Election bannerElection banner
Published:Updated:

`இவர்தான் காவிரி காப்பாளரா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் டெல்டா விவசாயிகள்... ஏன்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பல வகைகளிலும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். அதில் ஒன்றுதான் சரபங்கா திட்டமும்." என்கின்றனர் டெல்டா விவசாயிகள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி, இருளில் மூழ்கடிக்கப் பார்க்கிறார் எனவும், கடந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட காவிரி காப்பாளர் என்ற பட்டம் கொஞ்சம்கூட பொருத்தமானதல்ல என்றும் இப்பகுதி விவசாயிகள் ஆவேச குரல் எழுப்புகிறார்கள். அந்தப் பட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து சேலத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லக்கூடிய சரபங்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என இப்பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

இதுமட்டுமல்ல; ``இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகப் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் வழிமுறை மிகவும் ஆபத்தானது. இதனால் மேட்டூர் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" எனவும் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில்தான் தமிழக முதல்வருக்கு கடந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் வழங்கிய காவிரி காப்பாளர் பட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து வெள்ளகாலங்களில் உபரிநீரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவே சரபங்கா உபரிநீர் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

ரூ.565 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம், மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீர், சரபங்கா வடிநிலப் பகுதியில் 100 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். இதனால், ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

உபரி நீர் திட்டம்
உபரி நீர் திட்டம்

ஆனால், காவிரி டெல்டா விவசாயிகளோ, ``இது உபரிநீர் திட்டம் அல்ல. மேட்டூர் அணைக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் உலை வைக்கும் திட்டம்" எனக் கொந்தளிக்கிறார்கள். சேலம் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சரபங்கா திட்டத்தின் மூலம் எடுக்கப்படப்போவது மேட்டூர் அணையின் உபரிநீர் அல்ல, டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்குரிய நீர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பல வகைகளிலும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். அதில் ஒன்றுதான் சரபங்கா திட்டமும். இத்திட்டத்தால் மேட்டூர் அணையின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். மேட்டூர் அணையில் உடைப்பு ஏற்பட்டால், அப்பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆதங்க குரல்கள் வெடிக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி வீரசேனன், ``டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்காகத்தான் மேட்டூர் அணையே கட்டப்பட்டது. காரணம், இது காலம் காலமாக நெல் சாகுபடியை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய மண். புவியியல் அமைப்பும் அவ்வாறு இயல்பாக அமைந்துள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, சேலத்தின் ஒரு சில பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து இடது வலது புற வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகே இடது வலது வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு, டிசம்பர் 15-ம் தேதிக்குள் மூடிவிட வேண்டும் என்பது விதிமுறை. அதுவும் கூட, 5 நாள்களுக்கு ஒரு முறைதான் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு வாய்க்கால்களிலும் சேர்த்து மொத்தம் 900 கன அடிதான் தண்ணீர் திறக்கப்பட வேண்டுமென்பது விதிமுறை. எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, இது கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு வருகின்றன.

டெல்டா
டெல்டா
`நகைக்கடன் தள்ளுபடி அடகுக் கடைக்காரர்களுக்குத்தான் நற்செய்தி... ஏன்?' - விவசாயிகள் சொல்லும் காரணம்

இவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதல்வரா அல்லது சேலத்துக்கு மட்டும் முதல்வரா எனச் சந்தேகமாக இருக்கிறது. டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும்போதே, இடது வலதுப்புற வாய்க்கால்களிலும் தமிழக பொதுப்பணித்துறை தண்ணீர் திறக்கிறது. கூடுதலாகவும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உபரிநீர் திட்டமென ஒரு பொய்யான பெயரைச் சூட்டி, சரபங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

உபரிநீரை சேலத்துக்குக் கொண்டு செல்வதாக இருந்தால், வெள்ள நீரை வெளியேற்றக்கூடிய பதினாறு கண் மதகு உள்ள இடத்திலிருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கலாம். ஆனால், சரபங்கா திட்டத்திலோ, மேட்டூர் அணையின் கரையை உடைத்து, குழாய் பதித்து தண்ணீர் கொண்டு போகத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் 108-வது அடி உயரத்தில் கரையை உடைத்து குழாய் பதிக்கப் போகிறார்கள். இதனால் மேட்டூர் அணையின் கட்டுமானத்துக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒருபுறமிருக்க, உபரிநீரை எடுக்கிறோம் எனச் சொல்லிவிட்டு, ஆண்டுதோறும், இயல்பான காலங்களிலும் தண்ணீர் எடுப்பார்கள். ஏற்கெனவே டெல்டா விவசாயிகள், பாசனத்துக்கு போதிய தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம்.

டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக, இதற்கு உபரிநீர் திட்டம் எனத் தமிழக பொதுப்பணித்துறை பெயர் வைத்துள்ளது. இதையே காரணம் காட்டி, கர்நாடகா வழக்கமாகத் தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கும். உபரிநீர் என்றால் அதில் எங்களுக்கும் பங்கு தர வேண்டுமென கர்நாடகாவில் குரல் எழும்ப தொடங்கியுள்ளது. வழக்கமாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா மேலும் குறைத்துக் கொள்ளும்.

பழனிசாமி
பழனிசாமி
எம்.விஜயகுமார்
`ஒரு பிரச்னையும் தீரவில்லை... இதில் காவிரி காப்பாளர் பட்டம் வேறா?' - கொதிக்கும் டெல்டா விவசாயிகள்

காவிரி-குண்டாறு திட்டம் மூலமாகவும், எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தூரோகம் இழைக்க துடிக்கிறார். ஆந்திராவில் உள்ள கோதாவரியை, காவிரியோடு இணைத்த பிறகுதான் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்திட்டத்தின் வழிமுறை அதுதான். ஆனால், அதற்கு முன்பாகவே, மாயானூர் கதவணையிலிருந்து குண்டாறுக்கு தண்ணீர் கொண்டு போக முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது சாத்தியமே இல்லை. ஒருவேளை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால், டெல்டா விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைத்தான் அங்கு அனுப்புவார்கள்.

இந்த இரண்டு திட்டமும் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டா எதிர்காலத்தில் பாலைவனமாக மாறும். கடந்த ஆண்டு ஒரு சில விவசாய சங்கங்கள், திருவாரூரில் இவருக்கு பாராட்டு விழா நடத்தி, காவிரி காப்பாளர் பட்டம் வழங்கியது. இது கொஞ்சம் கூட பொருத்தமானதல்ல, அப்பட்டத்தை வழங்கியவர்களே, சரபங்கா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள், எனவே அப்பட்டத்தை திரும்பப் பெறுவதாக அவர்கள் அறிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு