Election bannerElection banner
Published:Updated:

`எங்கள் நில உரிமையை விடமாட்டோம்!' - குஜராத்தில் மல்தாரி மாடு மேய்ப்பர்கள் போராடுவது ஏன்?

மல்தாரி மாடு மேய்ப்பாளர்கள்
மல்தாரி மாடு மேய்ப்பாளர்கள்

மல்தாரி மாடு மேய்ப்பர்கள் குறித்து உலகமே அறியும். அப்படிப்பட்ட மாடு மேய்ப்பர்களின் கலாசாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் விதமாக அவர்களின் மேய்ச்சல் நிலத்தைக் குறைக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த இவர்கள் போராட்டக் களம் புகுந்துள்ளனர்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் அண்மையில் ஒரு யாத்திரை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்கள் பன்னி பிரதேசத்தைச் சேர்ந்த மாடு மேய்ப்பர்கள். இது ஏதோ சாதாரண கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டம் அல்ல. மாறாக நில உரிமையைத் தக்க வைக்க நடந்த உரிமைப்போர்.

கால்நடைகளைப் பேணி பராமரிப்பதில் பெயர் போனவர்கள் மல்தாரி இனத்தினர். அப்படிப்பட்ட மாடு மேய்ப்பர்களின் கலாசாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் விதமாக அவர்களின் மேய்ச்சல் நிலத்தைக் குறைக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த இவர்கள் போராட்டக் களம் புகுந்துள்ளனர்.

சேவா.விவேகானந்தன்
சேவா.விவேகானந்தன்

கட்ச் பகுதியில் உள்ள பன்னி மேய்ச்சல் நிலம் மிகப் பிரபலமானது. இங்கு மல்தாரி மக்கள் மாடுகளை மேய்ப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த நிலப்பகுதியைத்தான் இவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும் நடவடிக்கையை வனத்துறை கையில் எடுத்துள்ளது. இதையடுத்து பன்னி பால்மாடு உரிமையாளர்கள் சங்கம் ஒரு யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த யாத்திரை 4 நாள்கள் நடைபெற்றது. அதில் 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்களது மாடுகளுடன் இவர்கள் நடந்தே போராட்டத்தில் கலந்து கொண்டனர். பன்னி நில மேய்ப்பு உரிமையை வலியுறுத்தும் பாட்டுகளைப் பாடியபடி இவர்கள் யாத்திரை மேற்கொண்டனர்.

பன்னி மேய்ச்சல் நிலமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய பசும் புல்வெளியாகும். கிட்டத்தட்ட 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதை இப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துவிட்டனர். இதனால் 54 கிராமங்களைச் சேர்ந்த மல்தாரி இனத்தைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலத்தை நம்பித்தான் இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

மல்தாரி மாடு மேய்ப்பாளர்கள்
மல்தாரி மாடு மேய்ப்பாளர்கள்

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அறிந்து இவர்கள் இப்போது போராட்டத்தில் குதித்துவிட்டனர். இந்த நான்கு நாள் யாத்திரையில் தங்களது கோரிக்கை, நோக்கம், தங்களது உரிமை உள்ளிட்டவற்றை இவர்கள் போகும் இடமெல்லாம் வலியுறுத்தி பேசி வந்தனர்.

- சேவா.விவேகானந்தன்

தமிழில்: ஆனந்தி ஜெயராமன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு