Published:Updated:

மகசூல்: இயற்கை முறையில் பால் புடலை... குறைந்த செலவில் நல்ல வருவாய்!

புடலை
புடலை

இதுவரைக்கும் 26 பறிப்புகள் முடிச்சிருக்கேன். 7,682 கிலோ காய்கள் கிடைச்சிருக்கு. அதுல 500 கிலோ வரை கழிவுக் காயாகிடுச்சு. குறைந்தபட்சமா 7 ரூபாயிலிருந்து அதிகபட்சமா 24 ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு.

தென்காசி மாவட்டம், சுரண்டையிலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள கரையாளனூரில் இருக்கிறது மாரியப்பனின் புடலைத் தோட்டம்.

"மாதாபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் நடராஜன் இயற்கை முறையில எலுமிச்சை, பாரம்பர்ய நெல் சாகுபடி செய்வதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். அவர் இயற்கை விவசாயத்தின் நன்மைகள், இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து விரிவாகச் சொன்னார். கூடவே, ‘முதல் முறையிலேயே அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டாம். முதலில் குறைவான பரப்பளவில் சாகுபடி செய்யுங்க’னு அறிவுரையும் சொன்னார்.

இந்த நிலம் காடுபோலப் புதர் மண்டிக் கிடந்துச்சு. அதை வெட்டிச் சீர்ப்படுத்தி, பலதானியம் விதைச்சு, வளர்ந்ததும் மடக்கி உழுதேன். ரெண்டு தடவை இப்படி செஞ்சு, மண்ணை வளப்படுத்தினேன். எனக்கு பந்தல் காய்கறிச் சாகுபடியிலதான் ஆர்வம். முதல்ல 50 சென்ட் நிலத்துல புடலைச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சுது. ஆனா, பழ ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியலை. அடுத்த சாகுபடியில கருவாட்டுத் தண்ணி தெளிச்சு கட்டுப்படுத்தினேன்.

மகசூல்: இயற்கை முறையில் பால் புடலை... குறைந்த செலவில் நல்ல வருவாய்!

இப்போ ஆறு வருஷமா இயற்கை முறையில விவசாயம் பார்த்துட்டு இருக்கேன். இது மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல புடலை அறுவடை நடந்துக்கிட்டிருக்கு. ரெண்டு ஏக்கர்ல தென்னை இருக்கு. ரெண்டு ஏக்கர்ல பீர்க்கன் சாகுபடி செய்ய நிலத்தைத் தயார்படுத்திவெச்சிருக்கேன்” என்றவர் வருமானம், விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

“நான் போட்டிருக்கிறது பால் புடலை வகை. இந்தப் புடலையை கேரளாவுல அதிகம் விரும்பி வாங்குறாங்க. நம்ம ஊர் சந்தைகள்லயும் நல்லா விற்பனையாகுது. இத நாலு நாளுக்கு ஒரு முறை பறிக்கிறேன். பந்தல்ல காய்கள் கண்ணுல நல்லா தென்படுறதால வேகமா பறிச்சிடலாம். நானும் இன்னொரு வேலையாளும் சேர்ந்தே ஒரு ஏக்கர் முழுக்கக் காய்களைப் பறிச்சு முடிச்சுடுவோம்.

இதுவரைக்கும் 26 பறிப்புகள் முடிச்சிருக்கேன். 7,682 கிலோ காய்கள் கிடைச்சிருக்கு. அதுல 500 கிலோ வரை கழிவுக் காயாகிடுச்சு. குறைந்தபட்சமா 7 ரூபாயிலிருந்து அதிகபட்சமா 24 ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு. அது மூலமா 73,580 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுருக்கு. இன்னும் 10 பறிப்புகள் வரை பறிக்கலாம். அந்த வகையில 2,500 முதல் 3,000 கிலோ எதிர்பார்க்கிறேன்.

மகசூல்: இயற்கை முறையில் பால் புடலை... குறைந்த செலவில் நல்ல வருவாய்!

சராசரியா 2,800 கிலோ புடலை, ரூ.10-க்கு விற்பனையானாலும் ரூ.28,000 வருமானம் கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கேன். ஆக மொத்தம் 1,01,580 ரூபாய் வருமானம். சராசரியாக 1,00,000 ரூபாய் கிடைக்கும். இதுல பந்தல் அமைக்க 28,000 ரூபாய், விதை, நடவு, களை, பராமரிப்பு, அறுவடைனு 21,000 ரூபாய் செலவாகியிருக்கு. பந்தல் செலவு நிலையானது. மூணு வருஷம் வரைக்கும்கூட அதே பந்தலைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்’’ என்றார்.

- ஒரு ஏக்கர் பரப்பளவில் பந்தல் முறையில் புடலைச் சாகுபடி செய்வது குறித்து மாரியப்பன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே... > ஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம்! - வாரிக் கொடுக்கும் பால் புடலை! https://www.vikatan.com/news/agriculture/this-farmer-yields-better-benefits-with-snake-gourd

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு