Published:Updated:

மாதம் ரூ. 27,000... கைகொடுக்கும் கறவைமாடு வளர்ப்பு!

ஞானமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானமூர்த்தி

கால்நடை

ழைகளின் ஏ.டி.எம் என்று அழைக்கப்படுவது கறவை மாடுகள்தான். அந்தளவுக்கு விவசாயிகளின் அன்றாடச் செலவிற்குக் கைகொடுத்து வருகிறது.

இன்றைக்கும் கிராம பொருளாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதில் கறவை மாடுகளுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கறவை மாடுகள் பராமரிப்பு அதிக அளவில் உள்ளன. இதனால் பால் உற்பத்தியிலும் அந்த மாவட்டங்கள் முன்னணியில் இருக்கின்றன.

கறவை மாடுகளுடன் மணி
கறவை மாடுகளுடன் மணி

கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாலம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவரிடம் கறவை மாடு வளர்ப்புக் குறித்துப் பேசினோம். அவர், “ஆரம்பத்தில வெள்ளாடு வளர்ந்து வந்தேன். பஞ்சாயத்துத் துணை தலைவராக ஆன பிறகு வெள்ளாடு பராமரிக்கிறதுக்குச் சிரமமா இருந்துச்சு. அதனால கறவை மாடு வளர்ப்புக்கு மாறினேன். முதல்ல ரெண்டு கலப்பின ஜெர்ஸி மாடுகள வளத்துட்டு வந்தேன். இப்போ ரெண்டு ஜெர்ஸி, ஒரு ஹெச்.எஃப், 2 கன்றுகள், ஒரு எருது இருக்கு. 30 சென்ட்ல பசுந்தீவனம் வளர்த்துட்டு வர்றேன். சுழற்சி முறையில எப்பவும் 15 லிட்டர் பால் ஊத்திட்டு இருக்கிறபடி மாடுகள பராமரிச்சிட்டு வர்றேன். தனியார் நிறுவனத்துக்குத்தான் பால் ஊத்திட்டு வர்றேன். தனியார்ல கொழுப்புச்சத்து, புரதச்சத்து (எஸ்.என்.எஃப்) இருக்கிறத முக்கியமா பார்ப்பாங்க. அந்த வகையில ஜெர்ஸி மாடுகள்ல கொழுப்பு, புரதச்சத்து நல்லாவே கிடைக்கும். ஆனா, பால் அதிகம் கறக்காது. ஜெர்ஸியை ஒப்பிடும்போது ஹெச்.எஃப் மாடுகள் பால் கூடுதலாக இருக்கும். ஜெர்ஸி மாடுகள் சராசரியாக ஒரு வேளைக்கு 8 லிட்டர் வரை பால் கறக்கும். ஹெச்.எஃப் மாடுகள் சராசரியாக 12 லிட்டர் வரை கறக்கும். ஆனா, கொழுப்புச்சத்து, புரதச்சத்து குறைவாக இருக்கும். இரண்டு பாலையும் கலந்து ஊத்தும்போது ஒரு சராசரி கொழுப்புச்சத்து, புரதச்சத்து கிடைத்துவிடும் பாலின் அளவும் அதிகரித்துவிடும். ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் வரை விலை கிடைக்குது. தற்போது கொரோனாவால் பாலின் விலை குறைஞ்சிருக்கு. ஒரு லிட்டர் 24 ரூபாய்க்குனு பால் ஊத்துறோம்.

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி

ஒரு நாளைக்கு 15 லிட்டர் என்ற கணக்கில் 360 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாசம் 10,800 ரூபாய் வருமானம். இதுல அடர்தீவனம் உள்ளிட்ட செலவுகள் போக 5,800 ரூபாய் லாபம். இந்த வருமானம் குறைவுதான் என்றாலும் வீட்டுக்கான செலவு, நல்லது, கெட்டது, அவசரத் தேவைனு பலதுக்கும் இந்தப் பணத்தைப் பயன்படுத்திகிறோம். நான்கு பேர் உள்ள எங்கள் வீட்டுக்கு இந்த வருமானம் முக்கியமானது” என்றவர் பராமரிப்புக் குறித்துப் பேசினார்.

தீவனப்புல்
தீவனப்புல்

“பராமரிப்புப் பெரியளவில் தேவைப்படாது. மாடுகள கட்டி தீவனம் போடுறதும், தண்ணி காட்டுறதும்தான் முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 4 கிலோ அடர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் தேவைப்படும். இதோடு வைக்கோல் சேர்த்துக் கொடுத்தால் பாலின் அடர்த்திக் கூடும். பசுந்தீவனம் பாலின் அளவை அதிகரிக்கும். ஒரு ஏக்கர் பசுந்தீவனத்தை வைத்து 10 மாடுகள் தாராளமாக வளர்க்கலாம். நான் 3 மாட்டுக்கு 30 சென்ட்டில் பசுந்தீவனத்தைப் போட்டிருக்கிறேன்” என்றார்.

காளையுடன்
காளையுடன்

ஐகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த, எம்.சி.ஏ பட்டதாரியான ஞானமூர்த்தி நான்கு மாடுகளைப் பராமரித்துப் பாலை தனியாருக்கு ஊற்றி வருகிறார். அவரது அனுபவத்தைக் கேட்போம். “எம்.சி.ஏ படிச்சிட்டு சென்னையில வேலை தேடினேன் கிடைக்கலை. பிறகு ஊருக்கு வந்து விவசாயத்தை ஆரம்பிச்சேன். இங்க ஒரு பள்ளியில பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்துக்கிட்டே விவசாயத்தோடு மாடு வளர்ப்பையும் தொடங்கினேன். இப்போ என்கிட்ட 2 ஜெர்ஸி, 2 ஹெச்.எஃப் மாடுகளும், ஒரு ஜெர்ஸி கிடேரியும் இருக்கு. ஒரு நாளைக்கு 30 லிட்டரிலிருந்து அதிகபட்சம் 50 லிட்டர் வரை பால் ஊத்தியிருக்கேன். ஒரு லிட்டருக்கு 28 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விலை கிடைக்குது. குறைந்தபட்சம் 30 லிட்டர்னு வெச்சுக்கிட்டாலும் ஒரு லிட்டர் சராசரியாக 30 ரூபாய்னாலும் ஒரு நாளைக்கு 900 ரூபாய் வருமானம். இதுல மாசத்துக்கு 27,000 ரூபாய் வருமானம். இதுல அடர்தீவனம், தவிடுனு 12,000 ரூபாய் செலவு போக மாசம் 15,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது” என்றவர் பராமரிப்பு முறைகளைப் பற்றிப் பேசினார்.

பால் கறக்கும் பணி
பால் கறக்கும் பணி

“கலப்பின மாடுகளைப் பொறுத்தவரை மடிவீக்கம், காய்ச்சல், உண்ணி, கன்று போட்டபிறகு வரும் சத்து குறைபாடு பிரச்னைகள்தான் அதிகம். மடிவீக்கத்துக்குப் பால், காம்புகள்ல தங்காம நல்லாக் கறக்கணும். கன்றுகளைப் பால் குடிக்க விடணும். காய்ச்சலுக்கு நாட்டுக்கோழி முட்டையைத் தினமும் ஒன்று வீதம் 3 நாளைக்குச் சாப்பிட வைக்கணும். அதற்கும் குணமாகலைன்னா, 3 நாளைக்குத் தினமும் ரெண்டு முள்ளங்கியைக் கொடுக்கணும். உண்ணி பிரச்னைக்கு வசம்பையும், மஞ்சளையும் கலந்து அரைச்சுப் பூசலாம். அதுக்கும் போகலைன்னா கையால பிடிங்கி எறியலாம். பிறகு, சுத்தமான இடத்தில மாடுகளைக் கட்டி பராமரிச்சுட்டு வரணும். வாரம் ஒருமுறை மாடு கட்டுற இடங்கள்ல சாம்பிராணி போட்டுட்டு வந்தா கொசுத்தொல்லை இருக்காது. கன்று போட்டபிறகு மாடுகள் இறந்துபோறது அதிகம் நடக்குது. இதற்குக் காரணம் சுண்ணாம்புச்சத்துக் குறைபாடுதான். இதற்கு 50 ரூபாய்ல தீர்வு இருக்குது. அதைச் செய்தாலே நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அரைக்கிலோ சுண்ணாம்பை வாங்கிட்டு வந்து கொதிக்குற தண்ணியில போட்டுடணும். மேலே தெளியும் நீரை எடுத்து, 8-ம் மாத சினையிலிருந்தே தினமும் ஒரு டம்ளர் கன்று போடும் வரை கொடுத்துட்டு வரணும். இப்படிக் கொடுத்துட்டு வந்தா இறப்பைக் கட்டுப்படுத்தலாம்.

அதேமாதிரி கன்று போட்ட 3 மாசத்துல மாடு சினைக்கு வந்துடும். உடனே கருவூட்டல் செய்யாம 6-ம் மாசத்துல கருவூட்டல் செய்தால், நீண்ட நாள பால் கறக்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு, ஞானமூர்த்தி, செல்போன்: 96299 03424.

சந்தை அறிந்து மதிப்புக் கூட்டலாம்!

பொதுவாகப் பால் கொள்முதல் விலை குறைவாக உள்ளது என்றே கவலைப்படுகிறார்கள் விவசாயிகள். அதுவும் இந்த கொரோனா காலத்தில் பால் கொள்முதல் இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்று சென்னை அடுத்த கொடுவேளியில் உள்ள பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை ஞானலட்சுமியிடம் பேசினோம். “பாலிலிருந்து பனீர், கோவா, ரோஸ்மில்க், ஐஸ்கிரீம், தயிர், நெய், பால் பவுடர் போன்றவற்றை மதிப்புக்கூட்டலாம். ஆனால், இவற்றை மதிப்புக்கூட்டினாலும் அதை விற்பனை செய்வதற்கான சந்தைகளெல்லாம் இன்று முடங்கியுள்ளது. பனீரை ஹோட்டல்கள்தான் அதிகம் வாங்குகின்றன. ஆனால், பெரும்பான்மையான ஹோட்டல்கள் திறக்கப்படாமலேயே இருக்கின்றன. ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் போன்ற குளிர்பதனப் பால் பொருள்களைச் சாப்பிட மக்கள் தயங்குகிறார்கள். அதனால் அதனுடைய விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து தயிர் தயார் செய்யப்பட்டு அது நாக்பூர், அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் செல்கிறது. ஆனால், உடனடியாக அதுவும் இயலாது. இனிப்புக் கடைகளுக்குக் கோவா மிகவும் அத்தியாவசியமானது. அதை வேண்டுமென்றாலும் முயற்சி செய்யலாம். 100 லிட்டர் பாலிருந்து கோவா என்றால் 17 கிலோ, பனீர் என்றால் 15 கிலோ, நெய் என்றால் 5 லிட்டர், பால் பவுடர் என்றால் 13 கிலோ கிடைக்கும். ஆனால் அதற்கான சந்தையைத் தெரிந்துகொண்டு விற்கமுடியுமென்றால் இந்தப் பொருள்களைத் தயாரிக்கலாம். பால் பவுடரை ஒரு வருஷம்வரை இருப்பு வைக்கலாம். இந்தப் பால் பவுடர் ஐஸ்கிரீம் தயாரிப்பிலும், தயிர் தயாரிப்பிலும், குழந்தைகளுக்கான உணவுகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. விவசாயிகள் கூட்டாக இணைந்து பால் நிறுவனங்களுக்குப் பால் பவுடர் தயாரித்துக் கொடுக்கலாம். இனிப்புக் கடைகளுக்குப் பால்கோவா விற்கலாம். சந்தை முன்பின் இருந்தாலும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கு ஒரு வரவேற்பு இருக்கிறது. இன்னொன்று இந்தப் பால் விலை குறைவு தற்காலிகமானதே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

பல் பார்ப்பது எப்படி?

“கறவையிலிருக்கும் கலப்பின மாடுகளைச் சந்தையிலிருந்து வாங்கி வரும்போது கவனமாக இருக்க வேண்டும். சந்தையில் 30,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாய் வரை ஒரு மாடு விற்பனையாகிறது. பெரும்பாலும் 2 பல், 4 பல் உள்ள மாடுகளைத்தான் வாங்க வேண்டும். அதற்குமேல் என்றால் தவிர்ப்பது நலம்.

பல் பார்ப்பது எப்படியென்றால் மனிதர்களைப்போலவே மாடுகளுக்கும் பல் விழுந்து முளைக்கும். அப்படி விழுந்து முளைக்கும் பல் பெரிதாக இருக்கும். 2 பல் என்றால் அதுமட்டும் பெரிதாக இருக்கும். 4 பல் என்றால் நான்கு பற்கள் பெரிதாக இருக்கும். கடைவாய்ப் பல் போட்டிருந்தால் வாங்காமல் தவிர்த்துவிடலாம். மாடு நன்கு அசைபோட்டபடி இருக்க வேண்டும். அதை விடுத்து அமைதியாகவோ, அங்கும் இங்கும் திரும்பியபடியோ இருந்தால் எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும்” என்கிறார் மணி.