Published:Updated:

2.5 ஏக்கர்... 6 மாதங்கள்... ரூ.8 லட்சம்... பந்தல் சாகுபடியில் 'பலே' வருமானம்!

அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி

மறுபயணம்

2.5 ஏக்கர்... 6 மாதங்கள்... ரூ.8 லட்சம்... பந்தல் சாகுபடியில் 'பலே' வருமானம்!

மறுபயணம்

Published:Updated:
அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி

கடந்த 14 ஆண்டுகளாகப் பசுமை விகடனுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் பசுமை விகடன் ஆரம்பகாலங்களில் பதிவு செய்த விவசாயப் பண்ணைகள் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் அதற்குப் பிறகு, கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிப் பேசுகிறது இந்தப் பகுதி.

ந்தல் சாகுபடியில் முன்னோடி விவசாயியாகத் திகழும் கேத்தனூர் பழனிசாமியின் அனுபவங்களை... 2007 மார்ச் 10 தேதியிட்ட இதழில் கட்டுரையாக வெளியிட்டோம். அதோடு இவரது பந்தல் சாகுபடி தொழில்நுட்பங்களை வீடியோ வாகவும் பதிவு செய்து, பசுமை விகடனின் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தோம். இதனால் பலன் அடைந்த விவசாயிகள் ஏராளம். அந்த வரிசையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரனின் பீர்க்கன் சாகுபடி அனுபவங்களைக் கடந்த இதழில் பதிவு செய்தோம். அதன் தொடர்ச்சியாகத் திருச்சி மாவட்டத்தில் பந்தல் சாகுபடி செய்து வரும், செல்வதுரை-கோமதி தம்பதியின் விவசாய அனுபவங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, கல்லகம் கிராமத்தில் இருக்கிறது செல்வதுரை-கோமதி தம்பதியின் தோட்டம். தோட்டத் துக்குள் நுழைந்தபோது நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். முதலில் பேசத் தொடங்கிய செல்வதுரை, ‘‘கல்தூண் அமைச்சு இரண்டரை ஏக்கர்ல பந்தல் சாகுபடி செஞ்சு நிறைவான வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கோம். இவ்வளவு பெரிய பரப்புல பந்தல் சாகுபடி செய்றது எல்லாம், எங்க பகுதியில கற்பனை கூடச் செஞ்சு பார்க்க முடியாத காரியம். இதுக்கு பசுமை விகடனும் கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவோட வழிகாட்டுதலும்தான் முழுக்க முழுக்கக் காரணம். இந்த உதவியை நாங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்.

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஐ.டி.ஐ படிச்சிட்டு விவசாயத்தைக் கவனிச்சிக் கிட்டு இருந்தேன். அதுல நிறைவான வருமானம் இல்லாததால, சிங்கப்பூர் போயி 16 வருஷம் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இங்க என்னோட அப்பாவும், என் மனைவியும் விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டாங்க. நெல், கரும்பு, சோளம்னு எந்தப் பயிர் சாகுபடி செஞ்சாலும் உழைப்புக்கேத்த லாபம் இல்லை. இந்தச் சூழ்நிலையிலதான், கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவோட பந்தல் சாகுபடி பத்தின பசுமை விகடன் வீடியோ எதார்த்தமா என் கண்ணுல பட்டுச்சு. என் மனைவிகிட்ட சொல்லி, பசுமை விகடனை வாங்கிப் படிக்கச் சொன்னேன். கல் தூண் அமைச்சி பந்தல் சாகுபடியில கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செஞ்சு பார்க்கலாம்ங்கற எண்ணம் எங்களுக்கு அதிகமாச்சு. கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவை தொடர்பு கொண்டோம். அவர் கொடுத்த நம்பிக்கையினால, தீவிரமா இறங்கலாம்னு முடிவெடுத்தோம்.

அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி
அறுவடையான புடல், பாகலுடன் செல்வதுரை-கோமதி

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சொந்த ஊருக்குத் திரும்பி வந்துட்டேன். ரெண்டரை ஏக்கர்ல கல்தூண்கள் அமைச்சு பந்தல் சாகுபடி செய்யலாம்னு தீர்மானிச் சோம். எங்க பகுதியில 10 சென்ட், 20 சென்ட்ல மூங்கில் கால் நட்டு, கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செய்றதுதான் வழக்கம். அதுவும் வாய்க்கால் பாசனத்துலதான் செய்வோம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்திதான் பயிர் பண்ணுவோம். அதனால் ஏகப்பட்ட பின்னடைவுகள்.

இந்த மூங்கில் கால்கள் ரெண்டு வருஷத்துக்கு மேல தாக்குப் பிடிக்காது. ரசாயன உரங்கள் பயன் படுத்துறதுனதால, அசுவினி, வெள்ளை ஈ தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எவ்வளவுதான் பூச்சிக் கொல்லி மருந்து அடிச்சாலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதுமாதிரியான காரணங் களால, பந்தல் சாகுபடியைக் கைவிட்டுப் பல வருஷங்களா, அந்த நினைப்பே வராமல் இருந்தோம். கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவோட வழிகாட்டுதலால், கல்தூண் முறையில நிரந்தரப் பந்தல், சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். இயற்கை விவசாயத்துல புடலை, பாகல் சாகுபடி செய்றதுக்கான ஆரம்பகட்ட வேலைகள்ல தீவிரமா இறங்கினோம். இதுக்கான எல்லா ஆலோசனைகளையும் ஐயாதான் விலாவாரியா, அக்கு வேறு, ஆணி வேறா விவரிச்சார். எவ்வளவு நேரம் பேசினாலும், என்ன சந்தேகம் கேட்டாலும் கொஞ்சம்கூடச் சளைக்காம பதில் சொன்னார்’’ என்றவர் சற்று இடைவெளி விட, கோமதி பேசத் தொடங்கினார்.

‘‘ரெண்டரை ஏக்கர்ல கல்தூண் அமைச்சு, கம்பி பந்தல் அமைக்க, 4,50,000 ரூபாய் செலவாச்சு. அதுல மானியம் போக, மீதி ரூ.2,50,000 தான் ஆரம்பகட்ட செலவு.’’

‘‘எங்களுக்கு இதுல முன் அனுபவம் இல்லாததால, எப்படி இதுக்கான வேலையைத் தொடங்குறதுனு தயக்கம் இருந்துச்சு. பழனிச்சாமி ஐயாவே நிலக்கோட்டையில் இருந்து, தர்மராஜ்னு ஒருத்தரை இங்க அனுப்பி வெச்சார். அவர், கல்தூண் பந்தல் அமைக்குற தொழில்ல நீண்ட அனுபவசாலி. எங்க பண்ணைக்கு வந்து நிலத்தை அளந்து பார்த்து, எவ்வளவு கம்பி வாங்கணும், எந்த மாதிரி வாங்கணும், எவ்வளவு கல் தேவைனு எல்லா விவரங்களையும் விலாவரியா எழுதிக்கொடுத்துட்டுப் போனாரு. அதே போல கல்தூண் வாங்குறதுக்கும் ஐயா உதவி பண்ணுனாரு. தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் சாகுபடிக்கு 2 லட்சம் ரூபாய் மானியம் வாங்கலாம்னு ஆலோசனை சொன்னாரு. அதுவும் கிடைச்சது. ரெண்டரை ஏக்கர்ல கல்தூண் அமைச்சு, கம்பி பந்தல் அமைக்க 4,50,000 ரூபாய் செலவாச்சு. அதுல மானியம் போக, மீதி 2,50,000 தான் ஆரம்பகட்ட செலவு’’ என்றார் மகிழ்ச்சியாக.

பந்தலில் புடலை
பந்தலில் புடலை

பந்தல் சாகுபடி நிலத்துக்குள் நம்மை அழைத்துச் சென்ற செல்வதுரை தற்போதைய விவசாயம் பற்றிப் பேசத் தொடங்கினார். ‘‘பாகல், புடலைனு இரண்டையும் சாகுபடி செஞ்சு கிட்டு வர்றோம். இந்த ரெண்டு வருஷத்துல 3 முறை பயிர் பண்ணி வருமானம் எடுத்திருக்கோம். ஒரு முறைக்கு 6 மாதங்கள் பயிர்க்காலம். தலா ஒண்ணேகால் ஏக்கர் புடலைச் சாகுபடியில் 30 டன் காய்கள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ சராசரியாக, 10 ரூபாய் விலை போச்சு. அதன் மூலம் 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. ஒண்ணேகால் ஏக்கர் பாகல் சாகுபடியில் 25 டன் காய்கள் கிடைச்சது. அதன் சராசரி விலை 20 ரூபாய். அதன் மூலம் 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஆக ரெண்டரை ஏக்கர் பந்தல் சாகுபடியில் மொத்தம் 8 லட்சம் ரூபாய் வருமானம். உழவு, குழி எடுக்க, அடிவுரம், இயற்கை இடுபொருள் கள், பறிப்புக் கூலி உட்பட எல்லாச் செலவும் போக 6 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது.

ரெண்டாவது முறையும் அதே மாதிரி லாபம் கிடைச்சது. மூன்றாவது முறை கொரோனா நேரத்துல விலை குறைஞ்சதுனால, 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. இப்ப காய்கள் ஓயுற தறுவாயில இருக்கு. பந்தல் சாகுபடியில எங்களுக்கு நிறைவான வருமானம் வந்துகிட்டு இருக்கு’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,
செல்வதுரை, செல்போன்: 88389 90827.

பந்தலில் பாகல்
பந்தலில் பாகல்

பந்தல் சாகுபடி

பாகல், புடலைச் சாகுபடி செய்யும் முறை குறித்துச் செல்வதுரை பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே பாடமாக...

பாகல் மற்றும் புடலையின் (குறும்புடல்) பயிர்க்காலம் 6 மாதங்கள். புடலை 45 - 50 நாள்களில் காய்ப்புக்கு வரும். பாகல் 60-நாள்களில் காய்ப்புக்கு வரும்.

பந்தல் அமைப்பு

வெளிப்புறச் சுற்றுப் பகுதியில் தலா 10 அடி இடைவெளியில் ஒரு கல்தூண் அமைக்க வேண்டும். உட்புறம் தலா 20 அடி இடைவெளியில் கல்தூண் அமைக்க வேண்டும். பாகல் வரிசைக்கு வரிசை 12 அடி, செடிக்குச் செடி 5 அடி இடைவெளியிலும், புடல் வரிசைக்கு வரிசை 15 அடி, செடிக்குச் செடி 5 அடி இடைவெளியிலும் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். குழியின் சுற்றளவு 2.5 அடி. அரையடி ஆழத்துக்குக் குழி எடுத்து, சுற்றிலும் அரையடி உயரத்குக் கரை அமைக்க வேண்டும். பாகல், புடலை இரண்டுக்கும் குழியின் அளவு ஒன்றுதான்.

இடுபொருள்கள்

நன்கு உழவு ஓட்டி ஏக்கருக்கு 3 டன் எரு, 500 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்துகொள்ள வேண்டும். அதைக் குழி எடுக்கப்போகும் பகுதியில் மட்டும் நீள் வரிசையாக நிரவிவிட்டு, குழி எடுக்க வேண்டும். குழி எடுக்கும் மண்ணைக் கொண்டு சுற்றிலும் அரையடி உயரத்துக்குக் கரை அமைக்க வேண்டும். வாரம் ஒரு முறை 130 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். அடுத்த வாரம், 130 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். மூன்றாவது வாரம் கழித்து, 130 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் புளித்தமோர், 500 மி.லி சூடோமோனஸ் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நான்கு இடங்களில் இனக்கவர்ச்சி பொறி அமைக்க வேண்டும்.

அனுபவப் பாடம்

‘‘நாங்க வாங்கிய சொட்டுநீர்க் குழாயில் தலா ஒரு அடி இடைவெளியில் மிகச் சிறிய துளை இருந்துச்சு. சிறு சிறு சொட்டுகளாக மிகவும் மெதுவாக நீர் சொட்டிச்சு. சொட்டின உடனே நீர் மண் காய்ஞ்சுடும். இதனால கொடிகளோட வேர்ப்பகுதிக்குத் தண்ணீர் கிடைப்பது சிரமமா இருந்தது. நாள் முழுக்கத் தண்ணீர் பாய்ஞ்சாலும் கொடிகளோட வேர்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறதில்ல. தண்ணீரும் அதிகமா விரயமாச்சு. இதற்கு மாற்றாகப் புதிதாகக் குழாய் வாங்கி, தலா 5 அடி இடைவெளியில், பெரிய துளை உருவாக்கி, தேவையான அளவுக்குத் திறந்து மூடும் வகையில் திறப்பான் அமைச்சோம். தினமும் அரைமணி நேரம்தான் சொட்டுநீர் மூலம் தண்ணீர் கொடுக்கிறோம். எப்போதும் மண்ணில் ஈரம் இருந்துகொண்டே இருக்குது. தண்ணீரும் சிக்கனமாகுது. இதுவும் கேத்தனூர் பழனிச்சாமி ஐயா சொன்ன ஆலோசனைதான்’’ எனச் சிலாகிக்கிறார் செல்வதுரை.