Published:Updated:

மேக்கேதாட்டூ விவகாரம்: தொடங்கும் போராட்டங்கள்; ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்!

மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்
மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்

``காவிரியின் குறுக்கே மேகேதாட்டூவில் அணை கட்ட மத்திய அரசு மறைமுக அங்கீகாரம் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது. அந்தத் துணிச்சலில்தான் அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார்."

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இது சட்டவிரோதம் எனவும், மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால், வெள்ள காலங்களில்கூட தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு காவிரிநீர் வராது எனத் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களும் அரசியல் இயக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ``மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவோம். இது கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம். இதைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை" என சூளுரைத்திருக்கிறார். வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், அவர் இத்திட்டத்துக்கு முதல்கட்ட நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணியைத் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மேக்கேதாட்டூ அணைக்கு எதிரான போராட்டம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்
மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்
மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்

இதுதொடர்பாக தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவில் அங்கம் வகிக்கும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகளும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு காணப்பட்டார்கள். ``அர்ப்பணிப்புமிக்க போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினால்தான், மேக்கேதாட்டூ அணையைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும். இல்லையென்றால், காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமும் பறிப்போய் விடும்" எனப் பலரும் கொந்தளித்தார்கள்.

இக்கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``காவிரியின் குறுக்கே மேகேதாட்டூவில் அணை கட்ட மத்திய அரசு மறைமுக அங்கீகாரம் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது. அந்தத் துணிச்சலில்தான் அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார். எனவே, மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை அறிய உண்மை அறியும் குழுவைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும். அவ்வாறு தொடங்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தடை ஆணை பெற வேண்டும்.

மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்
மேக்கேதாட்டூ- அவசர ஆலோசனைக் கூட்டம்

கர்நாடக அரசு, அணை கட்டும் பணியை நிறுத்தவில்லையென்றால், கர்நாடக அரசுக்கு எதிராகவும், இதற்கு துணை போகும் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசு ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். கர்நாடக அரசுக்கு எதிராக, தமிழக அரசு பொருளாதார தடையும் விதிக்க வேண்டும். கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் முதல்கட்டப் போராட்டமாக, வருகிற ஜூலை 13-ம் தேதி திருச்சி முதல் கடலூர் வரை டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரிப்பது என முடிவு செய்துள்ளோம். அறவழியில் அடுத்தடுத்த போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தவுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு