Published:Updated:

இயற்கை கை விட்டது... இன்ஷூரன்ஸூம் கை விரித்தது... திக்கற்றுத் தவிக்கும் விவசாயிகள் #MyVikatan

Agriculture
News
Agriculture

`இயற்கை ஏமாற்றினாலும் எப்படியும் பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். வாங்கிய கடன்களை ஓரளவு அடைத்துவிடலாம்’ என்ற நினைப்பில் இருந்தனர். ஆனால்...

ஒவ்வோர் ஆண்டும் வானம் பொய்த்துப்போனாலும்,கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருவது பயிர்க் காப்பீடுதான். ஆனால், அந்தப் பயிர்க்காப்பீடும் தங்களை கைவிட்டுவிடுமோ என்று பதற்றத்தில் துடிதுடிக்கிறார்கள் தென்மாவட்ட விவசாயிகள்.

பயிர்க் காப்பீடு 2020-21-ம் ஆண்டுக்கான சம்பா பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்டோபர் 18-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்தச் செய்தியைப் பார்த்து மகிழ்ச்சி அடையாத விவசாயிகளே இல்லை.

கடந்தாண்டு, காலம் கடந்து பெய்த மழையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் குறிப்பாகத் தென்மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். இருந்தும் இயற்கை ஏமாற்றினாலும் எப்படியும் பயிக்காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். வாங்கிய கடன்களை ஓரளவு அடைத்துவிடலாம் என்ற நினைப்பில் இருந்தனர். ஆனால் சில நாள்களுக்குமுன் வெளியான 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை நிவாரணப் பட்டியலில் பல வருவாய்க் கிராமங்களின் பெயர்களே இல்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

உதாரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் உள்வட்டத்திலும் சில வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. மற்ற வருவாய் கிராமங்களின் கதி இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை தெரியவில்லை. எனவே, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி உள்வட்டத்தில் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆனால், 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு நிவாரணத்தொகை விடுவிக்கப்படும் பட்டியலில் 9 வருவாய் கிராமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 16 வருவாய் கிராமங்களுக்கு பயிர்க் காப்பீடு கிடைக்குமா, கிடைக்காதா? எனத் தெரியவில்லை. அவ்வாறு பயிர்க் காப்பீடு நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பல வருவாய் கிராமங்களுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 முதல் 5,000 வரை மிகச்சொற்ப தொகை மட்டுமே ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்ப தொகையையும் அரசிடமே ஒப்படைத்துவிடுகிறோம் என்று பல விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கண்ணங்குடி ஒன்றியம் சிறுவாட்சி வட்டாரம் நெப்பிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் வேதனையுடன் கூறியதாவது : ``ஒவ்வொரு வருஷமும் வட்டிக்கு கடன் வாங்கி நகைகளை அடகு வைச்சு படாதபாடுபட்டு ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சு விவசாயம் பண்றோம். ஆனா, ஒழுங்கான மழை இல்லாமலும், நோய் தாக்கியும் பெரும் நஷ்டமடைஞ்சிடுறோம். இந்தமாதிரி நேரத்துலே போன ரெண்டு... மூணு வருஷமா இந்தப் பயிர் இன்ஷூரன்ஸ்தான் ஓரளவுக்கு எங்களைக் காப்பாத்தி வந்துச்சு. போன வருஷத்துலே நெல் விதைச்சு முளைச்ச பின்னாடி சுத்தமா மழையே இல்லை. பயிர் எல்லாம் கருகிப் போச்சு. கடைசி நேரத்துலேதான் மழை பெய்ஞ்சது. பயிர் எல்லாம் சாவியாகிப் போன பின்னாடி மழை பேஞ்சு என்ன பிரோயஜனம்... ஒவ்வொரு விவசாயிக்கும் பெருத்த நஷ்டம். வாங்கின கடனை அடைக்க முடியலை. நகைநட்டை திருப்ப முடியலை. கொரோனாவாலே மெட்ராஸ், திருப்பூர் பக்கமும் வேலைக்குப் போக முடியலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இன்னும் மருந்து அடிக்கிறது ,உரம் போடுற செலவு எல்லாம் இருக்கு. போன வருஷ விவசாயத்துக்கு வாங்கின கடனையே அடைக்க முடியலை. இப்போ இந்த வருஷத்து விவசாயத்துக்கும் யாருக்கிட்டே கடன் வாங்கிறதுனுதான் தெரியலை…

இப்போ இந்த வருஷத்துக்கு மறுபடியும் விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டோம். அதுக்கு உழவு கூலி, விதை, களைக்கொல்லி, உரம், களை எடுப்புச் செலவுனு இதுவரைக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு பத்து பதினைஞ்சாயிரம் ரூபாய்க்கு மேலே செலவு வந்திடுச்சு. இன்னும் மருந்து அடிக்கிறது, உரம் போடுற செலவு எல்லாம் இருக்கு. போன வருஷ விவசாயத்துக்கு வாங்கின கடனையே அடைக்க முடியலை. இப்போ இந்த வருஷத்து விவசாயத்துக்கும் யாருக்கிட்டே கடன் வாங்கிறதுனுதான் தெரியலை…

இந்த இக்கட்டான சூழ்நிலையிலே போன வருஷம் செஞ்ச பயிர் இன்ஷூரன்ஸ் பணம் வந்து காப்பாத்திடும்னு இருக்கோம். ஆனா, எங்க சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி பிர்காவுக்கு 9 குரூப்புக்குத்தான் இழப்பீடு வந்திருக்கு. மத்த குரூப்புக்கு எல்லாம் இழப்பீடு வரலை... நாங்க என்ன பாவம் செஞ்சோம்... போன வருஷம் சுத்தமாவே இந்த ஏரியாவே வெளையலை. இது எல்லாருக்குமே தெரியும். ஆனா, ஏன் ஒதுக்கி வைச்சிருக்காங்கனு தெரியலை. இந்தப் பயிர் இன்ஷூரன்ஸ் நிவாரணத்துக்கு எந்த அடிப்படையிலே கணக்கு எடுக்குறாங்க... எப்படி பணம் ஒதுக்குறாங்கன்னே தெரியலை. ஒரு ஊருக்கு ஏக்கருக்கு 17,000 ஒதுக்கி இருக்காங்க. ஆனா, அடுத்த வயல் உள்ள பக்கத்து ஊருக்கு வெறும் 3,000 தான் ஒதுக்கி இருக்காங்க... இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கு. பயிர் இன்ஷூரன்ஸ்லே எல்லாமும் மர்மமாவே இருக்கு. எல்லாத்தையும் வெளிப்படையா செஞ்சா நல்லா இருக்கும்.


நம்ம முதல்வர் இந்த விஷயத்தை த்தீவிரமா விசாரிச்சு உண்மையாவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான இழப்புக்கு ஏத்த மாதிரி நிவாரணம் கொடுக்க உத்தரவிடணும். இன்னும் பல வருவாய் கிராமங்களின் பெயர்களே பயிர்க் காப்பீட்டு நிவாரணப்பட்டியலிலே இல்லை. அவங்களுக்கு எல்லாம் இழப்பீடு கிடைக்குமா, கிடைக்காதான்னே தெரியலை. நம்ம மாநில அரசாங்கம் உடனடியா நடவடிக்கை எடுத்தால்தான் நாங்க வாழ முடியும்... இல்லைன்னா எங்க வாழ்க்கை என்னாகும்னே தெரியலை...” என்று புலம்புகிறார்.

நெப்பிவயல்   சரவணன்
நெப்பிவயல் சரவணன்

இவர் மட்டுமல்ல இவரைப் போல இப்பகுதியில் உள்ள பல்லாயிரகணக்கான விவசாயிகளின் வேதனைக்குரல்தான் இது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு கிடைக்காததால் கொதித்துப்போயுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களிடமும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

களை எடுப்பு, உரமிடுதல், மருந்து தெளிதல் போன்ற விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இவ்வேளையில் கடந்தாண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை ஓராண்டு கழிந்த நிலையில் இனிமேலும் தாமதிக்காமல் பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் விரைந்து வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும். இல்லையேல் வட்டிக் கடை வாசலிலும், கந்து வட்டிக் கும்பலிடமும்தான் விவசாயிகள் கையேந்துவார்கள்.

- பழ.அசோக்குமார்