய்ய முடிவு செஞ்சேன். இதை நான் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம், இது குறைவான தண்ணியிலயே வளரக்கூடியது. நாம தண்ணி கொடுக்கலைனாலும் நாட்டு வேம்பு பட்டுப் போகாது. அதிக ஆழத்துல தண்ணி இருந்தாலும், இதன் ஆணிவேர் அதை உறிஞ்சிக்கும். நான் நாட்டு வேம்புச் சாகுபடி செய்யப்போறேன்னு சொன்னதும், எங்க ஊர்க்காரங்க, கிண்டல் பண்ணிச் சிரிச்சாங்க. ‘இதைப்போயி தனிப்பயிரா யாராவது சாகுபடி செய்வாங்களான்னு கேலி செஞ்சாங்க. ஆனா, நான் அதைப்பத்தியெல்லாம் கவலையேபடலை. என்னோட முடிவுல தீர்க்கமா இருந்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வளர்ந்து நிற்கும் வேப்ப மரங்கள்
வளர்ந்து நிற்கும் வேப்ப மரங்கள்

இது கரிசல் மண் பூமி. மண்வளம் இல்லாம இருந்ததனால, ஏக்கருக்கு 45 டிப்பர் செம்மண் அடிச்சேன். 1 அடி நீளம், 1 அடி அகலம், ஒன்றரையடி ஆழத்துக்குக் குழி எடுத்து, கன்று நடவு செஞ்சோம். தலா 10 அடி இடைவெளியில் ரெண்டு ஏக்கருக்கு 500 மரங்கள் நடவு செஞ்சோம். 20 அடி இடைவெளி இருந்தால்தான் மரம் நல்லா பெருத்து, அதிக விலை கிடைக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, நான் அதை விரும்பலை. குறுகிய இடைவெளியில் அதிக மரங்களை வளர்த்தால்தான், குறுங்காட்டை உருவாக்கி, குளிர்ச்சியான காற்றை வரவெச்சு, மழையை ஈர்க்க முடியும். கன்று நடவு செஞ்ச அன்னிக்குத் தண்ணி கொடுத்தோம். மூணு நாள் கழிச்சி உயிர்த் தண்ணி கொடுத்தோம். ஆழ்துளைக் கிணற்றுல 430 அடி ஆழத்துலதான் தண்ணி இருக்கு. இதனால, ரொம்ப மெதுவாகத்தான் தண்ணி கிடைக்கும். தினமும் 15-20 மரங்களுக்குத்தான் பாய்ச்ச முடியும். மறுபடியும் அதே மரங்களுக்குத் தண்ணி கொடுக்க, ஒரு மாசம் ஆகும். இப்படிச் சுழற்சி முறையிலதான் தண்ணி பாய்ச்சிட்டு இருக்கேன்.

‘‘வேம்பு நடவு செஞ்ச ரெண்டாவது வருஷத்துல இருந்தே காய்கள் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் காய்களை மண்ணை வளப்படுத்துறக்காகவும், பறவைகள் சாப்பிடுறதுக்காகவும் வேப்பம் பழங்களை நிலத்துலயே விட்டுட்டேன்.’’

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு முடிவுல, ஒரு மரத்துக்கு 10 கிலோ வீதம், மாட்டு எரு போட்டோம். அதே காலத்துல மார்கழி மாசம் அரை ஏக்கர்ல மட்டும் ஊடுபயிராகச் சின்ன வெங்காயம் சாகுபடி செஞ்சோம். வேப்பமர தூர்ப்பகுதியில வெங்காயத்தை ஊன்றினோம். அதுக்குன்னு தனியாகத் தண்ணி, இடுபொருள் எதுவும் கொடுக்காமலே முதல் தடவை 600 கிலோ மகசூல் கிடைச்சது. கிலோவுக்கு 20 ரூபாய் வீதம் 12,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ரெண்டாவது தடவை 700 கிலோ வெங்காயம் மகசூலாச்சு. 14,000 ரூபாய் வருமானம் எடுத்தேன்.

வேம்பு நடவு செஞ்ச ரெண்டாவது வருஷத்துல இருந்தே காய்கள் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, அதை நான் எடுக்கலை. மண்ணை வளப்படுத்துறக்காகவும், பறவைகள் சாப்பிடுறதுக்காகவும் வேப்பம் பழங்களை நிலத்துலயே விட்டுட்டேன். மூணு வருஷத்துக்குப் பிறகு காய்ப்பு அதிகமாயிடுச்சி. நாலாவது வருஷம் வேப்பம் பழங்களைப் பொறுக்கி, தண்ணியில ஊற வெச்சி, விதைகளைத் தனியாகப் பிரிச்செடுத்தோம். ரெண்டு ஏக்கருக்கும் சேர்ந்து ஒரு டன் விதை கிடைச்சது. கிலோவுக்கு 45 ரூபாய் வீதம் 45,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்த வருஷம், 1,200 கிலோ விதை கிடைச்சது. கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. கஜா புயல் பாதிப்பினால், மகரந்தச் சேர்க்கை ஒழுங்கா நடக்கலை. அதனால, இந்த வருஷம் காய்ப்பு இல்லை. இனிமேல் அடுத்தடுத்த வருஷம் மகசூல் அதிகமாகிக்கிட்டே இருக்கும். ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 30,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். இதுல எங்களுக்குச் செலவே இல்லை. பெரிய வேலையுமில்லை” என்றவர் நிறைவாக,

இது பறவைகளுக்கான வீடு

“எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் லாபம் பார்க்கிறதே பெரிய காரியம். வேப்பம் பூ, பட்டை எல்லாத்துக்குமே விற்பனை வாய்ப்பு அதிகமா இருக்கு. ஆனா, நான் அதைச் செய்யமாட்டேன். இதுல நான் வருமானத்தை எதிர்பார்க்கவே இல்லை. கஜா புயல்ல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ஞ்சிடுச்சு. இதனால, பறவைகளோட வாழ்விடங்கள் அழிஞ்சிடுச்சி, இங்க பறவைகள் வாழ்வதற்கான சூழலே இப்ப இல்லை. என்னோட வேப்பந்தோப்பு குறுங்காடாக மாறி, பறவைகள் இங்க வந்து கூடுகட்டி வாழணுங்கறதுதான் என்னுடைய ஆசை” என்றார்.

தொடர்புக்கு, கருப்பையா, செல்போன்: 63802 48548.