பிரீமியம் ஸ்டோரி

‘‘பல்லாண்டுகள் பலன்தரும் தீவனப் பயிர்கள் பற்றிச் சொல்லுங்கள்?’’

ஆர்.ராதிகா, புதுச்சேரி.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தீவனப் பயிர் துறையின் பேராசிரியர் பதில் சொல்கிறார்.

‘‘பல ஆண்டுகளுக்குப் பலன் தரும் தீவனப் பயிர் ரகங்களைத் தீவனப் பயிர் துறை வெளியிட்டுள்ளது. கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்தத் தீவனப் பயிர்கள் வரப்பிரசாதமாக உள்ளன என்றால், அது மிகையல்ல. இந்தத் தீவனங்களைச் சாகுபடி செய்து, கால்நடை வளர்ப்பில் வெற்றிபெற்ற விவசாயிகள் தமிழகம் முழுவதும் உள்ளனர்.

பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்!

தீவனச்சோளம் கோ.எஃப்.எஸ்-29 இந்தியாவிலேயே மறுதாம்புக்கேற்ற பல்லாண்டுத் தீவனச்சோளமாகக் கருதப்படும் இது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து முதன்முறையாக 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகம் ஹெக்டேருக்கு ஓர் ஆண்டில் 175 டன் பசுந்தீவன விளைச்சலையும், 1,000 கிலோ விதை விளைச்சலையும் தரக்கூடியது. ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு முறை அறுவடை செய்யலாம். வறட்சியை ஓரளவு தாங்கி வளரக்கூடியது.

பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்!

தீவன மக்காச்சோளம் (ஆப்பிரிக்கன் நெட்டை) இந்த ரகத்தை விதைத்த 65 முதல் 75 நாள்களில் அறுவடை செய்யலாம். விளைச்சல் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன் கிடைக்கும். 100 முதல் 110 நாள்களில் விதை அறுவடை செய்யலாம். பால்கட்டும் தருணத்தில் கதிர் அறுவடை செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு அளிப்பதன்மூலம் பால் உற்பத்தித்திறனை மேம்படுத்தலாம்.

தீவனப்பயிர் துறையிலிருந்து வெளியிடப்பட்ட ரகங்களில் அதிக சுவையுள்ள, உயர் விளைச்சலைத் தரவல்ல தீவனப்பயிர் ரகமான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ (சி.என்)-4 2008-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகத்தின் உன்னதமான பண்புகளால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வரவேற்பைப் பெற்று அனைத்து உழவர்களாலும் பயிரிடப்பட்டு வருகிறது.

பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்!

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ (சி.என்)-4, இந்த ரகம் பல்லாண்டுத் தீவனப்பயிராகும். கோ-3 ரகத்தைவிடச் சுவையானது. தண்டு, இலைகள் மிருதுவானவை. ஓர் ஆண்டு விளைச்சலாக ஹெக்டேருக்கு 375 முதல் 400 டன் வரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 25 லட்சம் வரை தண்டு கரணைகளை உற்பத்தி செய்யலாம்.

கினியாப்புல், கோ (ஜிஜி)-3 இந்த ரகம் நிழலைத் தாங்கி வளரக்கூடியதால் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிட ஏற்றது. மென்மையான தண்டுகளை உடையது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டில் 320 டன் விளைச்சலைத் தரவல்லது. ஹெக்டேருக்கு ஐந்து லட்சம் வேர்க்கரணைகளை உற்பத்தி செய்யமுடியும்.

கொழுக்கட்டைப்புல், கோ-1, இந்த ரகத்தைப் பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரிச் சாகுபடி, மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டில் 40 டன் அளவில் பசுந்தீவன விளைச்சலைத் தரும்.

பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்!

குதிரைமசால், கோ-1, இந்த ரகத்தைப் பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். அதிக புரதச்சத்து (22.5%) அதிக செரிக்கும் தன்மை கொண்டது. மஞ்சள் கொடி ஒட்டுண்ணி தாக்குதல் அற்றது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டுக்கு 100 டன் பசுந்தீவன விளைச்சலைத் தரக்கூடியது. ஓர் ஆண்டுக்கு 12 முறை அறுவடை செய்யலாம். கால்நடைகளின் வளர்ச்சி, பால் உற்பத்திக்குத் தேவையான கால்சியம், முக்கிய வைட்டமின்கள் உள்ளன. கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணக் கூடியது.

வேலிமசால், ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது. அதிக விளைச்சலையும், வறட்சி யையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டுக்கு 125 டன் பசுந்தீவன விளைச்சலையும், 250 கிலோ விதை விளைச்சலையும் தரும்.

தட்டைப்பயறு, கோ (எப்.சி.)-8, இந்த ரகத்தை விதைத்த 60 முதல் 70 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும். ஹெக்டேருக்குப் பசுந்தீவன விளைச்சலாக 30 டன்னும் 625 கிலோ விதை விளைச்சலையும் கொடுக்கும்.

முயல்மசால், ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது. பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரிச் சாகுபடிக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. ஹெக்டேருக்கு 30 முதல் 35 டன்கள் பசுந்தீவன விளைச்சலையும், 50 கிலோ விதை விளைச்சலையும் தரும். தீவனப் பயிர்கள் குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.’’

தொடர்புக்கு, தீவனப்பயிர் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி: 0422 6611228.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு