பிரீமியம் ஸ்டோரி

‘உணவே மருந்து’ என்ற உன்னதப் பழக்கத்தை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள், நம் முன்னோர். அப்படி அவர்கள் வகைப்படுத்திய ஓர் உணவுப்பொருள்தான் கீரை. மனிதர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பலவித சத்துகள் கீரைகளில் நிரம்பியுள்ளன. அதோடு, பயிரிடும் விவசாயிகளுக்கும் சத்தான வருமானம் தந்து கொண்டிருக்கின்றன, கீரைகள்.

தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி, இந்தியாவிலிருந்து வெப்ப மண்டல நாடுகளுக்குப் பரவிய பயிர், கீரை. விலங்குகளை வேட்டையாடி உண்டுவந்த கற்கால மனிதர்கள், இலைதழைகளை உண்ண ஆரம்பித்தபோது... அவர்களின் பிரதான உணவு, இயற்கையாக விளைந்து கிடந்த கீரைகள்தான். இன்றளவும், குறைவான விலையில் கிடைக்கும் ஆரோக்கியம் மிகுந்த விளைபொருள், கீரைதான்.

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயிகள் கீரையைச் சாகுபடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். பொதுவாக ஒரு பயிர், சத்துகளை வேர் வழியாகத் தண்டுக்குக் கடத்தும். அங்கிருந்து இலைகள் வழியாகப் பூக்களுக்கும், தொடர்ந்து காய், கனிகளுக்கும் சத்துகள் கடத்தப்படும். ஆனால் கீரைகளில், இந்தச் சத்துகள் அனைத்தும் இலைகளிலேயே தங்கி விடுகின்றன. அதனால்தான் கீரைகளில் சத்துகள் நிறைந்துள்ளன.

கீரைகள் மூலமாக நல்ல வருமானம் ஈட்ட முடியும். பலர் கழிவுநீரில் கீரைகளைச் சாகுபடி செய்கிறார்கள். அதுவும் தவறு.

தகுந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சாகுபடி செய்தால், கீரைகள் மூலமாக நல்ல வருமானம் ஈட்ட முடியும். கீரைகளைச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே…

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

“எந்தவகைப் பயிராக இருந்தாலும், ரசாயன உரம் பயன்படுத்திச் சாகுபடி செய்யும்போது, மண்ணில் உள்ள கடின உலோகங்கள் இலைகளில்தான் சேகரமாகும். இலைகளை நாம் உண்ணும்போது இலைகளில் சேர்ந்திருக்கும் கடின உலோகங்களால் நமக்குச் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

பொதுவாக நாம், விளைபொருள்களில் காய், பழம் போன்றவற்றைதான் சாப்பிடுகிறோம் என்பதால் பிரச்னை இல்லை. ஆனால், கீரையில் இலைகள்தான் உணவுப்பொருள். ரசாயன உரம் பயன்படுத்திச் சாகுபடி செய்த கீரைகளைச் சாப்பிட்டால் உடலுக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், கீரைகளைக் கண்டிப்பாக இயற்கை வேளாண்மை முறையில்தான் சாகுபடி செய்ய வேண்டும். பலர் கழிவுநீரில் கீரைகளைச் சாகுபடி செய்கிறார்கள். அதுவும் தவறு. கழிவுநீரில் இருக்கக்கூடிய நைட்ரஜன், ஆர்சனிக், நிக்கல் ஆகியவை நேரடியாக இலைகளில் சேர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது.

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

கீரைகளை 25 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம். கீரை அனைத்து மண் வகைகளிலும் நன்றாக வளரும் என்றாலும் சிறிது அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு வகை மண் சிறந்தது. நீர் தேங்காத மேட்டுப்பாங்கான நிலங்கள் சிறந்தவை. கீரையை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 அலகுள்ள இடங்களில் நன்றாக வளரும் என்றாலும், 5.5 அலகுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.

‘‘கீரைச் சாகுபடி செய்யப்படும் மண் 10 சென்டிமீட்டர் ஆழத்துக்குக் கட்டிகள் இல்லாமல் பொலபொலப்பாக இருக்க வேண்டும்.’’

கீரைகளின் வேர் 5-10 சென்டிமீட்டர் ஆழம் வரைதான் நிலத்துக்குள் போகும். பூப்பதற்கு முன்பாக இலைகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதால், வேர் நன்றாகப் பரவினால்தான் அதிக இலைகள் கிடைக்கும். அதனால், சாகுபடி செய்யப்படும் மண் 10 சென்டிமீட்டர் ஆழத்துக்குக் கட்டிகள் இல்லாமல் பொலபொலப்பாக இருக்க வேண்டும். அதனால், விதைப்புக்கு முன், சாகுபடி நிலத்தை, குறுக்கும் நெடுக்குமாக நன்றாக உழவு செய்ய வேண்டும்.

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

மண்ணில் நாம் இடும் உரங்களில் உள்ள மணிச்சத்து, தாவரத்தின் பூக்களில் சேகரமாகும். காய்களுக்குச் சாம்பல் சத்து தேவை. இலைகளுக்குத் தழைச்சத்து தேவை. கீரையில் இலைகள்தான் மகசூல் பொருள் என்பதால் தழைச்சத்து அதிகம் தேவைப்படும். அதனால், விதைப்புக்கு முன்பாக, சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை விதைத்து, அதைப் பூக்கும் தறுவாயில் மடித்து உழவு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண் பொலபொலப்பாகும் வரை நிலத்தை உழுது தயார்படுத்திய பிறகு… ஒரு ஏக்கருக்கு 150 கிலோ ராக் பாஸ்பேட், 5 டன் தொழுவுரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 800 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை இட்டு ஓர் உழவு செய்து, 2 மீட்டர் நீளம், ஒன்றரை மீட்டர் அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியில் தண்ணீர் சரியாகப் பரவுமாறு மேடு பள்ளம் இல்லாமல் ஒரே மட்டமாக இருக்க வேண்டும். இவற்றுக்குச் சமஅளவு பாத்திகள் என்று பெயர். சமஅளவு பாத்திகளை அமைத்து விதைத்தால்தான் விதைகள் சரியாக முளைத்துப் பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்.

கீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது!

1 ஏக்கருக்கு 1 கிலோ விதை தேவைப்படும். 1 கிலோ அளவு விதைகளுடன் 2 கிலோ மணலைக் கலந்து விதைத்து, உடனே தண்ணீர் பாய்ச்சி, வைக்கோல் கொண்டு பாத்திகளை மூடிவிட வேண்டும். விதைத்த 3-ம் நாள், உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 5-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கத் தொடங்கும். நிலத்தில் எப்போதும் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் பாய்ச்சும்போது, பாத்தியில் ஒரு மெல்லிய படலமாக நீர் இருக்குமாறு பாய்ச்ச வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தெளிப்புநீர்ப் பாசனத்தில், இலைகளும் பூமியும் நனைந்தால் போதுமானது.

விதைத்ததிலிருந்து அறுவடை முடியும் வரை, பாசனத் தண்ணீரில் 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசல் ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். ஒவ்வொரு பாத்தியின் வாய்மடையிலும் 200 மில்லி ஜீவாமிர்தக் கரைசலை (10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி ஜீவாமிர்தம் கலந்த கரைசல்) கலந்து விட வேண்டும். தெளிப்புநீர்ப் பாசனம் செய்யப்படும் வயலில், உரத்தொட்டியில் மேற்சொன்ன அளவில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிடலாம். அமுதக்கரைசலுக்கும் இதே அளவுதான். ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசல் ஆகியவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் போது இலைகள் பச்சை நிறத்தில் அகலமாக வளரும். பச்சை நிறத்திலிருந்தால்தான் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவர்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

செடிகள் வளர்ந்து வரும்போது, ஒவ்வொரு செடிக்கும் 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்வகையில் செடிகளைக் கலைத்துவிட வேண்டும். போதுமான இடைவெளி இருந்தால்தான் இலைகள் அகலமாவதுடன் எடையும் அதிகரிக்கும். முளைக்கீரைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் செடிகளைக் கலைத்துவிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு அறுவடை முடிந்தபிறகும் அடுத்த விதைப்புக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 800 கிலோ மண்புழு உரம் இட வேண்டும்.

தொடர்புக்கு, செந்தூர்குமரன், செல்போன்: 94438 69408

பூச்சி, நோய் மேலாண்மை

கீரைகளைத் தாக்கும் பூச்சிகளில்… மாவுப்பூச்சி, தண்டு கூன்வண்டு, இலைப்புழு, இலைப்பேன், இலைத்துளைப்பான் ஆகியவை முக்கியமானவை. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் அல்லது பச்சிலைக் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நொச்சி இலை, தும்பை இலை, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும். அக்கரைசலை வடிகட்டிப் பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

நோய்களைப் பொறுத்தவரை வேரழுகல் பிரச்னை வர வாய்ப்புண்டு. வேப்பம் பிண்ணாக்கு இட்டு விதைத்தல், விதைநேர்த்தி செய்து விதைத்தல், சரியான அளவில் பாசனம் செய்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் வேரழுகல் நோயைத் தவிர்த்துவிடலாம்.

கீரை, குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர் என்பதால் பெரிதாகப் பூச்சி மற்றும் நோய்கள் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை.

கீரை ரகங்கள்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டு… கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5 ஆகிய கீரை ரகங்களை வெளியிட்டுள்ளது. இவைதவிர விவசாயிகளிடம் நிறைய ரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கேற்ப, பருவத்திற்கேற்ப அவை சாகுபடி செய்யப்படுகின்றன.

கோ-1: இது தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை என அழைக்கப்படுகிறது. 25 நாள்களில் அறுவடை செய்யலாம். கீரை வளரும்போது இளம் பருவத்தில் அதாவது 15 நாள்களுக்குள் அறுவடை செய்தால் அது முளைக்கீரை. 25 நாள்களுக்கு மேல் வளர்த்து அறுவடை செய்தால் அது தண்டுக்கீரை. 1 ஏக்கருக்கு 2.5 டன் முதல் 3 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கோ-2: இதுவும் தண்டுக்கீரைதான். 25 நாள்களில் அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு 4 டன் மகசூல் கிடைக்கும்.

கோ-3: இது கிள்ளுக்கீரை. 20 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் 3 மாதம் வரை அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கோ-4: தானியக்கீரை. இது ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் சிறப்பாக வளரும். வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வளரும். தமிழ்நாட்டில், இந்தக் கீரை விதைக்காக அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. விதையாக அறுவடை செய்தால் 1 ஏக்கருக்கு 1 டன் வரை மகசூல் கிடைக்கும். கீரையாக அறுவடை செய்தால், 1 ஏக்கருக்கு 10 டன் மகசூல் கிடைக்கும்.

கோ-5: இது சிவப்பு நிற தண்டுக்கீரை. முளைக்கீரையாக அறுவடை செய்தால் 1 ஏக்கருக்கு 4 டன் மகசூல் கிடைக்கும். 25 நாள்கள் வளர்த்துத் தண்டுக்கீரையாக அறுவடை செய்தால் 1 ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சத்துகள்

100 கிராம் கீரையில்… இரும்புச்சத்து 35 மில்லி கிராம், கால்சியம் 307 மில்லி கிராம், வைட்டமின் ஏ 83.40 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 99 மைக்ரோ கிராம், புரதச்சத்து 80 கிராம் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

அகத்தி, புளிச்சக்கீரை, பொன்னாங் கண்ணி, முளைக்கீரை ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் இருக்கிறது.

முருங்கைக்கீரை, பிண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது.

மணத்தக்காளி, பாலக்கீரை, அகத்தி, முருங்கை, வேளைக்கீரை ஆகியவற்றில் கால்சியம் அதிகளவில் உள்ளது.

பாலக்கீரை, பிண்ணாக்குக் கீரை, வேளைக்கீரை, லச்சைகட்டைக் கீரை, மணத்தக்காளி, குப்பைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.

பருவத்துக்கேற்ற கீரை ரகங்கள்

இளவேனிற்காலம் (மார்ச் முதல் ஏப்ரல் வரை) : அரைக்கீரை, புளிச்சக்கீரை.

முதுவேனிற்காலம் (ஏப்ரல் 15 முதல் மே மாத கடைசி வரை) : சிறுகீரை, பருப்புக்கீரை.

முன் குறுவை (ஜூன் மாதம்) : தண்டுக்கீரை, அகத்தி, பசலை.

பின் குறுவை (ஜூலை மாதம்) : சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை.

கார்காலம் (ஆகஸ்ட் மாதம்) : மூக்கிரட்டை, பிண்ணாக்குக் கீரை.

பின் கார்காலம் (செப்டம்பர் மாதம்) : அரைக்கீரை, பருப்புக்கீரை, பிண்ணாக்குக் கீரை.

முன்பனிக்காலம் (நவம்பர் முதல் டிசம்பர் 15 வரை) : அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, மூக்கிரட்டை.

பின்பனிக்காலம் (டிசம்பர் 15 முதல் பிப்ரவரி வரை) : சிறுகீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை, பாலக்கீரை.

கீரை வகைகள்

ருமுறை அறுவடை செய்யும் கீரைகள்: தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ்..

மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தொடர் அறுவடை செய்யும் கீரைகள்: அரைக்கீரை, பாலக் கீரை, மணித்தக்காளி, சுக்கான் கீரை, புளிச்சக்கீரை, கொடிப்பசலை, சிலோன் பசலை, முடக்கத்தான், கொத்தமல்லி. இவற்றை, 10 முதல் 15 முறை அறுவடை செய்யலாம்.

பல்லாண்டுக் கீரைகள்: முருங்கை, அகத்தி, புதினா, கறிவேப்பிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை.

விதைக்கும்போது… ஒரேமுறை அறுவடை செய்யும் கீரைகளை ஒரு பகுதியிலும், மூன்று முதல் நான்கு மாதங்களில் அறுவடை செய்யும் கீரைகளை மற்றொரு பகுதியிலும், பல்லாண்டுக் கீரைகளை வேறொரு பகுதியிலும் விதைப்பது நல்லது. பல்லாண்டுக் கீரைகளை நிலத்தின் ஓரமாகச் சாகுபடி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு