Published:Updated:

நேரடி விற்பனையில் மாதம் ரூ. 60,000 லாபம்... ‘பலே’ பலபயிர் சாகுபடி!

பலபயிர் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
பலபயிர் சாகுபடி

மகசூல்

நேரடி விற்பனையில் மாதம் ரூ. 60,000 லாபம்... ‘பலே’ பலபயிர் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
பலபயிர் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
பலபயிர் சாகுபடி
ஞ்சாவூர்-நாஞ்சிக்கோட்டை சாலையில் அண்ணாநகர் முருகன் கோயில் எதிரில் அமைந்துள்ளது ஸ்ரீகாமதேனு இயற்கை அங்காடி. அங்குள்ள ‘நஞ்சில்லா கரும்புச் சாறு’ என்ற பெயர்ப் பலகை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. தன் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த கரும்பிலிருந்து சாறு பிழிந்து, அதோடு புதினா, எலுமிச்சைச் சாறு, இஞ்சி கலந்து விற்பனை செய்கிறார் விவசாயி முருகன்.

25.11.2013 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியான ‘சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்’ என்ற கட்டுரைமூலம் ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் முருகன். தஞ்சாவூர் உச்சிமாஞ்சோலை கிராமத்தில் குத்தகை நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறார். இவரது உளுந்து சாகுபடி அனுபவம் குறித்து முன்பு எழுதியிருந்தோம். ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கிய இவர், படிப்படியாக விரிவுபடுத்தி, தற்போது 3 ஏக்கரில் பலபயிர் சாகுபடி செய்து, விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்து வருகிறார்.

கரும்புச்சாறு பிழியும் பணி
கரும்புச்சாறு பிழியும் பணி

அங்காடியில் கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ‘‘கரும்புச்சாறு உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆனா, பெரும்பாலும் ரசாயனத்துல விளைவிச்ச கரும்புல இருந்து பிழியுற சாறுதான் நிறைய இடங்கள்ல விற்பனை செய்யப்படுது. ஆனால், நான் என்னோட தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச கரும்புல இருந்து சாறு பிழிஞ்சி விற்பனை செய்றேன். நான் உற்பத்தி செய்ற கரும்பை, அப்படியே விற்பனை செய்யாமல், அதைப் பிழிந்து சாறாக்கி விற்பனை செய்றதுனால, கூடுதல் லாபம் கிடைக்குது. நான் ஐஸ் கலக்காம கரும்புச்சாறு விக்கிறதுனால, என்ன மழை பெய்ஞ்சாலும் மக்கள் விரும்பிக் குடிக்குறாங்க’’ என்றவர் நமக்கும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

நாம் குடித்தவுடன் பேசத் தொடங்கியவர், ‘‘ஆலைக்கரும்புச் சாறு ஒரு டம்ளர் (250 மி.லி) 15 ரூபாய். பொங்கல் கரும்புனு சொல்ற கறுப்புக் கரும்புச் சாறு ஒரு டம்ளர் 20 ரூபாய். கறுப்புக்கரும்புச் சாறுலதான் பலன்கள் அதிகம். அதோடு சுவையும் நன்றாக இருக்கும்’’ என்றவர் வாடிக்கையாளர்களுக்குக் கரும்புச் சாறு கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

இயற்கை அங்காடியில் முருகன்
இயற்கை அங்காடியில் முருகன்

‘‘நான் விவசாயம் செய்யுறது செம்மண்ணும் மணலும் கலந்த நிலம். மொத்தம் 3 ஏக்கர். வருஷத்துக்கு 40,000 ரூபாய் குத்தகை கொடுக்குறேன். என்கிட்ட சொந்தமா மாடுகள் கிடையாது. சுற்றுவட்டார விவசாயி கள்கிட்ட இருந்து சாணம், கோமியம் வாங்கிக்கிறேன். சாறு எடுத்த கரும்புச் சக்கைகளை என்னோட தோட்டத்துக்கே உரமாக்கிவிடுவேன். கசடுகளா இருக்கும் கரும்புச்சாறைப் பஞ்சகவ்யாவுக்குப் பயன்படுத்திக்குறேன். வெறும் 25 சென்ட் பரப்புலதான் கரும்புச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதுலயே நிறைவான லாபம் கிடைக்கிது. தினமும் காலையில 8-12, சாயந்தரம் 6-8 மணிவரைக்கும்தான் கடை திறந்து வெச்சிருப்பேன்” என்றவர் பண்ணைக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கே பேசியவர்,

“கரும்புச்சாறு மட்டுமல்ல, என்னோட தோட்டத்துல கிடைக்கிற, வாழைப்பழம், வாழைக்காய், தேங்காய், வெண்டி (வெண்டைக்காய்), கத்திரி, கொத்தவரை, பாகல், புடலை, கீரை, புதினா, பப்பாளி, கொய்யானு இன்னும் பலவிதமான பொருள்களை விற்பனை செய்றேன். இதனால நிறைவான வருமானம் பார்க்குறேன. எனக்குனு சொந்தமா ஒரு ஏக்கர் நிலம்கூடக் கிடையாது. நம்மாழ்வார் ஐயாவோட வழிகாட்டுதல்தான் என்னை ஒரு இயற்கை விவசாயியா நடைபோட வெச்சிருக்கு. ‘ஒத்தப்பயிரு மட்டும் சாகுபடி செஞ்சா விவசாயிகள் மகிழ்ச்சியா வாழ முடியாது... பலபயிர் சாகுபடிதான் விவசாயிகளுக்குப் பல விதங்கள்லயும் ஒத்தாசையா இருக்கும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வாரு.

கரும்புச் சாகுபடி
கரும்புச் சாகுபடி

இதுமாதிரி அவரோட பல தாரக மந்திரங்களாலதான், நான் இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கேன்’’ என்றவர் வருமான கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

“ஒன்றரை ஏக்கர்ல 100 தென்னை மரங்கள் இருந்துச்சு. கஜா புயல்ல, 40 மரங்கள் சேதமாயிடுச்சு. இப்ப 60 தென்னை மரங்கள் இருக்கு. இதுக்குனு தனியா நான் எந்த இடுபொருள்களையுமே கொடுக்குறதில்லை. வாழைக்குக் கொடுக்கக்கூடிய ஊட்டத்துலயே தென்னை செழிப்பா வளர்ந்து, ஒரு மரம் வருஷத்துக்கு 180 காய்கள் வீதம் மகசூல் கொடுக்குது. ஒரு மரத்துல இருந்து ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை காய்கள் வெட்டுவேன். 60 மரங்களையும் ரெண்டு பகுதிகளா பிரிச்சு, ஒவ்வொரு மாசமும் ஒரு பகுதியில காய் வெட்டுவேன். மரத்துக்கு 30 காய்கள் வீதம் 30 மரங்கள்ல இருந்து 900 காய்கள் அறுவடை செய்றேன். தேங்காய்களை நேரடியா விற்பனை செய்றதுனால, ஒரு தேங்காய்க்கு 15 ரூபாய் விலை கிடைக்குது. 900 காய்கள்மூலம் 13,500 ரூபாய் வருமானம் கிடைக்குது.

வாழைமரங்கள்
வாழைமரங்கள்

வாழைக்காய் வருமானம்

தென்னையில ஊடுபயிராக 600 வாழை மரங்கள் இருக்கு. மாதம்தோறும் 50 தார்கள் அறுவடைக்கு வர்ற மாதிரி திட்டமிட்டு, வெவ்வேறு மாதங்கள்ல, வெவ்வேறு நாள்கள்ல கன்றுகளை நடவு பண்ணியிருக்கேன். காய்கள் விற்பனைக்காக 50 மொந்தன், பழமாக விற்பனை செய்றதுக்காக, பூவன், ரஸ்தாலி, ஏலக்கி, பச்சைநாடன், கற்பூரவள்ளி ரகங்கள்ல 550 வாழையும் சாகுபடி செஞ்சிருக்கேன். மாசம் 50 மொந்தன் தார்கள், 45 மற்ற ரகத் தார்களை அறுவடை செய்வேன். மொந்தன் வாழையில ஒரு தாருக்குச் சராசரியா 70 காய்கள் இருக்கும். ஒரு காய் 4 ரூபாய் விலையில, தாருக்கு 280 ரூபாய் கிடைக்கும். 5 தார் மூலமா 1,400 ரூபாய் கிடைக்கும்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

இயற்கையில் பழுத்த வாழை

பழத்துக்கான வாழைத்தார்ல ஏதாவது ஒரு காய் மஞ்சள் நிறத்துக்கு மாறினாதான் அறுவடை செய்வேன். நான் பெரும்பாலும் தார்களா விற்பனை செய்றதில்லை. சீப்பாகவும், உதிரி பழங்களாகவும் விற்பனை செய்றேன். ஒரு பழம் கேட்டால்கூட, எடை போட்டுத்தான் விற்பனை செய்றேன். சராசரியா ஒரு கிலோ 60 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். ஒரு தார்ல இருந்து குறைந்தபட்சம் 8 கிலோ பழம் கிடைக்கும். அதன் மூலம் ஒரு தாருக்கு 480 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு மாசத்துக்கு 45 தார்கள்மூலம் 21,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக வாழை, வாழைக்காய், பழங்கள் விற்பனை மூலமா மாசம் 23,000 ரூபாய் வருமானம் கிடைக்குது” என்றவர் காய்கறி வருமானம் பற்றிப் பேசினார்.

வெண்டை
வெண்டை

கீரை, காய்கறிகள்

“50 சென்ட்ல வெண்டி, கத்திரி, கொத்தவரை, பொரியல் தட்டைப்பயறு, முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங் கண்ணி, புளிச்சக்கீரை, புதினாவும் சாகுபடி செய்றேன். ஒரு சில காய்கள் தினம்தோறும் விற்பனைக்குக் கிடைக்காது. இருந்தாலும், தினமும் குறைந்தபட்சம் 10 கிலோ காய்கள் விற்பனை செய்றேன். ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. 10 கட்டு புதினா விற்பனைமூலம் 100 ரூபாயும், 20 கட்டுக் கீரைகள் மூலம் 350 ரூபாயும் தினமும் வருமானம் கிடைக்குது. காய்கறிகள், கீரைகள், புதினா விற்பனைமூலம் மாசத்துக்கு (26 நாள்கள்) 24,700 ரூபாய் வருமானம் கிடைக்குது.

நேரடி விற்பனையில் மாதம் ரூ. 60,000 லாபம்... ‘பலே’ பலபயிர் சாகுபடி!

தினமும் கறுப்புக்கரும்புச் சாறு 3.5 லிட்டர் விற்பனை செய்றேன். லிட்டருக்கு 80 ரூபாய் வீதம் 280 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆலைக் கரும்புச்சாறு 15 லிட்டர் விற்பனை செய்றேன். லிட்டருக்கு 60 ரூபாய் வீதம் 900 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மொத்தம் கரும்புச் சாறு விற்பனைமூலம் தினமும் 1,180 ரூபாய் வருமானம் கிடைக்குது. இஞ்சி, புதினா, எலுமிச்சை சாறு, மின்சாரச் செலவு 80 ரூபாய் போக, தினமும் 1,100 ரூபாய் லாபம் கிடைக்குது. மாசத்துல நாலு நாள் விடுமுறை போக, மாசத்துக்கு 28,600 ரூபாய் லாபம் கிடைக்குது.

தோட்டத்துல தானாக முளைச்ச 10 பப்பாளி மரங்கள்ல இருந்து மாசம் 20 கிலோ பழங்கள் விற்பனைக்குக் கிடைக்குது. கிலோவுக்கு 40 ரூபாய் வீதம் 800 ரூபாய் வருமானம் கிடைக்குது. என்னோட தோட்டத்துல சுண்டைக்காய் செடிகள் 10 தானாக முளைச்சிருக்கு. அதுல இருந்து மாசத்துக்கு 10 கிலோ காய்கள் கிடைக்குது. கிலோவுக்கு 160 ரூபாய் வீதம் 1,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக எல்லாம் சேர்த்து மொத்தம் 92,200 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல குத்தகை, கடை வாடகை மற்ற செலவுகள்னு 31,850 ரூபாய் வரைக்கும் செலவாகிடும். மீதி லாபம்தான்’’ என்றவர் நிறைவாக,

‘‘நான் இதுல முழுநேரமா உழைக்குறேன். தேவைப்படும்போது வேலையாள்களையும் பயன்படுத்திக்குறேன். வாழைத்தார்கள், தேங்காய் எல்லாம் ஆள் வெச்சுதான் அறுவடை செய்றோம். என்னோட உழைப்பு, போக்குவரத்துச் செலவு, கடை வாடகை, குத்தகைத் தொகை எல்லாம் கணக்குப் பண்ணினால், எல்லாச் செலவும் போக, மாசம் 60,000 ரூபாய் நிகர லாபமாகக் கையில மிஞ்சும். விவசாயத்துல நாமளே உழைச்சு, நேரடியாக விற்பனை செஞ்சாதான் இந்தளவுக்கு லாபம் பார்க்க முடியும்’’ என்றபடி விடைகொடுத்தார் முருகன்.

தொடர்புக்கு, முருகன், செல்போன்: 94866 06351

ஆண்டு முழுவதும் கரும்பு!

ரும்புச் சாகுபடி குறித்துப் பேசிய முருகன், “10 சென்ட்ல பொங்கல் கரும்பும், 15 சென்ட்ல ஆலைக்கரும்பும் சாகுபடி செஞ்சிருக்கேன். பொங்கல் கரும்பைப் பொறுத்தவரைக்கும் குத்துக்குக் குத்து தலா 4 அடி இடைவெளி இருக்கு. மொத்தம் 270 குத்துகள். இதை மூன்று பகுதிகளாகப் பிரிச்சி, நாலு மாச இடைவெளியில நடவு செஞ்சேன். ஒவ்வொரு பகுதியில இருந்தும் நடவு செஞ்ச 8-12 மாசம் வரைக்கும் தினமும் 7 கிலோ கரும்பு அறுவடை செஞ்சி, சாறு பிழிஞ்சி விற்பனை செய்றேன். அறுவடை செஞ்ச குத்துகள்ல மறுதாம்பு வந்துக்கிட்டே இருக்கும்.

ஆலைக்கரும்பை பொறுத்தவரைக்கும் 15 சென்ட் பரப்புல, வரிசைக்கு வரிசை 3 அடி, குத்துக்குக் குத்து 2 அடி இடைவெளியில 1,080 குத்துகள் நடவு செஞ்சேன். இதையும் மூன்று பகுதிகளாகப் பிரிச்சி, தலா 4 மாச இடைவெளியில நடவு செஞ்சதுனால, வருஷம் முழுக்கப் படிப்படியா அறுவடை செய்ய முடியுது. ஆலைக்கரும்பு தினமும் 30 கிலோ அறுவடை செய்றேன்” என்றார்.

கரும்புச் சாகுபடி முறை!

ரையடி நீளம் கொண்ட விதைக் கரும்பைப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து, இதன் கணுக்கள் மண்ணுக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் களை பறித்து ஒரு குத்துக்குத் தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கை 2 கிலோ எருவுடன் கலந்து வைத்து மண் அணைக்க வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை பாசனநீரில் 25 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். குருத்துப்பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் தடுக்க நடவு செய்த 20-30 நாள்களில் தலா 50 மி.லி வேப்பெண்ணெய், புங்கெண்ணெயை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து, இதோடு 10 கிராம் காதிசோப் கலந்து தெளிக்க வேண்டும். நான்கு மாதங்கள்வரை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இரண்டு நாள்களுக்கு முன்னதாக இக்கரைசலைத் தெளிக்க வேண்டும். காரணம் பௌர்ணமி சமயத்தில் பூச்சிகளின் பெருக்கம் அதிகமாக இருக்கும். மாதம் ஒரு முறை 13 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். மாதம்தோறும் 13 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 4-ம் மாதம் களை பறித்து, ஒரு குத்துக்குத் தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கை 2 கிலோ எருவுடன் கலந்து வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்திலிருந்து படிப்படியாகக் கரும்பு அறுவடை செய்யத் தொடங்கலாம்.

தென்னை+வாழை!

“ஒ
ரு வரிசை விட்டு ஒரு வரிசை, ரெண்டு தென்னைக்கு நடுவுல, 12 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, தென்னை மட்டை, தேங்காய் உரிமட்டை, வாழைச்சருகு, காய்கறிக் கழிவுகள், களைச்செடிகளையும் அதுல போட்டு வைக்கிறேன். இது நல்லா மட்கி, உரமாகுறதோடு, ஈரத்தையும் சேமிச்சு வைக்குது. இந்த மட்க வெச்ச உரத்தைப் பயிர்களுக்குப் பயன்படுத்திக்கிறேன்.

வாழையைப் பொறுத்தவரைக்கும் மாசம் ஒரு தடவை 5 லிட்டர் பஞ்சகவ்யாவை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து பாசன நீர்ல கலந்துவிடுவேன். மாசம் ஒரு தடவை பாசன நீர்ல 200 லிட்டர் ஜீவாமிர்தமும் கலந்து விடுறேன். 15 நாள்களுக்கு ஒரு இடுபொருள் கொடுத்துக்கிட்டே இருக்குறதுனால, வாழை நல்லா வளமா இருக்கு. இது அஞ்சாவது வருஷ மறுதாம்பு. ஆனாலும்கூடத் தார்கள் நல்லா தரமா திரட்சியா கிடைக்குது” என்கிறார் முருகன்.

நேரடி விற்பனையில் மாதம் ரூ. 60,000 லாபம்... ‘பலே’ பலபயிர் சாகுபடி!

அன்பார்ந்த வாசகர்களே...

ஞ்சாவூர், உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் இவர், வாழை, கரும்பு, காய்கறிகள் எனப் பலபயிர் சாகுபடி செய்து வருகிறார். இவரது அனுபவங்கள் ‘நேரடி விற்பனையில் மாதம் 60,000 லாபம்... ‘பலே’ பயிர் சாகுபடி’ என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெறுள்ளது. அந்தத் தோட்டத்தை வாசகர்கள் நேரலையில் பார்வையிடலாம். 10.01.2021 அன்று மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பந்தப்பட்ட விவசாயியிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

இந்த லிங்க் மூலமும் கட்டணம் செலுத்தலாம் : https://bit.ly/3rmEg36

மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் எண் : 97909 90404

நேரடி விற்பனையில் மாதம் ரூ. 60,000 லாபம்... ‘பலே’ பலபயிர் சாகுபடி!

கட்டணம் செலுத்த இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism