Published:Updated:

`புளியந்தோப்பில் மட்டுமல்ல; பி.எஸ்.டி-யால் கல்லணை கால்வாயிலும் பிரச்னைதான்!' - குமுறும் விவசாயிகள்

கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணிகள்
கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் ( ம.அரவிந்த் )

முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைத்து கல்லணைக் கால்வாய் சீரமைப்பு செய்யும் பணியை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இதில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து அந்தப் பணியை செய்த ஒப்பந்த நிறுவனம் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணியைத் தரமற்ற முறையில் செய்திருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் இதை ஆய்வு செய்ய குழு மைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பு நடைபெற்ற பணிகள்
ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பு நடைபெற்ற பணிகள்
கான்கிரீட் சிக்கலில் கல்லணை, பவானிசாகர் வாய்க்கால்கள்... தீருமா தண்ணீர் பஞ்சாயத்துகள்?

மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்த பிறகு காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும். காவிரியின் கிளை ஆறுகளான இவற்றில் செல்லும் தண்ணீர்தான் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, கல்லணைக் கால்வாயில் முறையாகத் தண்ணீர் சென்றால் மட்டுமே தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்லும். இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்லணைக் கால்வாய் சிதிலமடைந்து வருகிறது. அதை மறு சீரமைப்பு செய்து புனரமைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகவே விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.2,639 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் பணிகளை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நிறுவனவங்கள் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இதில் தரமற்ற முறையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டியதாக சர்ச்சைக்குள்ளான பி.எஸ்.டி நிறுவனமும் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இந்தப் பணி மொத்தமுமே தரமற்ற முறையில் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

கல்லணைக் கால்வாய்
கல்லணைக் கால்வாய்

இது குறித்து பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனனிடம் பேசினோம், ``கல்லணையிலிருந்து வரும் காவிரின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய் 148 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் வரும் தண்ணீரை நம்பி லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதன் மூலம் 694 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைகிறது. கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வந்தால் மட்டுமே கடைமடைப் பகுதிகள் உயிர்ப்புடன் இருக்கும். விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை. கல்லணைக் கால்வாய் வலுவிழந்து காணப்படுவதால் அதில் முழு கொள்ளவு தண்ணீர் திறக்காமல் குறைந்த அளவிலான தண்ணீரே திறந்து விடப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு கடலில் கலந்தாலும் கடைமடைக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எனவே, கல்லணைக் கால்வாயை சீரமைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தோம். இதைத் தொடர்ந்து ரூ. 2,639 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கல்லணைக் கால்வாய் புனரமைப்புப் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து பாகங்களாகச் செய்யப்படும் இந்தப் பணியில் 5 நிறுவனங்கள் எடுத்து செய்து வருகின்றன. கடைமடை வரை முழுமையாகத் தண்ணீர் சேர வேண்டும் என்பதற்காக ஆற்றின் தரைதளம் மற்றும் கரையின் பக்கவாட்டுகளில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைப்பு மதகு, குழாய் மதகு, நீர் தேக்கி போன்றவையும் புனரமைக்கப்பட்டு வருகிறது.

வீரசேனன்
வீரசேனன்

இந்தப் பணியைத் தொடங்கியதிலிருந்தே தரமற்ற முறையில் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறி வந்தோம். ஆனால், அதைக் கண்டுகொள்ளவே இல்லை. பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பணியின் தற்போதைய நிலை என்ன என்பதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. குளமங்கலம், பருத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட தொலைவுக்கு பி.எஸ்.டி நிறுவனம் டெண்டர் எடுத்து பணியை மேற்கொண்டு வந்தது.

ஏற்கெனவே இந்த நிறுவனங்கள் செய்த பல பணிகள் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணிக்ளுக்கான டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளது. செய்யப்பட்டு வரும் பணிகளில் தரம் இல்லை எனவும் விவசாயிகள் கூறி வந்தனர். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தற்போதைய நிதி அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் கல்லணைக் கால்வாய் மறு சீரமைப்புப் பணிகான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் கூறும் கல்லணைக் கால்வாய் ஆறு
தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் கூறும் கல்லணைக் கால்வாய் ஆறு
கல்லணை: `வெறும் 500 கன அடி திறந்தா இங்க எப்படி தண்ணீர் வரும்?' - கடைமடை விவசாயிகள் கவலை

பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ரூ. 1 கோடி அளவினால பணிக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்க முடியும் என்ற விதியைத் தளர்த்தி பல கோடிக்கான பணியைக் கொடுக்கும் வகையில் மாற்றி, ஒப்பந்த நிறுவனங்களுக்குப் பணிகளை ஒதுக்கியுள்ளார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைத்து கல்லணைக் கால்வாய் சீரமைப்பு செய்யும் பணியை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இதில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இனி செய்யக்கூடிய பணிகள் தரமாக நடைபெறும். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வேண்டும் என்றால் முதலமைச்சர் இதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார். பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணியின் தரம் ஆய்வு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு