Published:Updated:

பயிர்களைப் பாதிக்கும் வெள்ளநீர்; கனமழை மட்டும்தான் காரணமா? யதார்த்த உண்மையும் தீர்வும்

பாதிக்கப்பட்ட நெல் வயல் (கோப்பு படம்)
News
பாதிக்கப்பட்ட நெல் வயல் (கோப்பு படம்)

மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நாம் நேரில் சென்று, அங்குள்ள விவசாயிகளிடம் விசாரித்தபோது, பெரும்பாலான பகுதிகளில் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும்தான் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.

கடந்த ஆண்டு, டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நிவர், புரெவி புயல் மற்றும் பருவம் தவறிய பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு சம்பா பட்டத்தின் ஆரம்பநிலையிலேயே தொடர் கனமழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி, இளம் நெற்பயிர்கள் அழுகி டெல்டா விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 2 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி முழுமையாக அழுகியுள்ளன. மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நாம் நேரில் சென்று, அங்குள்ள விவசாயிகளிடம் விசாரித்தபோது, பெரும்பாலான பகுதிகளில் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும்தான், மழைநீர் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் வயல்களிலேயே தேங்கி நின்று பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.

பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள்
பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெற்றிகரமாக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, தொடர் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, ஆரம்பநிலையிலேயே தங்களது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள ஒட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ், ``நான் 2 ஏக்கர்ல சம்பா பட்டத்துல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். நாத்து நட்டு 20 நாள்தான் ஆகுது. பத்து நாளா இந்தப் பகுதிகள்ல தொடர்ச்சியா மழை பேஞ்சிக்கிட்டே இருக்கு. என்னோட வயல் முழுக்க தண்ணீர் தேங்கி நின்னுகிட்டே இருந்ததுனால, நாத்தெல்லாம் அழுகிப் போயிடுச்சு.

விவசாயி காமராஜ்
விவசாயி காமராஜ்

நான் சாகுபடி செஞ்ச இரண்டு ஏக்கர்லயும் முழுமையான பாதிப்பு. இதுல கொஞ்சம்கூட பயிர் தேறி வராது. எனக்கு மட்டுமல்ல, நீடாமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் முழுக்கவே, இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கு. இந்தப் பகுதிகள்ல உள்ள வாய்க்கால்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு பல வருசமாச்சு. தண்ணீர் வடிய வழியில்லாததுனாலதான் இந்தளவுக்கு கடுமையான பாதிப்பு’’ என வேதனையோடு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளவரசன், ``நான் அஞ்சு ஏக்கர்ல சம்பா நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். என்னோட வயல்லயும் கடந்த பத்து நாளா தண்ணீர் தேங்கியது. வாய்க்கால்களை முழுமையாகத் தூர் வாராததுனால, இந்தப் பகுதிகள்ல வயல்கள்ல தண்ணீர் வடிய மாட்டேங்குது. உழவு, அடியுரம், நாற்று உற்பத்தி பறிப்பு, நடவுக்கூலினு இதுவரைக்கும் ஏக்கருக்கு 15,000 ரூபாய் செலவு பண்ணியிருக்கேன்.

விவசாயி இளவரசன்
விவசாயி இளவரசன்

ஆனால், இதுல ஒத்தை பைசாகூட திரும்பி வராது. போன வருஷம் சம்பா பட்டத்துல சாகுபடி செஞ்ச நெற்பயிர்கள் நல்லா செழிப்பா விளைஞ்சு அறுவடைக்கு வந்த நேரத்துல, புயலாலயும் பருவம் தவறிய மழையாலும் கடுமையான நஷ்டத்தைச் சந்திச்சோம். இந்த வருஷமும் இப்படி ஆயிடுச்சு’’ என மனம் உடைந்து பேசினார்.

குடவாசல், நன்னிலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, மன்னார்குடி, வடுவூர், கோயில்வெண்ணி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடர் கனமழையால், இளம் நெற்பயிர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள வடபாதி, கொக்கேரி, வீமன்வோடை, சூலியக்கோட்டை, அருந்தவபுரம், கோயில்பத்து, புளியக்குடி, புத்தூர், நெய்குன்னம், தீபாம்பாள்புரம் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் அழுகிய நிலையில் இருந்தது. வடபாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜவேலு, ``நான் அஞ்சு ஏக்கர்ல சம்பா பயிர் பண்ணியிருந்தேன். மழைநீர் வடியாததுனால், நாற்றுகள் முழுமையாகவே அழுகிப் போயிடுச்சு. இந்த வருஷம் எங்களோட வாழ்வாதாரம் முழுமையாகவே கைவிட்டுப் போயிடுச்சு. இனிமே மறுபடியும் புதுசா நாற்று உற்பத்தி பண்ணி, நடவு செய்றதுங்கறதுதான் நடக்காத காரியம்.

விவசாயி ராஜவேலு
விவசாயி ராஜவேலு

பட்டமும் தவறிப் போயிடுச்சுனா, இதுல ஏகப்பட்ட இடர்ப்பாடுகளைச் சந்திச்சாகணும். காலம் காலமாக மழை பேஞ்சிக்கிட்டுதான் இருக்கு. ஆனால், கடந்த பத்து பதினைஞ்சு வருஷமாகத்தான், இந்தளவுக்கு எங்க பகுதிகள்ல பாதிப்பு அதிகமாக இருக்கு. ரெண்டு, மூணு நாள்கள் தொடர்ச்சியாக மழை பேஞ்சாலே தண்ணீர் வடிய மாட்டேங்குது. காரணம், இந்தப் பகுதியில் ஓடக்கூடிய குமாரசாமி வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கு. இதனால்தான் மழைநீர் வடிய மாட்டேங்குது. வருவாய்த்துறை அதிகாரிகள்ட்ட பலமுறை மனு கொடுத்தும்கூட நடவடிக்கை எடுக்கப்படலை. டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே பல இடங்கள்ல இது மாதிரியான பிரச்னைகள் இருக்கு. பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் நிவாரணம் கொடுத்துட்டால் தங்களோட கடமை முடிஞ்சிட்டதாக நினைக்குது. வாய்க்கால்கள் முழுமையாகத் தூர் வாரப்படணும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படணும். இதையெல்லாம் ஒழுங்கா செஞ்சாதான் இனிவரும் காலங்கள்லயாவது வயல்கள்ல மழைநீர் தேங்காமல் இருக்கும். விவசாயிகள் நிம்மதியா வாழ முடியும்’’ என்றார். தமிழக அரசு இதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது முதல் கடமை.