Published:Updated:

`எந்தப் பொங்கலும் இப்படி இருந்ததில்ல!' - கனமழையால் டெல்டா விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்

விளைந்த நெல்லை அறுக்கவும் முடியாமல், அப்படியே வயலிலேயே விட்டு விடவும் முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

`தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சொல்லாடல். பயிர் செய்த நெல், தை மாதம் அறுவடைக்கு வந்து, விவசாயிகளின் வாழ்வில் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படை இந்த பொன்மொழி. ஆனால், இந்த ஆண்டு, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த வலியோடு பிறந்துள்ளது தை. கடந்த பத்து நாள்களாக கொட்டித் தீர்க்கும் ராட்சத மழையால், நெற்களஞ்சிய விவசாயிகளின் மனம் ரணமாகி கிடக்கிறது. கடந்த ஐந்தாறு மாதங்களாக, கடும் உழைப்பு, முதலீட்டு செலுத்தி பயிர்களை வளர்த்தெடுத்தார்கள். கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கிறது, ராட்சத கனமழை. கீழே சாய்ந்து, சேற்றில் புதைந்த நெற்பயிர்களை காப்பாற்ற வழி தெரியாமல் கண்ணீரில் சிக்கித் தவிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். பல லட்சம் ஏக்கர் நெல் வயல்கள், சேற்றுக் கடலாக காட்சி அளிக்கின்றன.

நெல்
நெல்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிவர், புரெவி புயலின் தாக்கத்தினால் கொட்டித்தீர்த்த கனமழையால், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்களை மூழ்கடித்தது. பதை பதைத்துப் போன விவசாயிகள், தங்களது நெற்பயிர்களை மீட்டெடுக்க, படாத பாடுபட்டார்கள். தண்ணீரை வடிய வைக்க முடியாத அளவுக்கு தொடர் மழை. வேர்கள் அழுகத் தொடங்கின. மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கிய பிறகுதான் சற்று நிம்மதியடைந்தார்கள்.

`குறைவான மகசூல் கிடைத்தாலும் பரவாயில்லை, எஞ்சியிருக்கும் நெற்பயிர்களையாவது காப்பாற்றலாம்' என நினைத்து, வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, உரமிட்டு, பயிரை மீட்டெடுத்தார்கள். கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாரானதும், மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில், மீண்டும் பேரிடியாய் இறங்கியுள்ளது ராட்சத தொடர் மழை. அதனால் மண்ணில் அடியோடு வீழ்ந்து கிடக்கும் நெற்பயிர்களைக் கண்டு, கண்ணீரில் தவிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். விளைந்த நெல்லை அறுக்கவும் முடியாமல், அப்படியே வயலிலேயே விட்டு விடவும் முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறார்கள்.

நெல்
நெல்
கிணறுகளை மூழ்கடித்த வெள்ளம்... மாநகராட்சி சார்பில் குடிநீர் லாரிகள்... நெல்லை நிலவரம் என்ன?

``இப்படி நடக்கும்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. எனக்கு இப்ப 47 வயசாகுது. எனக்கு விவரம் தெரிஞ்சி, தை பொங்கல் சமயத்துல இந்தளவுக்கெல்லாம் கன மழை பேஞ்சதே இல்லை. ரொம்ப வயசானவங்களே கூட, இந்த மாதிரி ஒரு பேய் மழையை, பொங்கல் நேரத்துல பார்த்ததே இல்லைனு சொல்றாங்க. எல்லாமே போச்சு. முதலுக்கே மோசமாயிடுச்சி. ஏக்கருக்கு ஒரு மூட்டை நெல்லுக்கூட தேறாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயிர்கள் அடியோடு கீழே சாஞ்சதுனால, கதிர்கள் சேத்துல மூழ்கி கிடக்கு. அறுவடை மிஷினை உள்ளாற இறக்க முடியாது. சேத்துல சிக்கி மிஷின் உக்காந்துக்கும். சேத்துல கிடக்குற கதிர்களை ஆள் வச்சி அறுக்குறதும் சாதாரண காரியமில்லை. கஷ்டப்பட்டு அறுத்தாலும் கூட, அதை கரை சேர்க்குறது ரொம்ப கஷ்டம். மழை இல்லாமல், இயல்பா அறுவடை நடந்தால், கதிர்களை அறுத்தறுத்து, வயல்லயே போட்டு வெச்சி, மொத்தமா கட்டு கட்டி, களத்து மேட்டுக்குக் கொண்டு போயி கதிர் அடிப்போம்.

இளங்கீரன்
இளங்கீரன்

இப்ப வயல் முழுக்கவே சேறும் சகதியுமா கிடக்கு. பயிர்களை அறுவடை செய்யும் போது நெல்மணிகளும் சேத்துக்குள்ளாறக் கொட்டிடும். தாள்களும் ஈரமா இருக்கு. மழை விட்டு, வெயில் அடிச்ச பிறகு அறுவடை செய்யலாம்னா, அதுக்கும் வாய்ப்பு இல்லை. சேறு காஞ்சிப் போயி, கதிர்கள் முழுக்க மூடி இறுகிடும். இதை அப்படியே விட்டுடவும் முடியாது. இதையெல்லாம் வெளியேத்தினால்தான், மறுபடியும் பயிர் சாகுபடி செய்ய முடியும். வயல்ல ஈரம் இருக்கும் போதே இதை வெளியேத்தியாகணும். வெயில் வந்து சேறு காஞ்சிப் போயிடுச்சுனா, பயிர்களை வெளியேத்த முடியாது. இதை உடனடியா ஆள் வச்சி அறுத்து, வெளியேத்த, ஏக்கருக்கு 10,000 ரூபாய் செலவாகும். தமிழக அரசு உடனடியா இந்தத் தொகையை கொடுத்து விவசாயிகளுக்கு உதவணும். அடுத்த கட்டமா ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கணும்” என்கிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஜீவக்குமார், ``டெல்டா மாவட்டங்கள்ல ஜனவரி மாசத்துல இந்தளவுக்கு தொடர்ச்சியா கனமழை பெய்றது, எனக்கு தெரிஞ்சி இதுதான் முதல் முறை. உதாரணத்துக்கு சொல்லணுனா, தஞ்சை மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 11 மில்லி மீட்டர். ஆனா இப்ப பேஞ்சிருக்குற மழையளவு ரொம்ப அதிகம். ஜனவரி 1-12 தேதிக்குள்ளாற 172 மில்லி மீட்டர் மழை பேஞ்சிருக்கு. டெல்டா மாவட்டம் முழுக்கவே இதுதான் நிலைமை. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்றேன்னு சொல்லி, மத்திய மாநில அரசுகள் நேரத்தை வீணடிக்கக் கூடாது.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்குறதுனால, டெல்டா மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதிச்ச பகுதியா அறிவிச்சி, எல்லா விவசாயிகளுக்குமே நிவாரணமும், பயிர் இன்சூரன்ஸ், இழப்பீடும் கொடுக்கணும். இதுக்கு விவசாயிகள்ட்ட ஆவணங்கள் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. வருவாய்த்துறையில் உள்ள ஆவணங்களை பயன்படுத்தியே, இழப்பீடுகளைக் கொடுக்கணும். நிலக்கடலை, உளுந்து, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு, விவசாயிகள் மனசு நொந்து கிடக்குறாங்க” என்கிறார்.

விவசாயிகளின் துயரத்தைப் போக்க, மத்திய மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில் செயல்படாவிட்டாலும் கூட, இது தேர்தல் காலம் என்பதை மனதில் கொண்டாவது, வேகமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு