Published:Updated:

“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது!”

மேடையில் பேச்சாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மேடையில் பேச்சாளர்கள்

நிகழ்ச்சி

“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது!”

நிகழ்ச்சி

Published:Updated:
மேடையில் பேச்சாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மேடையில் பேச்சாளர்கள்

`இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும்’ என்பது நல்ல நோக்கம்தானே! அந்த நோக்கத்தில் ‘இனியெல்லாம் இயற்கையே, லாபம் தரும் வெற்றித் தொழில்நுட்பங்கள்’ என்ற கருத்தரங்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் கடந்த நவம்பர் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வை பசுமை விகடன், டி.ஆர்.ஆர். டிராக்டர்ஸ், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. நெல் சாகுபடி, பலாச் சாகுபடி, நீர் மேலாண்மை, கருவிகள் பயன்பாடு எனப் பல தலைப்புகளில் வல்லுநர்களும் விவசாயிகளும் உரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக, `ஒற்றை நாற்று நெல் நடவி’ன் தூதரும், முன்னோடி இயற்கை விவசாயியுமான நாகரத்தின நாயுடு கலந்துகொண்டார்.

கருத்தரங்கில் கலந்துகொண்டோர்
கருத்தரங்கில் கலந்துகொண்டோர்

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பத்துறையின் பேராசிரியர் கார்த்திகேயன், “ நான்கு ஆண்டுகளாக பசுமை விகடனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சுற்றுவட்டார விவசாயிகளின் அறிமுகம் கிடைப்பதால், கல்லூரி மாணவர்களும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைக் கேட்டு நானும் நெல் பயிரிட்டு வருகிறேன். முழுமையாக இயற்கை விவசாயம்தான் செய்துகொண்டிருக்கிறேன்’’ என்று உற்சாகமாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர்.எம்.அழகு இயற்கை விவசாயத்தின் தேவை குறித்துப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயத்துக்குப் பயன்படும் கருவிகளின் அணிவகுப்பு
விவசாயத்துக்குப் பயன்படும் கருவிகளின் அணிவகுப்பு

பொறியாளரும், நீர் மேலாண்மை வல்லுநருமான பிரிட்டோ ராஜ், “காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருக்கும் பெரும்பாலான நிலங்களின் அமைப்பு தமிழகத்தின் மற்ற இடங்களில் இல்லை. அவற்றின் அமைப்பும் மண்ணின் தன்மையும் வேறு மாதிரி இருக்கிறது. மூர்க்கத்தனமான களிமண், விரைவில் வறண்டு போகக்கூடிய செம்மண், சரளை மண் வகைகளும் இங்கிருக்கின்றன. கடந்த ஐந்து மாதங்களில் நடப்பட்ட மொத்த செம்மரங்களில் 70 சதவிகிதம் இந்தப் பகுதியில் நடவு செய்யப்பட்டிருக்கின்றன.

பண்ணைக் குட்டைகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பலாவை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால் பல லட்சம் வருமானம் கிடைக்கும்.

இந்தப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பயிர் செய்வதில் காட்டும் அளவுக்கு தண்ணீரைச் சேமிக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். ஓர் அளவுக்குமேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தால் கடல் தண்ணீர் உள்ளே புகுந்துவிடும். இந்த மாவட்டங்களில் தண்ணீரிலும் நிலத்திலும் உப்பின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொழிற்சாலை மற்றும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது. நமக்கு வரும் வருமானத்தில் பத்து சதவிகிதப் பணத்தை நீரைச் சேமிக்க ஒதுக்க வேண்டும்.

விவசாயத்துக்குப் பயன்படும் கருவிகளின் அணிவகுப்பு
விவசாயத்துக்குப் பயன்படும் கருவிகளின் அணிவகுப்பு

நெல் பயிருக்குக் குறைந்த தண்ணீரே போதும் என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மூலம் நீர்நிலைகளைத் தூர்வாருகிறார்கள். அதை அந்தந்தப் பகுதி விவசாயிகளே நேரடியாகச் சென்று கண்காணிக்க வேண்டும். `இது வேறொருவர் வேலை’ என்று ஒதுக்கிவிடக் கூடாது. கால்வாய்களை, ஓடைகளைக் கண்டெடுத்து அவற்றில் நீரைச் சேமிக்க அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மழை அதிகமாகப் பெய்யும்போது கிணற்றிலும் போரிலும் மழைநீரைச் சேமித்துவைக்க வேண்டும். ஒவ்வொரு கிணற்றிலும் குறைந்தபட்ச மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். எந்தப் பயிராக இருந்தாலும், அதிகபட்சமாக ஒன்றரை அடி ஆழத்திலிருந்து மூன்றடி ஆழத்திலுள்ள வேர்கள் மட்டுமே நீரை உறிஞ்சும். அதிகமாக நீர் பாய்ச்சுவதால் எந்தப் பலனும் இல்லை. வரப்புகள் மூன்றடி உயரம் இருக்கும்படி அமைக்க வேண்டும். எந்தப் பயிராக இருந்தாலும் எட்டு நாள்கள் வரை நீரைத் தேக்கிவைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, மழைநீரை வெளியேற்ற வரப்பை வெட்டிவிட வேண்டாம். இதற்காக நிலங்களில் ஆங்காங்கே பண்ணைக் குட்டைகளை ஏற்படுத்த வேண்டும். நிலத்தின் சிட்டா, வரைபடத்தோடு விண்ணப்பம் கொடுத்தால், வேளாண்மைப் பொறியியல் துறை பண்ணைக் குட்டைகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்கும். குறைந்த தண்ணீரை புதிய தொழில்நுட்பங்களோடு பயன்படுத்துங்கள்” என அக்கறையுடன் வழிகாட்டினார். முன்னோடி பலா விவசாயியும், வேளாண்துறை துணை இயக்குநருமான (ஓய்வு) பி.ஹரிதாஸ், “வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர்ப் பிரச்னை உள்ளவர்கள் பலாச் சாகுபடியைத் தேர்வுசெய்யலாம். களர் நிலம், சுண்ணாம்பு நிலம், தண்ணீர் தேங்கும் இடம் ஆகியவற்றில் பலா வளராது. மற்ற அனைத்து நிலங்களிலும் வளரும். ஒரு ஏக்கரில் 20 முதல் 50 டன் வரை மகசூல் எடுக்க முடியும். ஏக்கருக்கு 80 முதல் 100 மரங்களை நடவு செய்யலாம். பூச்சி மருந்து, உரம் என எந்தச் செலவும் இல்லை. இலங்கையிலுள்ள 50 சதவிகிதம் பலா மரங்கள், வருடத்துக்கு இரண்டு முறை காய்க்கும். நம்மிடம் அது போன்ற ரகங்கள் இல்லை.

நிகழ்ச்சியை வழங்கியோர்:
நிகழ்ச்சியை வழங்கியோர்:

வருடம் முழுக்கக் காய்க்கக்கூடிய பலா ரகங்களைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிறோம். தென்னைக்கு நடுவே பலா மரங்களை வளர்த்தால் தென்னை செழிப்பாக வளரும்; இரட்டை வருமானமும் கிடைக்கும். எதிர்காலத்தில் பலாவுக்குச் சிறந்த வரவேற்பிருக்கிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால், லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில் உற்பத்தி மிக மிகக் குறைவு. ஆனால், தேவை அதிகம். கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து வந்து இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பலாச் சாகுபடி தமிழகம் முழுவதும் பரவினால் விவசாயிகள் நிச்சயம் வளமாக வாழ்வார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.

கார்த்திகேயன், பிரிட்டோ ராஜ்
கார்த்திகேயன், பிரிட்டோ ராஜ்

டி.ஆர்.ஆர் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்பிரசாத், “தண்ணீர், மண், மாறும் தட்பவெப்பநிலை ஆகியவற்றைப் பார்க்கிறோம். இவையெல்லாம் சரியாக இருந்தால் அதற்கான சரியான பயிரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த பின்னர், அந்தப் பயிரில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை போன்றவற்றை எப்படிச் செய்வது என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும். பண்ணைக் கருவிகளுக்கும் ஒருவித மேலாண்மை இருக்கிறது. அதையும் விவசாயிகள் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த வேண்டியது அவசியம். இப்போது இருந்த இடத்திலிருந்தே விவசாயம் செய்யுமளவுக்கு நவீனத் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அதனால் விவசாயிகள் தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஹரிதாஸ், ராம்பிரசாத், நாகரத்தின நாயுடு
ஹரிதாஸ், ராம்பிரசாத், நாகரத்தின நாயுடு

மதிய உணவுக்குப் பிறகு மைக் பிடித்தார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தினம் நாயுடு. “நெல் விவசாயத்துக்கு தஞ்சாவூர்தான் புகழ் பெற்றது என்று நினைத்தேன். இங்கே வந்திருப்பவர்கள் பாதிநாள் முடிந்தும் என்னுடைய நெல் விவசாயம் பற்றிய பேச்சுக்குக் காத்திருப்பதைப் பார்த்தால், தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் நெல் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது புரிகிறது. நான் ஒற்றை நாற்று நடவு முறையில்தான் நெல் விவசாயம் செய்கிறேன்.

இந்த முறையில் வயலில் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேவைக்கு மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்யும்போது, நாற்றுகளை மேலாக வயலில் வைத்தாலே போதுமானது. அழுத்தி நடவு செய்யத் தேவையில்லை. விரல் நுழையும் ஆழத்துக்கு அழுத்தி நடவு செய்யும்போது, வேர்கள் கிளை பரப்புவது பாதிக்கப்படும். முளைப்பு திறனும் குறையும். வேர்கள் ஆழத்துக்குச் செல்லாமலிருந்தால் நெற்கதிர்கள் எளிதில் சாய்ந்துவிடும். நடவு செய்யும் ஆட்களின் காலடி வயலில் அதிகமிருக்கக் கூடாது. நடவின்போது ஒவ்வொரு இரண்டு மீட்டருக்கும் இடையே ஓரடி இடைவெளி விட வேண்டும். தண்ணீர்ப் பற்றாக்குறையின்போது, இந்த ஓரடி இடைவெளியில் தண்ணீர்ப் பாய்ச்சினாலே பயிர்களைக் காப்பாற்றி விடலாம். இந்த இடைவெளி ஆட்கள் நடந்து செல்வதற்கு உதவியாக இருக்கும்.

மேடையில் பேச்சாளர்கள்
மேடையில் பேச்சாளர்கள்

வேப்பிலை உள்ளிட்ட இலை தழைகளை ஒரு அடி நீளத்துக்கு வயலில் போட வேண்டும். முதலில் இலை மட்கும். பிறகு குச்சிகளின் தோல் மட்கும். அடுத்து குச்சிகள் மட்கத் தொடங்கும்.

இப்படி மட்கும்போது பயிர்களின் வளர்ச்சிக்கேற்ப தேவையான ஊட்டங்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும். அறுவடை முடிந்த பிறகு மீண்டும் வயலில் தண்ணீர் பாய்ச்சி நெல் சாகுபடி செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்த மகசூலைவிடக் குறைவாக இருந்தாலும், கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்கும். நடவு, உழவு உள்ளிட்ட வேலைகளும் மிச்சமாகும்.

என் நெல் சாகுபடி அனுபவங்களை அமெரிக்க அதிபர் என்னிடம் வந்து தெரிந்துகொண்டு செல்கிறாரென்றால், அது எனக்குக் கிடைத்த மரியாதை இல்லை. உழைப்புக்கும் இயற்கை விவசாயத்துக்கும் கிடைத்த மரியாதை. நான் இதுவரை அரசின் உதவியை எதிர்பார்க்காமல் விவசாயம் செய்கிறேன். நெற்பயிர் சாகுபடியில் அனுபவமுள்ள நான், எனக்குத் தெரிந்த யோசனைகளையும் கருத்துகளையும் விவசாயிகளுக்குக் கற்றுத் தருகிறேன்.

‘‘ஒற்றை நாற்று நடவு முறையில் வயலில் தண்ணீரைத் தேக்கிவைக்க வேண்டிய அவசியமில்லை. தேவைக்கு மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும்.’’

நமக்குப் பிறகு வரும் சந்ததிகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால்தான் என் பண்ணையில் மண்ணுக்குத் தேவையான இயற்கை இடுபொருள்களை இட்டு விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். என் பண்ணைக்கு வெளியிலிருந்து எந்தப் பொருளையும் கொண்டு வருவதில்லை. பெரும்பாலும் தேவையானவற்றைப் பண்ணையிலேயே உற்பத்தி செய்கிறேன். அதனால் எனக்கு இடுபொருள்கள் செலவு குறைகிறது.

இயற்கை விவசாயத்தில் தேவையற்ற செலவுகள் குறைவு. முடிந்தவரை கலப்புப் பயிரை அதிகம் பயிரிடுங்கள். ஏனெனில், ஒரு பயிர் கைவிட்டாலும் இன்னொரு பயிர் கைகொடுக்கும். இயற்கை விவசாயத்தில் முழு மனதுடன் ஈடுபட்டால் லாபம் அதிகம். அதைத் திறமையாகக் கையாள பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.

கடந்த 50 ஆண்டுகளாகச் செயற்கை உரம் உபயோகிப்பதால் நிலம் மலடாகி விட்டது. இப்போதிருக்கும் நிலங்களில் நுண்ணுயிரிகளே இல்லை. பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்... ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கை இடுபொருள்களின் பயன்பாட்டை அதிகரிப்போம்” என்ற நாகரத்தின நாயுடு விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார். கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவும் தேநீரும் வழங்கப்பட்டன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

களைகளைக் கட்டுப்படுத்த வயலைக் காயவிட வேண்டும்!

ரகுபதி
ரகுபதி

முன்னோடி நெல் விவசாயி ரகுபதி, “நெல் சாகுபடி செய்வதற்கு முன்னர் அந்த நிலத்தில் சணப்பு, தக்கைப் பூண்டு விதைத்து இரண்டு முறை மடக்கி உழ வேண்டும். அந்த வயலை 10 நாள்கள் காயவிட்டால் களைகள் கட்டுப்படுத்தப்படும். மீண்டும் ஒரு முறை உழவு ஓட்டி, நெல்லை விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன்னர் முட்டைக் கரைசலில் நெல் விதைகளைக் கொட்டி விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்னதாக ஊறவைத்த நெல்லில் சூடோமொனஸ், அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும். விதைப்புக்குப் பிறகு மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. பாரம்பர்ய நெல் பயிரில் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியிருந்தால் நொச்சி, வேம்பு, புங்கன், ஊமத்தம், நுணா ஆகியவற்றின் இலைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஐந்திலைக் கரைசலைத் தெளிக்கலாம்” என்றார்.

“தெளிவு கிடைச்சிருக்கு!”

விஜய்-கலைவாணி, கிழக்கு தாம்பரம்:

விஜய்-கலைவாணி
விஜய்-கலைவாணி

“ஐ.டி கம்பெனியில வேலை செய்யறேன். எங்களுக்கு விருதாச்சலத்துல மூணு ஏக்கர் நிலம் இருக்கு. எங்களுக்கு விவசாயம் எப்படிச் செய்யறதுன்னே தெரியாது. பசுமை விகடன்ல வர்ற நிகழ்ச்சி அறிவிப்புகளைப் பார்ப்போம். இதுவரைக்கும் எந்த நிகழ்ச்சியிலயும் கலந்துக்க முடியலை. எப்படி இருக்கும் பார்க்கலாமேன்னு இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம். பேசின எல்லாருடைய கருத்துகளும் குறிப்பு எடுத்துவெச்சுக்கிற அளவுக்கு ரொம்பப் பயனுள்ளதா இருந்துச்சு. இந்தக் கருத்தரங்குல விவசாயம் தொடர்பா எங்களுக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. இதுக்கு அப்புறம் விவசாயம்தான் செய்யப்போறோம்.’’

மழைநீரைச் சேமிக்கும் உழவு

செல்வராஜ்
செல்வராஜ்

விளைச்சலைக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிப் பேசிய முனைவர் செல்வராஜ், “பிரச்னையின் அடிப்படையில் மண் மூன்று வகைப்படும். அமிலம், களர், உவர் என மூன்று தன்மைகொண்ட நிலங்கள் இருக்கின்றன. களர் தன்மையுள்ள நிலங்களைச் சீர்திருத்த இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஜிப்சமிடுதல்; இரண்டாவது, மழைநீரைத் தேக்கிவைத்து வழிந்தோடச் செய்வது. அதிகமாக உழவு ஓட்டும்போதுதான் மண்ணில் நீர் அதிகமாகச் சேகரமாகும். ஒரு வருடத்துக்கு ஐந்து முறை உழவு செய்ய வேண்டும்” என்றார்.