Published:Updated:

நெல் ஈரப்பதம் விவகாரம்: `மத்திய குழுவின் ஆய்வே ஒரு நாடகம்தான்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

மத்திய குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று ஆய்வு செய்தனர். இது டெல்டா விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், ``நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை உயர்த்துவது தொடர்பான ஆய்வு அறிக்கை 15 நாள்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்கள். இது குறித்து மிகுந்த கொந்தளிப்போடு பேசும் டெல்டா விவசாயிகள், ``இது ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள்; இதனால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை" என்கிறார்கள்.

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு
`நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பல நாள்களாக இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் தங்களது நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காரணம் 17 சதவிகிதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என்பது மத்திய அரசின் விதிமுறையாக உள்ளது. இது மழைக்காலம் என்பதால், தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதென்பது தவிர்க்க முடியாதது. எனவே, ஈரப்பத வரம்பை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தார்கள். அதைத் தொடர்ந்து, தமிழக அரசு காவிரி டெல்டா நெல் விவசாயிகளின் இக்கோரிக்கை குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில்தான் இதுகுறித்து முடிவெடுக்க, மத்திய குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன், சி.யூனுஸ் உள்ளிட்ட மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் மடிகை, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்கள். இங்கு விவசயிகள் குவித்து வைத்திருந்த, நெல் குவியலில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தனர். ஈரப்பதம் அளவிடும் கருவியில் நெல்லின் மாதிரியை வைத்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

நெல் (கோப்பு படம்)
நெல் (கோப்பு படம்)
`எங்க 22 கிராமங்களுக்கு மட்டும் ஏன் இழப்பீடு இல்ல?' - ஆதங்கத்தில் விவசாயிகள்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் தலைவரும் இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநருமான எம்.இசட். கான், ``நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக, தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நெல்லின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிக்கையை 15 நாள்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம். அதன் பிறகு, ஈரப்பத வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் எடுக்கும்’’ என்றார். இது டெல்டா விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கக்கரை சுகுமாறன், ``கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியில இருந்தே இந்தப் பகுதிகள்ல குறுவை நெல் அறுவடை தொடங்கிடுச்சி. மொத்த சாகுபடி பரப்புல கிட்டத்தட்ட 50 சதவீதம் அறுவடை முடிஞ்சிடுச்சி. தொடர் மழையினால, விவசாயிகள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. இது மழைக்காலம். இப்ப அறுவடை செய்ற நெல்லுல ஈரப்பதம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கதான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. லேசாக வெயில் அடிச்சி, நெல்லை காய வச்சாலும் அடுத்த கொஞ்ச நேரத்துல மழை வந்துடுது. நெல் கொள்முதல் உடனுக்குடன் விரைவாக நடக்குறதில்லை. நெல்லை காய வைக்க, நவீன நெல் உலர்த்தும் கருவிகளும் இங்க இல்லை. விவசாயிகள் என்னதான் செய்ய முடியும்? ஈரப்பத வரம்பை உயர்த்துறது தொடர்பா முடிவெடுக்க இன்னும் 15 நாள்களுக்கு மேலாகும்னு, இங்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் சொல்றாங்க. அதுக்குள்ளார மீதியுள்ள நெல்லும் அறுவடை முடிஞ்சிடும். மழையில் ஈரமாகும் நெல்லை கொள்முதல் நிலையங்கள்ல விக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி கிடக்க வேண்டியதுதான்.

கக்கரை சுகுமாறன்
கக்கரை சுகுமாறன்

இந்த ஆய்வே தேவையில்லை. இது விவசாயிகளை ஏமாற்றி, காலதாமதம் செய்றதுக்கான நாடகம். குறுவை நெல் அறுவடை சமயத்துல கனமழை பெய்யும்ங்கறதும், நெல்லுல ஈரப்பதம் அதிகமாக இருக்கும்ங்கறதுதான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே. இதுக்கு எதுக்கு நேரடியாக வந்து ஆய்வு செஞ்சு, அறிக்கை சமர்ப்பிச்சு காலதாமதம் செய்யணும். காலதாமதம் செஞ்சு இழுத்தடிச்சு, ஈரப்பத வரம்புங்கற பேர்ல விவசாயிகள் நெல்லை புறக்கணிக்கத்தான் மத்திய அரசு ஆய்வுக்குழுவையே அனுப்புது. இந்த பிரச்னைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காணணும். குறுவையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு 22 சதவிகிதம் வரை ஈரப்பத வரம்பு நிர்ணயிச்சு, இனிவரும் ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரு பொதுவான விதிமுறையை உருவாக்கணும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு