Published:Updated:

ஆடிப்பட்ட விலை முன்னறிவிப்பு!

தக்காளி ரூ.20, கத்திரி ரூ.31, வெண்டை ரூ.22...

பிரீமியம் ஸ்டோரி

முன்னறிவிப்பு

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம்மூலம், கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டை ஆகியவற்றின் விலை நிலவரங்கள்குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை ஆகியவை அறுவடைக்கு வரும்போது அவற்றுக்குக் கிடைக்கும் விலை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் இங்கே…

தக்காளி

இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில், ஐந்து சதவிகித அளவுக்கும் குறைவாகத்தான் தமிழ்நாட்டில் தக்காளி விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பருவங்களிலும் தக்காளிச் சாகுபடி செய்யப்பட்டாலும் ஆடிப்பட்டத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை விதைக்கிறார்கள். கோயம்புத்தூர் சந்தைகளுக்கு உடுமலைப்பேட்டை, ஆலந்துறை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துகிடவு ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வருகிறது. ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதக் கடைசி வரை கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து இருக்கும். இந்த நிலையில் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் தக்காளி அறுவடைக்கு வரும்போது, தரமான தக்காளியின் பண்ணை விலை ஒரு கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை இருக்கும்.

ஆடிப்பட்ட விலை முன்னறிவிப்பு!

கத்திரி

தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிகளவு விளைவிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் சந்தைகளுக்குப் பொள்ளாச்சி, நாச்சிபாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து கத்திரி வருகிறது. ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் கத்திரி அறுவடைக்கு வரும்போது, தரமான கத்திரியின் விலை ஒரு கிலோ 28 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை இருக்கும்.

வெண்டை

தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வெண்டை விளைவிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் சந்தைகளுக்குப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டை வருகிறது. ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் வெண்டை அறுவடைக்கு வரும்போது, தரமான வெண்டையின் பண்ணை விலை ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை இருக்கும்.

விவசாயிகள், மேற்கூறிய சந்தை நிலவர ஆலோசனைகளின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தொலைபேசி: 0422 2431405.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு