Published:Updated:

`காவிரி நீர் கடைமடைக்கு வந்து சேருவது கஷ்டம்தான்!' - பொங்கும் விவசாயிகள்

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

தமிழக அரசு குடிமராமத்துப் பணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயும் 2018-19-ம் ஆண்டுக்கு 200.31 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியது. ஆனால், இந்தப் பணம் நேர்மையாக, முழுமையாக செலவு செய்யப்படலை. இதுல மிகப்பெரிய அளவுல முறைகேடு நடந்துள்ளது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை ( க.தனசேகரன் )

கர்நாடக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு 2.30 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. இது விரைவில் 100 அடியைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூர் வாரும் பணி
தூர் வாரும் பணி

மேட்டூர் அணையை நாளை காலை திறக்க இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தத் தண்ணீர் கடைமடை வரை பாய்ந்து விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் ``பிரதான ஆறுகள்லயே தூர்வாரும் பணிகள் ஒழுங்கா நடக்கலை. நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய தெற்கு ராஜன், குமுக்கி மணியாறு, கடலூர் மாவட்டத்துல வடக்கு ராஜன், வடவாறு உள்ளிட்ட ஆறுகளை நம்பி சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருக்கு. அணைக்கரை கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, அது முழுமையாக கடைமடை கிராமங்களுக்கு போய்ச் சேர்ந்தால் சீர்காழி, சிதம்பரம், பரங்கிப் பேட்டை உள்ளிட்ட இன்னும் பல பகுதி விவசாயிகள் பயன் அடைவாங்க.

இளங்கீரன்
இளங்கீரன்

ஆனால், அதுக்கு வாய்ப்பே இல்லை. காரணம், இந்தப் பிரதான ஆறுகள்ல எல்லாம் தூர்வாரவே இல்லை. வடவாறுல இருந்து பிரியக்கூடிய 12 பாசன வாய்க்கால்கள்ல, ஒரு வாய்க்கால்ல மட்டும்தான் தூர்வாரும் பணி நடந்துச்சு. மற்ற வாய்க்கால்கள் எல்லாம் புதர் மண்டிக் கிடக்கு. காவிரி டெல்டா முழுக்கவே இதுதான் நிலைமை. கண் துடைப்புக்காக ஒருசில இடங்கள்ல மட்டும்தான் பெயரளவுக்கு தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது” என்றார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வீரசேனன் கூறுகையில், ``தமிழக அரசு குடிமராமத்துப் பணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயும் 2018-19-ம் ஆண்டுக்கு 200.31 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியது. ஆனால், இந்தப் பணம் நேர்மையாக, முழுமையாக செலவு செய்யப்படலை. இதுல மிகப்பெரிய அளவுல முறைகேடு நடந்துள்ளது. இதனால் ஆளும் கட்சியினர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள்தான் பயன் அடைஞ்சிருக்காங்க.

வீரசேனன்
வீரசேனன்

கல்லணை தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை 25 கிளை ஆறுகள் ஓடுது. இதுல எதுலயுமே குடிமராமத்துப் பணி ஆக்கபூர்வமாக நடைபெறலை. கஜா புயல்ல விழுந்த மரங்கள் இப்பவும்கூட ஆறுகள்லயும், வாய்க்கால்லையும்தான் கிடக்குது. கல்லணை கால்வாய் முழுவதுமே மதகுகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைஞ்சிக் கிடக்கு. இதனால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேராது.

முக்கொம்பில் போன ஆண்டு கதவணை உடைஞ்சுப் போச்சு. அதுக்கு மாற்றாக புதிய கதவணை இன்னும் கட்டி முடிக்கப்படலை. விவசாயிகள் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்குறதுனால, கட்டுமானப் பணிகள் ரொம்ப மெத்தனமாக நடந்துக்கிட்டு இருக்கு.

முக்கொம்பு அணை
முக்கொம்பு அணை

`முக்கொம்பில் மணல் மூட்டைகளால் அமைக்கப்பட்ட தற்காலிக அணை, வலுவான நிலையில் இருக்குறதாகவும், காவிரி டெல்டா பாசனத்துக்கு 50,000 கனஅடி தண்ணீர் திறந்தாலும்கூட வலுவாக இருக்கும்'னு தமிழக பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி சொல்றாரு. அவர் சொல்றது எந்தளவுக்கு சாத்தியம்னு தெரியலை. இதுக்கான சோதனை ஓட்டம்கூட இன்னும் பார்க்கப்படலை. மேட்டூர் அணை திறக்கப்படுவதால் கடைமடை விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இருக்காது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அதே நிலைதான் இந்த ஆண்டும் ஏற்படப்போகுது” என விரக்தியுடன் பேசினார்.