Published:Updated:

10 டன்னிலிருந்து 6 டன்; கொடைக்கானலில் குறைந்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு; நகராட்சியின் முயற்சி

கொடைக்கானல்

கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

10 டன்னிலிருந்து 6 டன்; கொடைக்கானலில் குறைந்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு; நகராட்சியின் முயற்சி

கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

Published:Updated:
கொடைக்கானல்

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலையில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவையினங்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களையும், பாலித்தீன் கவர்களையும் பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் வனஉயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் தொடர்ச்சியாக இருந்துவந்தது. அண்மையில் உயிரிழந்த காட்டெருமையின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததை அறிந்து மருத்துவர்களே திகைத்துப் போயினர்.

தண்ணீர் பாட்டில்கள்
தண்ணீர் பாட்டில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனைக் கருத்தில் கொண்டு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் 2019-முதல் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதையொட்டி உயர்நீதிமன்றமும் மலை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் கொடைக்கானலில் 21 வகையான நெகிழி வகைகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் கொடைக்கானலில் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்யும் ஊழியர்கள்
வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்யும் ஊழியர்கள்

இதுகுறித்து கொடைக்கானல் நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணனிடம் பேசியபோது, "கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொடைக்கானலுக்கான 9 செக்போஸ்ட்களிலும் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வருகிறார்களா எனச் சோதனையிட்ட பிறகே கொடைக்கானலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம். இதற்கென தனியாக பணியாளர்களை நியமித்துள்ளோம். இவ்வாறான சோதனையில் 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அரவை இயந்திரம் மூலம் தூளாக்கப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வரை 315 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் தூள் அனுப்பப்பட்டுள்ளது.

அரவிந்த் கிருஷ்ணன்
அரவிந்த் கிருஷ்ணன்

மேலும், கொடைக்கானலில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொள்கிறோம். பிளாஸ்டிக் விற்பனை செய்வோருக்கு 5 ஆயிரம் ரூபாயும், மொத்த விற்பனை செய்வோருக்கு 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கிறோம். கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

தண்ணீர் பாட்டில்களுக்கு முழுமையாக தடைவிதித்தாலும் பிரச்னை என்பதை கருத்தில் கொண்டு, 5 லிட்டர் தண்ணீர் பாட்டில்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறோம். அந்த பாட்டில்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் தூக்கி எறிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும், கொடைக்கானல் ஏரி பகுதி உள்பட 19 இடங்களில் வாட்டர் ஏடிஎம் மிஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மிஷின்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். 5 ரூபாய் செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் பிடித்துக் கொள்ள முடியும்.

குடிநீர் மிஷின்
குடிநீர் மிஷின்

காற்றில் இருந்து தண்ணீர்...

தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மிஷினில் குளிர்ந்த நீர், சூடான நீர், சாதாரண நீர் பிடிக்க முடியும். ஒரு நாளைக்கு இந்த மிஷின் மூலம் 500 லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய முடியும். இந்த நீரை சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொடைக்கானல்
கொடைக்கானல்

கொடைக்கானல் நகரில் உள்ள வர்த்த சங்கத்தினரை அழைத்து பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். சுற்றுலா பயணிகளிடமும் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கொடைக்கானலில் நாளொன்றுக்கு சராசரியாக 17 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டால், அதில் 10 டன் மக்காத குப்பை பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு 6 டன்னாக குறைந்துள்ளது. இப்போது படிப்படியாக கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism