Published:Updated:

பயிர்க் காப்பீடு திட்டத்தால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி
ல்வேறு சிரமங்களுக்கு இடையே சாகுபடி செய்த பயிர்களின் மகசூல், பலவித காரணங்களால் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து விவசாயிகளைக் காப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் பயிர்க் காப்பீடு திட்டம். ஆனால், ‘இந்தத் திட்டம்மூலம் உரிய நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை. இதில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்துக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம், “இயற்கை இடர்ப்பாடுகள், பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல், தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனால் அடுத்தடுத்து பயிர் செய்ய முடியாமல் போனது. இதிலிருந்து விவசாயிகளை மீட்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பயிர்க் காப்பீடு திட்டம்.

பயிர்க் காப்பீடு
பயிர்க் காப்பீடு

‘பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டம்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டுப் பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. நெல், கரும்பு, சோளம், வாழையென அனைத்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இந்தப் பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இதற்காக அரசு குறிப்பிட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாகப் பிரீமியம் தொகையை விவசாயிகள் செலுத்தி வருகிறார்கள்.

ஒரு ஏக்கருக்குச் சாகுபடி செய்வதற்கான உற்பத்தி செலவின் மொத்த மதிப்பில், 5 சதவிகிதம் பிரீமியம் தொகையாகக் காப்பீடு நிறுவனங்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் 2 சதவிகிதம், மத்திய, மாநில அரசுகள் தலா ஒன்றரை சதவிகிதம் செலுத்துவார்கள். குறிப்பாக நெல் என்றால் ஒரு ஏக்கருக்கு 476 ரூபாய் விவசாயிகள் செலுத்துவார்கள். அதனுடன் மத்திய, மாநில அரசுகள் பங்கும் சேர்ந்து, சுமார் 900 ரூபாய் வரை பீரிமியம் தொகையாகக் காப்பீடு நிறுவனங்களுக்குச் செலுத்தப்படுகிறது.

பழைய முறைப்படி சுமார் 25 வருவாய் கிராமங்களில் (பிர்க்கா) ஏதோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு விவசாயியின் வயலைத் தேர்ந்தெடுத்து, பயிர் சோதனை அறுவடை செய்து அதன் மூலம் மகசூல் இழப்பை அறிந்து, இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டுக் கொடுத்துவந்தனர். ஆனால் புதிய நடைமுறையில் ஒரு வருவாய் கிராமத்தில் ஒரு வயலில் சோதனை அறுவடை செய்து, அதன் மூலம் பாதிப்பை அறிந்து, இழப்பீடு கொடுத்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே அந்த வருவாய் கிராமம் முழுவதிலும் உள்ள விவசாயிகளும் இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும்.

மத்திய அரசு, ரபி (சம்பா, தாளடிப் பயிர்கள்) கரீப் (குறுவைப் பயிர்) என இரண்டு பருவங்களாகப் பிரித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரு வருவாய் கிராமத்தில் ஒரு விவசாயியின் வயலைத் தேர்ந்தெடுத்து வேளாண்மை, வருவாய்த்துறை, புள்ளியியல்துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை சோதனை செய்து அதன் மூலம் மகசூல் இழப்பைக் கணக்கீடு செய்து அதன்படி அந்தந்த பகுதி, விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தி வருகிறது.

பயிர்க் காப்பீடு
பயிர்க் காப்பீடு

‘சோதனை அறுவடை செய்த அடுத்த நான்கு வாரத்தில் இழப்பீடு எவ்வளவு எனக் காப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பதுடன், அடுத்த நான்கு வாரத்தில் அதற்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திவிட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியவில்லை என்றால் வட்டியுடன் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும்’ என்பது விதி. ஆனால் இழப்பீட்டுப் பணம் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வந்ததே கிடையாது. கால தாமப்படுத்தியே காப்பீட்டு நிறுவனத்தினர் பணத்தைச் செலுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன், அடுத்தடுத்து விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதே போல் சோதனை அறுவடை செய்யும்போது, நல்ல விளைச்சல் கண்ட வயலைத் தேர்ந்தெடுத்துச் சோதனை செய்யும்போது, அதன் அருகிலேயே மகசூல் இழப்பு ஏற்பட்ட வயல் இருந்தாலும், அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மகசூல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைத்து முழுப் பலன் அடைகின்ற வகையில் இந்தத் திட்டத்தில் மாற்றமும் கொண்டுவர வேண்டும்.

இது ஒருபுறம் இருந்தாலும் கணக்கீடு செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் முறையாகத் தருவதில்லை. மொத்த தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன. அதன் பிறகு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படுகிறது. அங்கும் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016-ம் ஆண்டிலிருந்து இதுவரை எவ்வளவு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த விவசாயிக்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டிருக்கிறது என இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். அதனைச் செயல்படுத்தவே இல்லை. மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பல ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகை வராமல் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 40 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் இருக்கின்றன.

பயிர்க் காப்பீடு
பயிர்க் காப்பீடு

தற்போது கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பெரும் சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். 2019-20-ம் ஆண்டிற்கான ரபி (சம்பா, தாளடிப் பயிர்கள்) நெற்பயிர் அறுவடை சோதனை கடந்த ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. பேரிடர் காலமான இந்த நேரத்திலாவது காப்பீடு திட்டத்தின் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி, தமிழக அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன்.

பயிர்க் காப்பீடு
பயிர்க் காப்பீடு

அதற்கு மத்திய அரசு தரப்பில், தமிழ்நாடு, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2,424 கோடி ரூபாய் நிதியைத் தற்போது செலுத்தியிருப்பதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். மத்திய அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாமதமாகப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயிகளுக்குப் பணம் வந்து சேர்வதும் தாமதமாகிறது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வரவேண்டியுள்ளது.

பிரதம மந்திரியின் இந்தத் திட்டம் விவசாயிகள் பயன் பெற சிறப்பான திட்டம். ஆனால் மத்திய அரசு இதனைக் கண்காணிப்பதே இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதை உணராமல் தமிழக அரசும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் அந்த நிறுவனங்கள்தான் பெரும் தொகையை அறுவடை செய்கிறது. அதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

ஆயிரம் கோடி ரூபாய் வரை புழங்கக்கூடிய இந்தத் திட்டத்தைக் கண்காணிப்பதற்கான தனி அமைப்புகள் இல்லாததால் விவசாயிகளை இந்தத் திட்டம் சென்றடையவில்லை. மேலும் விவசாயிகளுக்குப் பணம் போய்ச் சேர்ந்து விட்டதா என்பதையும் கண்டு கொள்வதில்லை. இதில் உள்ள குறைகளைக் களைந்து விவசாயிகள் முழுமையாகப் பயன் பெற வேண்டுமென்றால் மத்திய அரசு இதற்கான கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்’’ என்றார்.

பயிர்க் காப்பீடு திட்டத்தால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜன், ‘‘2017-18-ம் ஆண்டுப் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இரண்டு ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கருக்கு எனத் தனித்தனியாகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பிரீமியம் தொகை செலுத்தியிருந்தேன். ஆனால் 1 ஏக்கருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,300 கொடுத்தனர். அதே தொகையையே இரண்டு ஏக்கருக்கும் கொடுக்கிறார்கள். இதேபோல எங்கள் கிராமத்தில் பல விவசாயிகளுக்கு முழுமையான தொகை வரவில்லை. ஏன் இந்த முரண்பாடு? காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் பணத்தை முழுமையாகக் கொடுக்க வேண்டியதுதானே எனக் கேட்டால் முறையான பதில் எதுவும் சொல்வதில்லை.

பயிர்க் காப்பீடு திட்டத்தால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

இதில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஊழியர்கள் நிறைய குளறுபடிகள் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். எனக்கு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்காததைக் கண்டித்தும், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதில் உள்ள குறைகளைக் களைவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

கண்காணிப்புக் குழு தேவையில்லை!

பயிர்க் காப்பீடு திட்டத்தால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

துகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம், “95 சதவிகிதம் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்திவிட்டு, நிலத்திற்கான ஆவணங்களை முறையாகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்துவதில்லை. இதுபோன்ற சில பிரச்னைகளால் சிலருக்குப் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம்தான் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தருவதில் முதலிடம் வகிக்கிறது. இதற்கெனத் தனியாகக் கண்காணிப்புக் குழு தேவையில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு