Published:Updated:

நாய்கள் ஜாக்கிரதை! வெளிநாட்டு நாய்களால் வரப்போகும் ஆபத்து!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

நாய்கள் ஜாக்கிரதை! வெளிநாட்டு நாய்களால் வரப்போகும் ஆபத்து!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

ருமமிகு சென்னையில்தான் இந்தியா விலேயே செல்லப்பிராணிகளுக்கான அதி நவீன மருத்துவமனை, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ளது. ஒரு முறை காலை நேரத்தில் இங்கு சென்றிருந்தபோது, வித விதமான நாய்களையும் அதை அழைத்து வரும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருக் கும்போது, நேரம் போவதே தெரியாமல் இருந்தது.

பெரும்பாலும் விலை உயர்ந்த கார்களில் தான், நாய்களை அழைத்து வந்தார்கள். கால்நடை மருத்துவரிடம் நுனிநாக்கு ஆங்கிலத்தில், தன் நாய்க்கு என்ன பிரச்னை என்று ஒரு பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார். முகம் தெரியாத அளவுக்குப் பொசு பொசுவென முடியுடன் இருந்த அந்த நாயை என்னுடன் வந்த புகைப்படக்காரர் படம் எடுக்க விரும்பி, ‘நாயைக் கொஞ்சம் மேலே தூக்கிக் காட்டுங்க’ என்றார்.

அவ்வளவுதான், அந்த இடமே ரணகள மாகிவிட்டது. அடுத்த நொடி அந்த நுனிநாக்கு ஆங்கிலப் பெண்மணி வாயிலிருந்து, சென்னை பாஷை சரளமாக வந்து கொட்டின. ‘இன்னாமே... என், பப்பியை நாய்னு சொல்ற...’ என்று அரை மணி நேரம் திட்டித் தீர்த்தார். அவரிடமிருந்து தப்பி, அறுவைசிகிச்சை செய்யும் அறைக்குச் சென்றோம். முன் அனுமதி பெற்றிருந்ததால் நாய்க்கு எப்படி அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது என்பதை நேரடியாகச் செய்து காட்டினார்கள். அந்த மருத்துவ மனையிலிருந்த கருவிகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. அங்கிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் மனிதர்களுக்கான ராஜீவ்காந்தி மருத்துவமனையில்கூட, இப்படியான கருவிகள் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

ஆடு, மாடு... போன்ற கால்நடைகளுக்கு விற்பனையாகும் தீவனம், மருந்துகளைக் காட்டிலும் செல்லப்பிராணியான நாய்களின் பராமரிப்புப் பொருள்களுக்கு உள்ள விற்பனைச் சந்தையின் மடங்கு பெரியது. சென்னையில் வெளிநாட்டு நாய்களை இனப்பெருக்கம் செய்து, அதை விற்பனை செய்து வசதியாக வாழ்பவர்கள் உண்டு. லாபகரமான தொழிலாகவும் நாய் வளர்ப்பு வளர்ந்து வருகிறது. வளர்ப்பு நாய்கள் பாராட்டி, சீராட்டி வளர்க்கப்படுகின்றன. ஆனால், தெரு நாய்களின் நிலை, சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இப்போது சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல நகர்ப்புறங்களில் ‘தெருநாய்கள் மனிதர்களைக் கடித்து விட்டன’ என்று நாளிதழ்களில் செய்திகள் தென்படுவதைப் பார்க்கலாம். ஏன் தெரு நாய்கள் கடிக்கின்றன..? என்பது பற்றிச் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நிபுணரான டாக்டர் ஆர்.கிஷோர்குமாரிடம் பேசினேன். அவர் சொல்லிய தகவல்கள் அனைவருக்கும் அவசியமானது.

``ஓநாய் இனத்தைச் சேர்ந்தவைதான், நாய்கள். ஓநாய்களைப் போலவே அவை வேட்டையாடும் கூட்டமாகச் செயல்படும். அந்த நாய் கூட்டத்தில் ஆல்பா ஆண் அல்லது ஆல்பா பெண் என்று சொல்லக்கூடிய தலைவன் அல்லது தலைவி, கூட்டத்துக்குத் தலைமை தாங்கும். ஒரு நாய் ஒருவரைத் துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய்க் காரண மின்றிக் கடிக்கும். இது இயற்கையாகவே நாய்களின் மரபணுவில் கலந்த ஒரு செயல்.

தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கியக் காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன. பெரும்பாலும் கிராமப் புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலைவாகவோதான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில் துப்புரவாளர்போலக் குப்பைகளில் தெருக் களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும். ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாகக் குடியிருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன. அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டன.

அடுத்ததாக, நாட்டு நாய்கள் என்று சொல்லக்கூடிய இந்தியன் நேட்டிவ் டாக் மிகவும் பழைமையான நாய் இனம். இது ஆசியா முழுக்கப் பரவி இருக்கிறது. இவை காரணமில்லாமல், மனிதர்களைக் கடிக்காது. நாம் வீடுகளில் வளர்க்கும், வெளிநாட்டு நாய்களான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு... போன்றவற்றை வீடு மாறும் போதோ, நம்மால் வளர்க்க முடியாத சூழ்நிலையிலோ தெருவில் விட்டு விடுகிறோம். அப்படி அவை தெருவில் விடப்படும்போது, அந்த நாய்களுக்கும் தெருவில் வசிக்கும் நாய்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்துவிடுகின்றன. இப்படிக் கலப்பினமாக உருவாகும் நாய்கள் கடிக்கும் சுபாவம் கொண்டதாக இருக்கும். காரணம், ஜெர்மன் ஷெப்பர்டு கடிக்கும் குணம் கொண்டவை. ஆகையால், வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இனக்கலப்பு அதிகமாக நடந்தால், நாட்டு நாய் இனம் அழிந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.

 கிஷோர் குமார்
கிஷோர் குமார்

மேலும், தெரு நாய்களில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் முரட்டுத்தனமாக இருக்கும். நாய்களின் மூளை பாதிக்கப் பட்டுள்ளதால் கண்ணில் தென்படுபவர்களை யெல்லாம் கடிக்கும் தன்மையோடு இருக்கும். தெரு நாய்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒருபோதும் நம்பாது. பொதுவாக, அறிமுகமில்லாதவர்களையே தெரு நாய்கள் கடிக்கும். நாய் இனங்கள் அனைத்துமே ஓர் உயிரினம் வேகமாக ஓடும்போது அதைத் துரத்திக் கடிக்கும் தன்மையுடையது. உதாரணத்துக்கு ஆடு, மாடு, கோழிகள்... வேகமாக ஓடினால், நாய்கள் பின்னால் துரத்திச் செல்லும். இதுபோல மனிதர்கள் இருசக்கர வாகனத்திலும், காரிலும் செல்லும் போது துரத்திப் பிடிக்க முயலும். நாய் துரத்தும்போது ஓடக் கூடாது. திரும்பி நின்று சத்தம் போட்டு மிரட்ட வேண்டும். அப்படி மிரட்டும்போது நாய்கள் திரும்பிப் போக வாய்ப்பிருக்கிறது. இன்னும் வேகமாக ஓடினால் வேகமாக நம்மைத் துரத்திப் பிடிக்க வாய்ப்புள்ளது.

தெருநாய்கள் தேவையில்லாமல் யாரையும் கடிக்காது. சில முக்கியமான உணர்வு தாக்குதலின் அடிப்படையிலேயே அவை கடிக்கும். உதாரணத்துக்கு வலி. காயம்பட்ட அல்லது தாக்கப்பட்ட வலியில் இருக்கும் போது அந்த நாயை நாம் தொடும்போதும், சீண்டும்போதும் வலியின் அடிப்படையில் நம்மைக் கடிக்க வாய்ப்புள்ளது.

இனப்பெருக்கக் காலத்தின்போது நிறைய நாய்கள் ஒரு பெண் நாய்க்காகச் சண்டை யிட்டுக்கொள்ளும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாயும் மிகவும் முரட்டுத் தனத்தோடு கூடிய கோபத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் நாய்களின் அருகே செல்லும்போது, கடிக்க வாய்ப்புள்ளது.

ஒரு பகுதியில் வாழும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அதன் எல்லையாகக் கருதிக்கொள்ளும். அப்படி இருக்கும் சமயத்தில் அந்த எல்லைக்குள் யாராவது முகம் தெரியாத நபர் வந்தால் அவர்களைக் கடிக்க வாய்ப்பு உள்ளது. இது தனது எல்லையைப் பாதுகாப்பதற்காகக் கடிக்கும்.

தெரு நாய்களுக்குப் பெரும்பாலும் உணவு கிடைக்காது. அரிதாகவே அவற்றுக்கு உணவு கிடைக்கும். அப்படி அவை உணவு உண்ணும் போது, தொந்தரவு செய்யக் கூடாது. அந்த உணவை நாம் பிடுங்கிவிடுவோம் என்ற பயத்தால் கடிக்க வாய்ப்புள்ளது’’ என்று பட்டியலிட்டுச் சொன்னார்.

கொரோனோ ஊரடங்கின்போது, தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்பட்டன. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநராக இருந்த, இப்போதைய தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ், தெரு நாய்களுக்கு மட்டுமல்லாமல், மாடுகளுக்கும் உணவு வழங்க தீயணைப்புத் துறையினருக்கு உத்திரவிட்டார். இப்போதும், தீயணைப்பு நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தெருநாய்களுக்கு, மாடுகளுக்கு உணவு வழங்கி பசிப்போக்கும் அறப்பணியைத் தீயணைப்புத் துறையினர் சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.