ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

'கொஞ்சம் காய்கறிகள்... நிறைய மூலிகைகள்!' நடன இயக்குநர் சாண்டியின் மாடித்தோட்ட அனுபவம்!

சாண்டி - டாரதி சில்வியா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
சாண்டி - டாரதி சில்வியா தம்பதி

மாடித்தோட்டம்

"சென்னையிலேயே பிறந்து வளர்ந்த நாங்க, கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் விவசாயம், தோட்டம் என்கிற வார்த்தையெல்லாம் அதிகமா கேட்டதுகூட இல்ல. காலமும் பொறுப்பும்தான் நம்மளை மாத்தும்னு சொல்லுவாங்கள்ல. அதுபோல, எங்க பொண்ணுக்கு நல்ல உணவுகளைக் கொடுக்கணும்ங்கிற அக்கறையிலதான் ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமா கத்துக்கிறோம். அதுல ஒருபகுதிதான் வீட்டுத்தோட்டம்.

வீட்டுல சின்னதா தோட்டம் அமைச்சு, ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செஞ்சுக்கிறோம்” தங்களின் மாடித்தோட்டம் பற்றிப் பேசும் நடன இயக்குநர் சாண்டி, அவரின் மனைவி டாரதி சில்வியாவின் முகத்திலும் குரலிலும் பரவசம் ஊற்றெடுக்கிறது.

திரைத்துறையில் வளர்ந்து வரும் நடன இயக்குநரான சாண்டி, இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட பிரபலங்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது அவரின் வீடு. 1,300 சதுர அடி கொண்ட மாடியில் 60-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் காய்கறிகள், பழ வகை மரங்கள், மூலிகைகள் என வீட்டுக்குத் தேவையான அத்தியா வசியத் தாவரங்களை வளர்த்து வருகிறார். மழைக்கான அறிகுறிகளுடன் மேகக் கூட்டங்கள் திரண்டு வரவேற்ற ஒரு மாலை வேளையில் சாண்டி - டாரதி சில்வியா தம்பதியைச் சந்தித்தோம்.

சாண்டி - டாரதி சில்வியா தம்பதி
சாண்டி - டாரதி சில்வியா தம்பதி

“தோட்டம் வைக்க ஆசைப்பட்டதும், இப்போ தோட்டத்தை முழுமையா கவனிச்சுக்குறதும் இவங்கதான்” என்று மனைவியைப் பேசுமாறு கைகாட்டினார் சாண்டி. “இதுக்கு முன்னாடி இதே தெருவுல வேற வீட்டுல குடியிருந்தோம். சோதனை முயற்சியா அங்க சில செடிகளை வளர்த் தோம். எங்களோட இந்தச் சொந்த வீட்டுக்குக் கடந்த ஜனவரியில குடிவரும்போதே, மாடித்தோட்டம் அமைக்குற திட்டத்தோட தான் வந்தோம். அதுக்காகச் சில ஏற்பாடு களைச் செஞ்சோம். நிறைய நர்சரிகளுக்குப் போய் பார்த்ததுல, வீட்டுக்குத் தேவையான அவசியமான செடிகள் பத்தியும், தோட்டப் பராமரிப்புப் பத்தியும் ஓரளவுக்குத் தெரிஞ்சு கிட்டோம். மணல், சாண எரு, தேங்காய்

நார்க்கழிவு, வேப்பம் புண்ணாக்குக் கலந்த கலவையிலதான் செடிகளை வளர்க்கிறோம்’’ செடிகளைக் காட்டியபடியே ஆர்வமாகப் பேசத் தொடங்கினார் டாரதி சில்வியா.

ஆரோக்கியமான உணவு உற்பத்தி

‘‘முதல்ல கீரை, காய்கறிகள்னு ஆரம்பிச்சு, இப்போ பூக்கள், மரங்கள்னு ஓரளவுக்கு முழுமையான தோட்டமா மாத்தியிருக்கோம். முருங்கை உள்ளிட்ட சில தாவரங்கள் தொட்டியில வளரவே இல்ல. சரியா வளராத செடிகளை விட்டுட்டு, சோதனை முயற்சியா புதுப்புது செடிகளையும் மரங்களையும் வெச்சு பார்த்துக்கிட்டு இருக்கோம். வேர் பரவலுக்கு ஏதுவா மர வகைகளை மட்டும் பெரிய பிளாஸ்டிக் டிரம்ல வளர்க்குறோம். கீரை, பூ வகைத் தாவரங்களைச் சின்ன தொட்டியில வளர்க்குறோம். ஆரோக்கிய மான உணவுகளை முடிஞ்சவரைக்கும் உற்பத்தி செஞ்சுக்கணும்ங் கிறதுதான் எங்க முதல நோக்கம். அதனால, காய்கறிகளையும் மூலிகைகளையும்தான் அதிகமா வளர்க்கிறோம்” என்றவர், “உங்களோட அனுபவத்தைச் சொல்லுங்க” என்று உரையாடலைக் கணவரிடம் மடைமாற்றி விட்டார்.

செடிகளுக்குத் தண்ணீர் குழாய் மூலம் விட்டபடியே பேசிய சாண்டி, “உணவே மருந்துன்னு நம்ம முன்னோர்கள் சரியா சொல்லி வெச்சிருக்காங்க. குறிப்பா, பத்து வயசுக் குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்து, சந்தோஷமான சூழல்ல வளர்த்துட்டா, அதுக்கப்புறமா உடலளவிலும் மனதளவிலும் அவங்களோட வளர்ச்சி நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்க. பொண்ணுக்கு நல்ல உணவைக் கொடுக்குற தேடல்ல மூலிகை களோட பயன்பாடுகளையும் தெரிஞ்சு கிட்டோம். ‘செடிக்குத் தண்ணீர் விடுறேன்’னு எங்க பொண்ணு சுசானா, தண்ணீர்ல நனைஞ்சு பயங்கரமா ஆட்டம் போடுவா. மழையிலயும் விளையாடுவா. குழந்தையோட அந்தச் சந்தோஷங்களைத் தடுக்க மாட்டோம்.

மாடித்தோட்டத்தில் சாண்டி
மாடித்தோட்டத்தில் சாண்டி

குரல்வளம் காக்கும் புதினா துளசி

எங்க தோட்டத்துல வளர்ற திருநீற்றுப் பச்சிலை, கருந்துளசி, வெற்றிலை, கற்பூர வள்ளினு நாலு இலைகளையும் தண்ணியில கொதிக்க வெச்சு வடிகட்டி, வாரம் ஒரு முறை பொண்ணுக்குக் கொடுப்போம். நாங்களும் குடிப்போம். இதனால, ஜலதோஷ பாதிப்பு வராம இருக்கு, உடம்பும் நலமா இருக்கு. படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியூர் போறதால, தண்ணி மாத்திக் குடிச்சாலே என் குரல்வளம் பாதிப்படையும். அதனால, வீட்டுல இருக்குறப்பல்லாம் புதினா துளசி (mint tulsi) இலைகளைப் பறிச்சு சாப்பிடுவேன். தொண்டைக் கரகரப்பு சரியாகிடும். அடிக்கடி மொட்டைமாடியில தனிமையில உட்கார்ந்து, என்னோட சினிமா சம்பந்தமான வேலைகளைப் பத்தி நிறைய யோசிப்பேன்.

கோடைக்காலத்துல ரெண்டு வேளை, மத்த காலத்துல ஏதாச்சும் ஒரு நேரத்துல மட்டும் செடிகளுக்குத் தண்ணி விடுவோம். வீட்டுல இருந்தா, இந்த வேலையை நான்தான் செய்வேன். ஊரடங்கு நேரத்துல காலை யிலயும் சாயந்திரமும் மொட்டைமாடி யிலதான் அதிக நேரம் செலவிட்டோம்” என்பவரின் முகத்தில் சந்தோஷம் பூரிக்கிறது.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

குடற்புழு நீக்கும் சிறுகுறிஞ்சான்

தொடர்ந்து பேசிய டாரதி சில்வியா, “கால்சியம் சத்து அதிகமிருக்கப் பிரண்டை, எங்க தோட்டத்துல சிறப்பா வளருது. ஆரம்பத்துல அதிகமா தண்ணி விட்டோம். சரியா வளராம, செடிகள் வாட ஆரம்பிச் சுடுச்சு. இதுக்கு தண்ணி குறைவாதான் தேவைப்படும்ங்கிறதை இணையத்துல

பார்த்து தெரிஞ்சுகிட்டேன். இது மாதிரி ஒவ்வொரு படிப்பினையும் நெட்ல தேடியும், அனுபவம் மூலமாவும் தெரிஞ்சுக்கிறோம். வாரம் ஒருமுறை எங்க வீட்டுல பிரண்டை துவையல் பண்ணிடுவோம். குடற்புழு நீக்கத்துக்காக, சிறுகுறிஞ்சான் இலைகளோட சாற்றைத் தண்ணீர்ல கொதிக்க வெச்சு,

6 மாசத்துக்கு ஒரு தடவை பொண்ணுக்குக் கொடுத்து, நாங்களும் குடிப்போம். முடக் கத்தான், பசலைனு தினமும் ஏதாச்சும்

ஒரு கீரையை மிக்ஸியில அரைச்சு, அதை அரிசி மாவுல கலந்து செய்யுற தோசையை எங்க பொண்ணு விரும்பிச் சாப்பிடுவா’’ என்றவர் நிறைவாக,

‘‘முக்கனிகளும் இல்லாம ஒரு தோட்டம் எப்படி முழுமை யடையும்? பலா மாதிரியான மரங்களை நிலத்துலதான் வளர்க்க முடியும். அதனால, நிலத்துல விவசாயம் செய்ய ஆசையிருக்கு. சினிமாவுல நல்லா சம்பாதிச்சு, இவர்தான் என்னோட ஆசையை நிறைவேத்தணும்” என்றார்.

சாண்டி - டாரதி சில்வியா தம்பதி
சாண்டி - டாரதி சில்வியா தம்பதி

விவசாயிகளின் கஷ்டம் புரியுது

மனைவியின் பேச்சை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த சாண்டி, “போன், டிவினு குழந்தைங்க வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கக் கூடாது. தண்ணீர், செடின்னா குழந்தைங்க ரொம்பவே இஷ்டப்படுவாங்க. அதனாலேயே, குழந்தைகளுக்குச் செடி வளர்ப்பை ஊக்கப்படுத்தலாம். தோட்டத்துல தினம் தோறும் கிடைக்குற சாதக, பாதகங்களுக்கான காரணத்தைப் புரிய வெச்சுட்டாலே, எந்த விஷயமும் உழைப்பில்லாம கிடைக்காதுங்கிறதை குழந்தைங்க புரிஞ்சுப்பாங்க. விவசாயிகள் தங்களோட தோட்டத்தையும் அதுல விளையுற பயிர்களையும் ஏன் குழந்தை மாதிரி பார்த்துக்குறாங்கன்னு, இந்த மாடித்தோட்ட அனுபவத்துலதான் எங்களுக்குப் புரிஞ்சது. மாடித்தோட்டத்துல வளர்ற செடிகளோட எண்ணிக்கையைப் படிப்படியா அதிகப்படுத்தப்போறோம். நிலத்துல விவசாயம் செய்யணும்ங்கிற என் மனைவியின் ஆசையை இன்னும் சில வருஷங்கள்ல நிறைவேத்திடுவேன்” என்று மனைவியைப் பார்த்துப் புன்னகைக்க, மகிழ்ச்சியில் பூரிக்கிறார் சில்வியா.

உரமாகும் சமையலறைக் கழிவுகள்

மொட்டைமாடியில் பெரிய பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றில் சமையலறை கழிவுகளை மட்க வைத்து, அதை உரமாகப் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்துப் பகிர்ந்த டாரதி, “சமைச்சது, சமைக்காததுனு மட்கக்கூடிய எல்லா உணவுக்கழிவுகளையும் இந்த ட்ரம்ல போட்டு மண்ணைக் கிளறிவிட்டுடுவோம். இதுல இயற்கையாவே மண் புழுக்கள் உற்பத்தியாகுது. அதோட கழிவுகளும் சேர்ந்து இந்தக் கலவை இயற்கை உரமா மாறிடுது. அடியில தங்கியிருக்குற மண்ணை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து, எல்லாத் தொட்டிகள்லயும் உரம் மாதிரியே கொஞ்சம் கொஞ்சமா சேர்ப்போம். பூச்சித்தாக்குதல் ஏதாச்சும் இருந்தா, ஒரு லிட்டர் தண்ணியில 100 மி.லி வேப்பெண்ணெய் கலந்த கரைசலை தெளிச்சு விடுவோம்” என்றார்.