Published:Updated:

`கட்சி பூசல்களால் ஏற்பட்ட உரத் தட்டுப்பாடு!' - கூட்டுறவு சங்கங்களில் தவிக்கும் விவசாயிகள்

``இந்தத் தட்டுப்பாடு இயல்பாக உருவானதல்ல, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது."

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ரசாயன உரங்கள் கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். உரத் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாகத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``கடந்த 5 மாத தி.மு.க ஆட்சியில், வேளாண் இடுபொருள்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எளிதாக வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்; எப்படி? | Terrace Garden | Episode 8 | Pasumai Vikatan

அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளன. முக்கியமாக விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை. தற்போதைய சாகுபடி பருவத்துக்கு, விவசாயிகளுக்குத் தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்தக் கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனைக் கடைகளிலும் தேவையான அளவு இருப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ``தமிழ்நாட்டில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. பல இடங்களில் நுண்ணூட்டச் சத்து உரங்கள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை வாங்கினால்தான் இந்த இரு வகை உரங்களும் வழங்கப்படும் என்று உர வணிகர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

ராமதாஸ்
ராமதாஸ்

வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்துக்குத் தேவையான உரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிச்சந்தையில் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உரங்களுக்கான தட்டுப்பாடு தீரும்வரை யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய இரு உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரத் தட்டுப்பாடு குறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``நாற்று நடவு செய்யக்கூடிய விவசாயிகளுக்கு, சேத்துழவு செய்து அடியுரமாகப் போட டி.ஏ.பி தேவை. ஆனால், இதற்குக் கடும் தட்டுப்பாடு. நாற்று நடவு செய்த விவசாயிகள் மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் அடுத்த 10 நாளில் தங்களது நிலத்தில் யூரியா, பொட்டாஸ் போட்டால்தான், பயிர் வளர்ச்சி அடையும். ஆனால், இதற்கும் கடும் தட்டுப்பாடு. இந்தத் தட்டுப்பாடு இயல்பாக உருவானதல்ல, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயி வீரசேனன்
விவசாயி வீரசேனன்

ஒவ்வொரு சாகுபடி பருவம் தொடங்குவதற்கு முன்பே, வேளாண்மைத்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையின் நீர்மட்டம், மழைப்பொழிவு எதிர்பார்ப்பு இவற்றைப் பொறுத்து சாகுபடி பரப்பைக் கணித்து, எந்தெந்த ரசாயன உரங்கள் எவ்வளவு தேவை எனக் கணக்கீட்டு, கூட்டுறவு துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். திருவாரூரை தலையிடமாக கொண்டு செயல்படும் கூட்டுறவு விற்பனை இணையம், உர உற்பத்தி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு இவற்றை ஏற்பாடு செய்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரங்களைத் தயார் நிலையில் வைப்பது வழக்கம். வேளாண்மைத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் அலட்சியாக இருந்துள்ளார்கள்.

அதேசமயம் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க-வினர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே, இதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சொல்கிறார்கள், கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் கிடைக்காததால், விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாட வேண்டியுள்ளது. தனியார் உரக்கடைக்காரர்கள், உரங்களைப் பதுக்கி வைத்து. செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எல்லா வகைகளிலும் விவசாயிகள்தாம் பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தாராளமாக ரசாயன உரங்கள் கிடைக்க, தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

உரம்
உரம்
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு; மாடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடிய விவசாயிகள்!

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க-வினரிடம் பேசியபோது, ``உரங்கள் தயார் நிலையில் இல்லாததற்கு நாங்கள் காரணமல்ல, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து, நாங்கள் சொல்லும் எதையுமே அதிகாரிகள் கேட்பதில்லை, தற்போதைய தி.மு.க அரசு, குறுவை பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் அலட்சியமாக இருந்தது போலவே உர விஷயத்திலும் அலட்சியமாக இருந்துள்ளது’’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு