Published:Updated:

20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்!

மாடுகளுடன் சேதுநாதன்...
பிரீமியம் ஸ்டோரி
News
மாடுகளுடன் சேதுநாதன்...

கால்நடை

பார்க்கும் விவசாயிகளிடமெல்லாம், “விவசாயத்தில் கிடைக்கிற ஆத்ம திருப்தி வேற எந்த வேலையிலும் கிடைக்காது. என்னைப் பொறுத்தவரை விவசாயம் தொழில் கிடையாது. அது வாழ்வியல். மண்ணில் ரசாயன உரம் போடாதீங்க. மாடுகள் மூலம் இயற்கையா கிடைக்கிற மாட்டு எரு, மூத்திரம்னு பயன்படுத்துங்க” என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், திண்டிவனம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர். மிகுந்த ஈடுபாட்டோடு இயற்கை விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார் சேதுநாதன்.

தொழுவத்தில் மாடுகள்...
தொழுவத்தில் மாடுகள்...

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலூகாவில் உள்ள பட்டணம் கிராமத்தில் இருக்கிறது, சேதுநாதனின் பண்ணை. ஒரு காலைவேளையில் பண்ணையில் இருந்த சேதுநாதனைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தினமும் காலையிலும் மாலையிலும் பண்ணைக்கு வந்திடுவேன். நேரடியா விற்பனை செய்தா கூடுதல் லாபம் கிடைக்கும்.

“பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். சின்ன வயசிலேயே அப்பா, அம்மாகூடச் சேர்ந்து விவசாய வேலைகளை விரும்பிச் செய்வேன். எனக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கு. வழக்கறிஞர் பணியோடு விவசாயத்தையும் செய்திட்டிருந்தேன். ஆரம்பத்தில் நானும் அதிகளவு ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்தினேன். ஒரு கட்டத்தில் ‘பசுமை விகடன்’ புத்தகம் எனக்கு அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு இயற்கைக்கு மாறிட்டேன். மாட்டு எரு தேவைக்காக மாடு வளர்க்கலாம்னு முடிவு பண்ணி பத்து கலப்பின மாடுகளை வாங்கிட்டு வந்தேன். அந்தப் பத்து மாடுகள் பெருகி, இப்போ கன்னுக்குட்டிகளோடு சேர்த்து மொத்தம் 60 உருப்படிகள் இருக்கு. மாடுகள் பெருகிட்டதால பசுந்தீவனங்களையும் அதிகளவில் சாகுபடி செய்துகிட்டு இருக்கேன். மாடுகள் கொடுக்கிற பால் மூலமாவும் நல்ல வருமானம் கிடைச்சிட்டிருக்கு” என்ற சேதுநாதன், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

மாடுகளுடன் சேதுநாதன்...
மாடுகளுடன் சேதுநாதன்...

“இது கிணற்றுப்பாசனத்தோடு கூடிய 12 ஏக்கர் நிலம். இங்க கோ-4 மாட்டுத்தீவனம், வேலிமசால் ரெண்டையும் நடவு செய்திருக்கேன். பணியாளர்களுக்கான வீடு, பண்ணை வீடு, மாட்டுக் கொட்டகை எல்லாம் இருக்கு. இப்போ இங்க கிடைக்கிற பாலைத் தனியாருக்குத்தான் விற்பனை செய்திட்டிருக்கேன். நேரடியா விற்பனை செய்தா கூடுதல் லாபம் கிடைக்கும். ஒரு லிட்டர் 31 ரூபாய்னு என்கிட்ட கொள்முதல் செஞ்சு லிட்டர் 56 ரூபாய்னு நுகர்வோருக்கு விற்பனை செய்றாங்க. அதனால, நேரடியா விற்பனை செய்றதுக்கான முயற்சிகளை எடுத்திட்டிருக்கேன். வழக்கறிஞர் வேலை, அரசியல் வாழ்க்கைக்கு இடையில் தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகள் செய்றப்பவும், மாடு கன்னுக்குட்டிகளோட பொழுதைக் கழிக்கிறப்பவும் மனசுக்கு அமைதி கிடைக்குது. தினமும் காலையிலும் மாலையிலும் பண்ணைக்கு வந்திடுவேன். நானும் எல்லா வேலைகளையும் செய்வேன். அதனால, பண்ணையில ஏதாவது பிரச்னைகள் இருந்தா தெரிஞ்சிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘வழக்கறிஞர் வேலை, அரசியல் வாழ்க்கைக்கு இடையில் தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகள் செய்றப்பவும், மாடு கன்னுக்குட்டிகளோட பொழுதைக் கழிக்கிறப்பவும் மனசுக்கு அமைதி கிடைக்குது.’’

ஆரம்பத்தில் கூரைக் கொட்டகைதான் போட்டிருந்தேன். மாடுகள் பெருகின பிறகு, ஆஸ்பெட்டாஸ் கூரை அமைச்சிருக்கேன். நல்ல காற்றோட்டம் கிடைக்கிற மாதிரி அமைச்சிருக்கிறதால மாடுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. தினமும் பணியாளர்கள் கொட்டகையைச் சுத்தம் பண்ணிடுவாங்க. தரைப்பகுதியில் ரப்பர் ஷீட் அமைச்சிருக்கேன். மாடுகளோட சிறுநீர், தொட்டியில சேகரமாயிடும். அதை வெச்சு, இடுபொருள்களைத் தயார் பண்ணிக்கிறோம்.

20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்!

மாடுகளுக்காக ஆரம்பத்தில் செலவு செய்ததுதான். அதுக்கப்புறம் மாடுகளை வெளியில் வாங்கலை. இங்க இருக்கிற மாடுகளையும் விற்பனை செய்யலை. பக்கத்தில் இருக்கிற வயல்ல நெல் சாகுபடி செய்றேன். அதில் கிடைக்கிற வைக்கோலை மாடுகளுக்கு வெச்சிக்கிறேன்” என்ற சேதுநாதன் நிறைவாக வருமானம்குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்போ 30 மாடுகள் இருக்கு. அதுல எப்பவும் 20 மாடுகள் கறவையில் இருக்கும். இதுல சமீபத்தில் குட்டி போட்டு அதிகமா பால் கொடுக்கிற மாடுகளும் இருக்கு. வத்துக்கறவை மாடுகளும் இருக்கு. தினமும் 100 லிட்டர்ல இருந்து 150 லிட்டர் வரை பால் கிடைக்கும். 100 லிட்டருக்குக் குறையாது. ஒரு லிட்டர் 31 ரூபாய்ங்கிற கணக்கில் 100 லிட்டர் பால் மூலமா தினமும் 3,100 ரூபாய் வருமானம் கிடைக்குது.

 பண்ணையில்...
பண்ணையில்...

தீவனம், வேலையாள் சம்பளம் எல்லாத்துக்கும் சேர்த்து இதுல பாதிச் செலவாகிடும். அது போகத் தினமும் 1,500 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். இத்தனை மாடுகளை வெச்சிருக்கிற பண்ணைகளை ஒப்பிடுறப்போ, இது குறைவான லாபம்தான். பாலை நேரடி விற்பனை செய்றது, மதிப்புக்கூட்டுதல் மாதிரியான செயல்பாடுகள்ல இறங்கினா லாபம் ரெண்டு மடங்கு அதிகமாகும்” என்று சொல்லி விடைகொடுத்தார் சேதுநாதன்.

தொடர்புக்கு,

சேதுநாதன்,

செல்போன்: 94432 55481

சுத்தம் அவசியம்!

மாடுகள் நோய்வாய்ப்பட்டால், கொட்டகையிலிருந்து பிரித்துத் தனியாக வைத்துப் பராமரிக்க வேண்டும். பருவம் மாறும் காலங்களில் தடுப்பூசிகள் போட வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் குடற்புழு நீக்க மருந்துகளைத் தவறாமல் கொடுத்து வர வேண்டும். கொட்டகையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம், அடர்தீவனம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும். தினமும் போதுமான அளவுக்குச் சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழுவத்தில் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். கொட்டகையில் ஒவ்வொரு மாட்டுக்கும் தேவையான இடைவெளி இருக்க வேண்டும்.