Published:Updated:

கஜா புயலால் மரங்களை இழந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வெண்டை சாகுபடி!

பழனியப்பன்
பழனியப்பன்

`அப்பன் பாட்டன் வைச்ச மரங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சே. இனி கஞ்சிக்கு வழியென்ன பண்றதுன்னு கவலைப்பட்ட நேரத்துல நண்பர் ஒருவர் வெண்டை சாகுபடி பற்றிச் சொன்னார்.’

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, வாழ்வாதாரமாக விளங்கிய லட்சக்கணக்கான மரங்களை, ஒரே இரவில் கஜா புயல் கபளீகரம் செய்தது. இதனால் வருமானத்தை அடியோடு இழந்த விவசாயிகள், அடுத்து என்ன செய்வது... எப்படி வாழ்வது... குடும்பத்தை வழிநடத்த வருமானத்துக்கு என்ன தொழில் செய்வது... என்று தவியாய் தவித்து வந்தார்கள். அவர்களுக்கு வெண்டை சாகுபடி கற்பகதருவாய் கைகொடுத்து உதவுகிறது.

பழனியப்பன்
பழனியப்பன்

வேதாரண்யம் வட்டத்திலுள்ள செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நாலுவேதபதி, தேத்தாக்குடி, கத்தரிப்புலம் போன்ற பல்வேறு கிராமங்களில் தற்போது வெண்டை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த நாள்களில் விளைந்து அதிகளவு லாபத்தை தருகின்ற காய்கறிப் பயிராக இருப்பதால் இதை இப்பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்துவருகின்றனர். இதற்கு அதிகமாக தண்ணீர் தேவையில்லை என்பதோடு, குறைந்த நேர உழைப்பே போதுமானது. பயிரிட்ட 45-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பித்து 90-ம் நாள் வரை தினமும் பணம் தரும் பயிராக இருப்பதால் இப்பகுதிகளில் வெண்டை முக்கியத்துவம் பெறுகிறது.

வேதாரண்யம் அருகேயுள்ள பரவை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய காய்கறிச் சந்தைகளுக்கு, அறுவடை செய்த வெண்டைகளை தினமும் கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர். முடியாதவர்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்றுவிடுகிறார்கள். விவசாயிகளிடமிருந்து 1 கிலோ வெண்டைக்காய் ரூ.20-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

பழனியப்பன்
பழனியப்பன்

செம்போடையில் பழனியப்பன் என்ற விவசாயி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் கீழ் வெண்டை, கத்திரி, சுண்டைக்காய், புடலை, நிலக்கடலை, பூசணி போன்ற காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்துவருகிறார். கஜா புயலால் நூற்றுக்கணக்கான மா, தென்னை மரங்களை இழந்த அவர், தற்போது மரங்களை அப்புறப்படுத்திய இடத்தில் வெண்டை பயிரிட்டுள்ளார்.

பழனியப்பனைச் சந்தித்தோம்.

``நான் அரை ஏக்கர் வெண்டை சாகுபடி செய்றேன். கும்பகோணத்தில் தனியார் நிறுவனத்தில் ஹைபிரைட் விதை வாங்கி, நிலத்தைப் பண்படுத்தி அதில் மாட்டுச்சாணத்தை எருவிட்டு விதைகளை நடவு செய்றேன். அதிகம் தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. 15-ம் நாள் மீண்டும் மாட்டுச் சாணம் வேப்பம்புண்ணாக்கு கலந்து மேலுரமாய் தர்றேன். 40-ம் நாள் வேப்பம் புண்ணாக்குடன் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் கலந்த 17:17;17 கலப்புரத்தை உரமாக இடுறேன். பூச்சி மருந்து அடிக்கறதில்லை. காய்ப்பூச்சிகளைக் கையாலயே எடுத்து நசுக்கிடுவோம். 45-ம் நாள் முதல் காய் காய்க்க ஆரம்பிச்சிடும். தினமும் காலையில் பறிச்சி, இடைத்தரகர்களிடம் தராமல் நேரிடையாக பரவை காய்கறிச் சந்தையில் கொண்டுபோய் விற்கிறேன். கிலோ ரூ 20-க்கு விலை போகுது. இந்தச் சாகுபடிக்கு மொத்தமா ரூ.15,000 செலவாகிருக்கு. 90-ம் நாள் வரை காய்க்கும். செலவு போக ரூ.20,000 லாபம் கிடைக்கும். வெண்டையை ஆண்டு முழுவதும் தொடர்ந்து பயிர் செய்யலாம். சம்பள ஆள் வைச்சிக்கிடறதில்ல. நானும் என் மனைவியும் பாடுபடறோம். அதற்கேற்ற பலனிருக்கு" என்றவர் சற்று நிதானித்து தழுதழுத்த குரலில் பேச்தைத் தொடர்ந்தார்.

வெண்டை சாகுபடி
வெண்டை சாகுபடி

``அப்பன் பாட்டன் வைச்ச மரங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சே. இனி கஞ்சிக்கு வழியென்ன பண்றதுன்னு கவலைப்பட்ட நேரத்துல நண்பர் ஒருவர் வெண்டை சாகுபடி பற்றிச் சொன்னார். அதுபற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். இத்துடன் கத்திரி, புடலை, வெள்ளரி, கடலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பயிர் பண்றேன். இவற்றை எல்லாமே முழுக்க முழுக்க செயற்கை உரங்களைப் பயன்படுத்தாம இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஆசைப்படறேன். அதற்கான பயிற்சியைப் பெற அரசு விவசாயத் துறையை நானும் அணுகலை. அவர்களும் கஜா புயலடிச்சி இவ்வளவு நாள் ஆகியும் எங்களை எட்டிக்கூட பார்க்கலை. என்னைப்போல நிறைய காய்கறி விவசாயிகள் இப்போ புதுசா உருவாகியிருக்கோம். எங்களுக்கு வேண்டிய ஆலோசனையும், உதவியும் வேளாண்மைத்துறை செய்து தந்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்" என்று முடித்தார்.

``கஜா புயலால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து, காய்கறி சாகுபடி செய்துகொண்டிருக்கும் விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை முறையிலான விவசாயம் செய்யப் போதுமான பயிற்சி முகாம் நடத்தலாமே" என்று வேதாரண்யம் தோட்டக்கலைத்துறை தொடக்க வேளாண்மை அலுவலர் வைரவமூர்த்தியிடம் கேட்டோம்.

வெண்டை சாகுபடி
வெண்டை சாகுபடி

``மரங்களை இழந்து தவிக்கும் வேதாரண்யம் வட்ட விவசாயிகளுக்கு இலவசமாய் வழங்க சுமார் ஐம்பதாயிரம் மா, முந்திரி போன்ற மரக்கன்றுகள் வந்துள்ளன. கீரை, வெண்டை, பாகல், புடலை, கொத்தவரை உள்ளிட்ட அனைத்துக் காய்கறி ஹைபிரைடு விதைகளும் தயார் நிலையில் உள்ளன. இரண்டு போட்டோவுடன் நிலம் உரிமைக்கான சிட்டா நகல் சமர்ப்பிக்கும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாய் வழங்கக் காத்திருக்கோம். அதிக மகசூல் பெறவும் லாபம் அடையவும் பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதால் ஹைபிரைடு விதைகளைத் தருகிறோம். இயற்கை முறையிலான சாகுபடியை விரும்பும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அதற்கான பயிற்சியை வழங்கலாம். நல்ல நோக்கம்தான். இதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. இதுபற்றி உயரதிகாரிகளிடம் பேசி விரைவில் ஆகவேண்டியதைச் செய்கிறேன் " என்றார்.

Vikatan
பின் செல்ல