Published:Updated:

கல்லணை: `வெறும் 500 கன அடி திறந்தா இங்க எப்படி தண்ணீர் வரும்?' - கடைமடை விவசாயிகள் கவலை

திறக்கப்பட்ட கல்லணை
திறக்கப்பட்ட கல்லணை ( தே.தீட்சித் )

டெல்டா மாவட்ட பாசனத்துக்காகக் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காகக் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 7 அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது தண்ணீர் சீறி பாய்ந்து மதகின் வழியாக வெளியே வர அமைச்சர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் காவிரி நதியை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் ஆற்றில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை, கடந்த 12-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்தத் தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்துக்காகத் திறந்து விடப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், கல்லணையில் பழுதுகள் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கல்லணை பாலங்கள், மதகுகள் முழுவதும் பச்சை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

கல்லணையை திறந்து வைத்த அமைச்சர்கள்
கல்லணையை திறந்து வைத்த அமைச்சர்கள்
நெல் கொள்முதலில் லஞ்சம்; கேள்வி கேட்ட நிருபரை `கிறுக்கு’ ஆக்கிய அமைச்சர்!

ஆனால், தற்போது நீல நிறத்தில் வண்ணம் பூசும் பணியைத் தொடங்கி முடித்தனர். இதையடுத்து மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீரின் ஓட்டத்தை வைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், 16-ம் தேதி கல்லணை திறக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து தண்ணீர் வந்தடைந்ததும் கல்லணை திறக்கப்பட்டது.

இதற்காக கல்லணைப் பகுதி முழுவதும் மாவிலைத் தோரணங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேள தாளம் முழங்க, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்துகொண்டு மதகின் பட்டனை அழுத்தி கல்லணையைத் திறந்து வைத்தனர்.

இதில் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். கல்லணை திறக்கப்பட்டதுமே அங்கிருந்த அனைவரும் காவிரி நதியை வணங்கி மலர்களையும் நவதானியங்களையும் ஆற்றில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வார்கள். தற்போது காவிரி, வெண்ணாற்றில் விநாடிக்கு தலா 2,000 கன அடியும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் அளவு அதிகரித்து திறக்கப்படும்.

திறக்கப்பட்ட கல்லணை, மகிழ்ச்சியில் விவசாயிகள்
திறக்கப்பட்ட கல்லணை, மகிழ்ச்சியில் விவசாயிகள்
மேட்டூர், கல்லணை திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும்: டெல்டா விவசாயிகள் சொல்லும் சென்டிமென்ட்

இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு பத்து தினங்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூர் வாரும் பணிகள் தற்போது 90 சதவிகிதம் முடிந்துள்ளன. தண்ணீர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் மீதமுள்ள தூர்வாரும் பணிகள் முடிந்துவிடும். குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க கூட்டுறவுத் துறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரம் ஆகியவை போதிய அளவில் இருப்பு உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெறுவது கடந்த ஆட்சியில் செய்த தவறு. இது குறித்து உணவு துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

கல்லணைக் கால்வாயில் 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பத்து நாள்களுக்குள் தண்ணீர் கடைமடைக்கு சென்றுவிடும் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால், குறைவான தண்ணீரே திறப்பதால் கடைமடைக்கு குறித்த நாளில் தண்ணீர் வருவது சந்தேகம் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் ஒன்றிய செயலாளரான சின்னத்துரை என்பவர் கூறுகையில், ``தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி மட்டுமே திறக்கப் பட்டுள்ளதால் கடைமடை பகுதிவரை தண்ணீர் வந்து சேருமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

கல்லணைக் கால்வாயில் 3,000 கன அடி திறக்கும்போதே கடைமடை பகுதியான திருவோணம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் சரியாகக் கிடைப்பதில்லை. இது கடந்த காலங்களிலிருந்தே கடைமடை பகுதி விவசாயிகள் சந்தித்து வரும் தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது 500 கன அடி மட்டுமே திறக்கப்பட்டிருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, முழு கொள்ளளவான 4,000 கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவிட்டு கடைமடைக்கும் தண்ணீர் கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு