Published:Updated:

சம்பா பயிர் காப்பீடு: `டிசம்பர் 15 வரை அவகாசம் வேண்டும்! - டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டிசம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தி.மு.க அரசு, இந்த ஆண்டு சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது.

சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டிசம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தி.மு.க அரசு, இந்த ஆண்டு சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, தங்களது நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. ஏற்கெனவே தொடர் கனமழையின் காரணமாக விவசாயிகள் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, இப்படி அவசரப்படுத்துவது மிகவும் தவறான செயல் எனக் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

விவசாயம்
விவசாயம்
`செயலி மூலம் மரங்கள் கணக்கெடுப்பு; கூடவே இதையும் செய்யுங்கள்!' - அரசுக்கு ஆர்வலரின் கோரிக்கை

இதுகுறித்து பேசிய காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த வைகறை, ``வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாகச் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

வாய்க்கால் மற்றும் வாரிகள் முழுமையாகத் தூர்வாரப்படாத காரணத்தால் நீரோட்டம் தடைபட்டு மழைநீர் வயலுக்குள் இறங்கி பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள 50 சதவிகித நெற்கதிர்கள் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா நடவுக்கான 1,500 ஏக்கர் நாற்றங்காலில் மழைநீர் தேங்கியுள்ளது.

வைகறை
வைகறை

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்து. தற்போது கனமழை காரணமாக அனைத்து உழவர்களும் நெருக்கடியான நிலையில் உள்ளார்கள். இதனால் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும்.

மேலும் தண்ணீர் தேங்கியுள்ள நாற்றங்காலுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நஷ்ட ஈடாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும். அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ள பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு வழங்க வேண்டிதில் நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையும் அத்துடன் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் உழவர்களுக்கு சிட்டா அடங்கல் உடனடியாக வழங்கி காப்பீடு பெறுவதற்கு உதவ வேண்டும்.

`மீண்டும் வழங்கப்படும் கணினி சிட்டா; கூடவே இதையும் செய்யுங்கள்!' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

ஆன்லைன் வழியாக உழவர்களுக்கு காப்பீடு செய்ய ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க சிறப்பு ஏற்பாடு செய்து காப்பீட்டை முழுமையாகப் பதிவு செய்திட வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகக் காப்பீடு பதிவு செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு