Published:Updated:

6 குளங்கள்... ஆண்டுக்கு ரூ.5,00,000 வருமானம்… நம்பிக்கை கொடுக்கும் நண்டு வளர்ப்பு!

சுயதொழில்

பிரீமியம் ஸ்டோரி

சுனாமியால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியில் அரசுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன. உணவு, உடை, இருப்பிடம் என்பதைத் தாண்டி அம்மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட சுய தொழில்கள், அவர்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவியிருக்கிறது. அந்த வரிசையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரைச் சேர்ந்த 12 பெண்கள் அடங்கிய குழுவினர், உருவத்தில் பெரிய நண்டு வளர்ப்பு ஏற்றுமதியில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிச்சாவரம் அலையாத்திக் காடுகளுக்கு அருகே எம்.ஜி.ஆர் திட்டு என்ற இடத்தில் அமைந்திருக்கும் இவர்களுக்குச் சொந்தமான குளத்தில் நூற்றுக்கணக்கான நண்டுகள் நீந்திக் கொண்டிருந்தன. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒரு மதியவேளையில் எம்.ஜி.ஆர் திட்டைத் தாண்டி அவர்களின் நண்டுக் குளத்தை அடைந்தோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மீன்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டிருந்தனர் அங்கிருந்த பெண்கள். நம்மைப் பார்த்ததும் “அவங்களுக்கு (நண்டுகளுக்கு) சாயங்காலச் சாப்பாட்டைத் தயார் பண்ணிக்கிட்டிருக்கோம். அந்த மரத்தடில போயி உக்காருங்க... வர்றோம்” என்று கூற அங்கிருந்த மரத்தின் கீழ் அமர்ந்தோம்.

நண்டு வளர்ப்பு குளம்
நண்டு வளர்ப்பு குளம்


சிறிது நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்தார்கள். அவர்களில் உத்ரா என்பவர் பேசத் தொடங்கினார்.

“நாங்க இருளர் சமூகத்துக்காரங்க. பிச்சாவரம் அலையாத்திக் காட்டுல எறா, நண்டு, மீன் புடிக்கற தொழிலு செஞ்சுகிட்டிருந்தோம். பட்டாசு மோடுங்கற இடத்துலதான் (தற்போது கலைஞர் நகர்) எங்க குடிசைங்க இருந்துச்சு. 2004-ல் வந்த சுனாமில எங்க குடிசைங்கள்லாம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சு. கட்டிக்க வெச்சிருந்த துணிமணிங்ககூட கடல் தண்ணி கொண்டு போயிடுச்சு. அப்ப கவர்மென்டும், தனியார் தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு நெறைய உதவி செஞ்சாங்க. ‘கிரிடு’ அப்படிங்கற நிறுவனம் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தாங்க. ‘கேர் இந்தியா’ நிறுவனம் எங்க பகுதில இருந்த பெண்களை 12 பேர் கொண்ட குழுவா தனித்தனியா பிரிச்சு கோழி வளர்ப்பு, நண்டு வளர்ப்புனு பயிற்சி கொடுத்தாங்க. நாங்க இருக்கற செந்தாமரை குழுவுக்கு நண்டு வளர்க்கிற பயிற்சி கொடுத்தாங்க.

நண்டு வளர்ப்போர்
நண்டு வளர்ப்போர்


எம்.ஜி.ஆர் திட்டுக்குப் பக்கத்துல இருக்கிற இந்த இடத்துல குட்டை அமைச்சு, வளர்க்கறதுக்கு நண்டையும் வாங்கிக் குடுத்தாங்க. குழுவுல இருக்கிறவங்கள்ல ரெண்டு ரெண்டு பேரா மாத்தி மாத்தி இந்த வேலையைச் செய்வோம். நண்டுகளுக்குக் காலை மாலை ரெண்டு வேளையும் சாப்பாடு குடுத்துடணும். மீனை வாங்கிட்டு வந்து அதை வெட்டிப் போடுவோம். எந்தளவுக்கு நாம சாப்பாடு குடுக்கறோமோ அந்தளவுக்கு நல்லா வளரும். நாங்க இப்போ 6 குட்டையில நண்டுகளை வளக்கறோம். அதுல ஒண்ணுக்கு ஒண்ணு அடிச்சிக்காம இருக்கறதுக்காக ‘சைஸ்’ வாரியா மூணு விதமா பிரிச்சிப் போடுவோம். குட்டையில நண்டுகளை விட்டு, தினமும் சாப்பாடு போட்டா போதும்.

நண்டு வளர்ப்பு
நண்டு வளர்ப்பு

ராத்திரியில குட்டைகளைக் காவல் காக்குறது, ஏற்றுமதி பண்றதுலாம் எங்களால செய்ய முடியாது. அதுக்கு எங்க வீட்டு ஆம்பளையாளுங்களை உதவிக்குக் கூப்பிட்டுக்குவோம். இப்போ எங்க அண்ணன் வீரப்பன் எங்களுக்கு உதவியா இருக்காரு. இந்த 6 குட்டையில நண்டு வளர்ப்பு மூலமா செலவெல்லாம் போக வருஷத்துல 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். அதை நாங்க 12 பேரும் பிரிச்சிக்குவோம்” என்றார்.

“நாங்க உள்ளூர் வியாபாரிகள்கிட்ட வாட்டர் நண்டுகளை கிலோ 400 ரூபாய்க்கு வாங்குவோம். வாட்டர் நண்டை அப்படியே சமைக்க முடியாது. ஏன்னா அந்த நண்டுங் களோட உடம்புக்குள்ள சதை இருக்காது, தண்ணி மட்டும்தான் இருக்கும். அதனாலதான் அதை ‘வாட்டர்’னு சொல்றோம். அப்போ அதோட உடம்பை அழுத்திப் பார்த்தா தண்ணி பாக்கெட் மாதிரி இருக்கும். அந்த நண்டுகளைக் குட்டைகள்ல விட்டு வளர்ப்போம். ரெண்டு வேளையும் மீன்களை வெட்டித் தீனியா போடுவோம். ஒரு மாசத்துக்கப்புறம் நல்ல வளர்ச்சி தெரியும். கொழகொழனு இருந்த அந்த நண்டுங்க உடம்பு கல்லால அடிச்சாக்கூட உடைக்க முடியாத அளவுக்குச் சதை புடிச்சு கெட்டியா வளர்ந்துடும். அதுக்கப்புறம் சின்னது, நடுத்தரம், பெருசுன்னு சைஸ் வாரியா பிரிச்சு தனித்தனி குட்டைகள்ல விடுவோம். 48 நாள்ல நல்லா எடை போட்டுடும். முக்கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ வரைக்கும் இருக்கும். எடைக்கு ஏத்த மாதிரி விலை போகும்.

உணவாக்கப்படும் மீன்கள்
உணவாக்கப்படும் மீன்கள்

பிறகு, அதே வியாபாரிங்ககிட்ட வித்துடுவோம். பெரிய நண்டு 700 ரூபாய், ரொம்பப் பெரிய நண்டு 1,300 முதல் 1,500 ரூபாய் வரை விலை போகும். வருமானம் வர்ற அளவுக்கு இதுல கஷ்டங்களும் இருக்கு. குட்டையில இறங்கி நடக்கும்போது அதுல கெடக்குற ஆலி எங்க காலைக் கண்ணா பின்னானு கிழிச்சிடும். அந்த நேரத்துல எங்களுக்குத் தெரியாது. கரைக்கு வந்ததுக் கப்புறம்தான் உள்ளங்கால் பாலமா பொளந்துக்கிட்டு ரத்தமா போகும். அது மட்டுமல்ல தினமும் நண்டுங்ககிட்ட கடி வாங்கிக்கிட்டே இருக்கணும். குட்டைகளைச் சுற்றி அலையாத்திச் செடிகளை நட்டு காடுகளை வளர்ப்போம். அப்படி அலையாத்திக் காடுகளை வளர்க்குறதுனால மீன், நண்டு உற்பத்தி அதிகரிக்கும்” என்கிறார் குழுவில் ஒருவரான திமீரா.

திமீரா, உத்ரா, வீரப்பன்
திமீரா, உத்ரா, வீரப்பன்

முட்டை நண்டுகள்

நண்டு வளர்க்கும் குளங்களை இரவு பகலாகப் பராமரித்து வரும் உத்ராவின் அண்ணன் வீரப்பன், “சுனாமிக்கப்புறம் 7 குழுவுக்கு நண்டு வளர்க்கறதுக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல எல்லாருக்கும் நல்லாத்தான் இருந்துச்சு, அப்புறம் நண்டுங்க கிடைக்கலைன்னு எல்லாரும் இந்தத் தொழிலை விட்டுட்டுப் போயிட்டாங்க. அதுக்கு முன்னாடி எல்லாம் முட்டை நண்டுங்களைப் புடிச்சி கறியாக்கிடுவோம். இல்லைன்னா காசுக்கு வித்துடுவோம். அப்புறம்தான் நமக்குப் பிச்சாவரம் காடும், வெள்ளாறும், பழையாறும் இருக்கும்போது லட்சக்கணக்குல குஞ்சு பொரிக்கற முட்டை நண்டுங்களை ஏன் கறியாக்கணும்னு யோசிச்சோம். பிறகு வாட்டர் நண்டுகளை வாங்கும்போது அதுல மூணு நாலு முட்டை நண்டுங்க இருக்கும். நண்டு முட்டைங்கன்னா அதன் ஓட்டுக்குள்ள லட்சக்கணக்குல முட்டைங்க இருக்கும். குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் அந்த முட்டைங்க ஓட்டுக்கு மேல வந்துடும். அந்த முட்டை நண்டுங்களை வாங்கி அதுக்குனு தனியா குட்டை அமைச்சு அதுல விட்டிருவேன்.

தண்ணி போற போக்குலயே முட்டைங்களும் ஓடி ஆறு, கடல்னு நண்டு வளத்தைப் பெருக்கிடும். இந்தப் பகுதியில முட்டை நண்டு யாருகிட்ட அம்புட்டாலும் எங்கிட்டதான் வந்து கொடுப்பாங்க. வாங்கிக் குட்டைல விட்டிருவேன். எந்த ஆகாரமும் இல்லாமல் அஞ்சு நாள்வரைக்கும் உசிரோட இருக்கும். அப்படிப்பட்ட இந்த நண் டுகளாலதான் நாங்க சம்பாதிக்கறோம். அதுங்க பெருகினாத்தான் எங்களுக்குச் சாப்பாடு. நாங்க வளக்கற நண்டு சிங்கப்பூர், மலேசியானு வெளி நாடுங்களுக்கு ஏற்றுமதியாகுது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு