Published:Updated:

`இது விவசாயிகளோட பிரச்னைதானேனு அலட்சியமா இருந்துடக் கூடாது!’- உரத்தட்டுப்பாடால் கொதிக்கும் டெல்டா

உரத்தட்டுபாட்டுனால, மகசூல் இழப்பு ஏற்பட்டு, நெல் உற்பத்தி குறைஞ்சா, வெங்காயம் மாதிரி அரிசி விலையும் கடுமையா உயர்ந்திடும் என எச்சரித்தார்.

உரத்தட்டுப்பாடு
உரத்தட்டுப்பாடு

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் 11 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இது முன்கூட்டியே தமிழக அரசுக்கு தெரிந்திருந்தும் கூட, இதற்குத் தேவையான உரங்கள் தயார் நிலையில் வைக்கப்படவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இது தங்களுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

`இது விவசாயிகளோட பிரச்னைதானேனு அலட்சியமா இருந்துடக் கூடாது!’- உரத்தட்டுப்பாடால் கொதிக்கும் டெல்டா

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் விமல்நாதன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது ``நடவுப் பணி முடிஞ்சி நாப்பது நாள்களுக்கு மேல ஆகுது. இரண்டு முறை களையெடுப்பும் முடிஞ்சிடுச்சி. ஆனா இதுக்கான இடுபொருள்களை தமிழக அரசு கையிருப்புல வைக்கலை. சரியான நேரத்துல தேவையான உரங்களைக் கொடுக்கலைனா, பயிரோட வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பை சந்திக்க வேண்டியதாயிடும். கண்டிப்பா உரம் போட்டே ஆகணும்ங்கற கட்டாய சூழல்ல இருக்குறதுனால விவசாயிகள் திண்டாடிக்கிட்டு இருக்காங்க. உரத்தட்டுப்பாடு நிலவுறதை, தனியார் உரக்கடைக்காரங்க தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்குறாங்க. வழக்கமான விலையைவிட, கூடுதலான விலைக்கு உரங்களை விக்கிறாங்க. தேவையான நேரத்துல, தேவையான உரங்களைத் தயார் நிலையில வைக்க வேண்டியது அரசாங்கத்தோட கடமை. ஆனால், தமிழக அரசு இதுல தவறிடுச்சி” என்றார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன் ``இப்ப ஏற்பட்டு இருக்கக்கூடிய உரத்தட்டுப்பாட்டுக்கு தமிழக வேளாண்மைத்துறையும், கூட்டுறவுத்துறையும்தான் முக்கிய காரணம். இவங்களோட அலட்சியத்துனாலதான், விவசாயிகள் நாங்க சிரமப்படுறோம். இந்த ஆண்டு சம்பாவுக்கு என்னென்ன உரம், எவ்வளவு தேவைங்கறதை, வேளாண்மைத்துறை கணக்கெடுத்து, கூட்டுறவுத்துறைக்குச் சொல்லியிருக்கணும். இல்லைனா, அவங்களாவது, வேளாண்மைத்துறை அதிகாரிகள்கிட்ட கேட்டு, அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிருக்கணும்.

வீரசேனன்
வீரசேனன்

அந்தந்த கிராமங்கள்ல உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்லதான் யூரியா, பொட்டாஸ் உள்ளிட்ட உரங்கள் விற்பனைக்கு வச்சிருக்கணும். இங்கதான் விலை குறைவா இருக்கும். ஆனா இந்த தடவை பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்ல யூரியா, பொட்டாஸ் கிடைக்கவே இல்லை. உடனடியா இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காணணும். இது விவசாயிகளோட பிரச்னைதானேனு அலட்சியமா இருந்துடக் கூடாது. உரத்தட்டுபாட்டுனால, மகசூல் இழப்பு ஏற்பட்டு, நெல் உற்பத்தி குறைஞ்சா, வெங்காயம் மாதிரி அரிசி விலையும் கடுமையா உயர்ந்திடும்” என எச்சரித்தார்.