Published:Updated:

நனைந்த நெல், துயரத்தில் விவசாயிகள்... 25 சதவீத ஈரப்பதத்தோடு கொள்முதலுக்கு அனுமதிக்குமா அரசு?

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் முறையாக நடைபெறாததால் விவசாயிகள் பெரும் பரிதவிப்பில் உள்ளார்கள்.

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் மிகவும் காலதாமதமாக கொள்முதல் நடைபெறுவதால், விவசாயிகள் தங்களது நெல்லோடு, வீதிகளிலும் சாலைகளிலும் காத்திருக்கும் அவல நிலை நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிட்டதால், நெல் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரிக்கிறது. ஆனால் கொள்முதல் நிலையங்களில் 16 சதவீதம் வரைதான் ஈரப்பதம் அனுமதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

வீதிகளில் கிடக்கும் நெல்
வீதிகளில் கிடக்கும் நெல்

இந்நிலையில்தான் தமிழக உணவு அமைச்சர் காமராஜ், கொள்முதலில் 22 சதவீதம் ஈரப்பதம் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் 25 சதவீதம் வரையிலாவது ஈரப்பதம் அனுமதித்தால்தான் ஓரளவுக்காவது விவசாயிகளால் நெல்லை விற்பனை செய்யமுடியும். ஈரப்பதம் அதிகமாக இருப்பதற்கு விவசாயிகள் எந்த வகையிலும் காரணமல்ல. நிர்வாகக் குறைபாடுகளாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நிகழ்ந்த அலட்சியத்தாலும்தான் தங்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதலில் முறையான திட்டமிடல் இல்லாததால், விவசாயிகள் கொண்டு வரும் நெல், உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களில் பல நாள்களாக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். மழையில் நனைந்த நெல்லை காய வைப்பது இவர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. பெரும் சிரமப்பட்டு நெல்லை காய வைத்தாலும்கூட, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடிவதில்லை. மீண்டும் மழை பெய்வதும் மறுபடியும் நெல்லை காய வைப்பதுமாகத் தொடர்கிறது.

வீதிகளில் நெல்
வீதிகளில் நெல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் கோவிலுரைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி, ``டெல்டா மாவட்டங்கள்ல 50 சதவீதம் நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டுருக்கு. கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியா மழை பேஞ்சிக்கிட்டே இருக்கு. வடகிழக்குப் பருவ மழையும் தொடங்கிடுச்சி. விவசாயிகள் தங்களோட நெல்லை ஓரளவுக்குதான் காய வைக்க முடியும். 25 சதவீதம் வரையாவது ஈரப்பதம் அனுதிக்கணும். இதுக்கு விவசாயிகள் எந்த விதத்துலயும் காரணமல்ல. நெல் கொள்முதல்ல ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளால்தான் விவசாயிகள் சிரமப்படுறோம்.

இந்த வருசம் டெல்டா நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதியே மேட்டூர் அணை திறந்தாச்சு. இதுக்கேத்த மாதிரி முன்கூட்டியே நெல் கொள்முதலை தொடங்கியிருக்கனும். செப்டம்பர் இரண்டாவது வாரமே, குறுவை நெல் கொள்முதலை தொடங்கியிருக்கணும். ஆனா ரொம்ப தாமதமா அக்டோபர் 1-ம் தேதிதான் கொள்முதல் நிலையங்களை திறந்தாங்க. அப்பவும் கூட கொள்முதல் தொடங்கப்படவே இல்லை. சணல் இல்லை, சாக்கு இல்லைனு இன்னும் பல காரணங்களைச் சொல்லி, விவசாயிகளை காத்திருக்க வச்சிட்டாங்க.

நெல் கொள்முதல் நிலையத்தில்
நெல் கொள்முதல் நிலையத்தில்
ம.அரவிந்த்
வீதிகளில் கிடந்த நெல் மூட்டைகள்... மழையில் நனைந்த அவலம்!

5-ம் தேதிதான் கொள்முதலை ஆரம்பிச்சாங்க. அப்ப தேங்கின நெல்லு, தொடர்ச்சியா அடுத்தடுத்து தேங்கிக்கிட்டே இருக்கு. காலையில 10 மணிக்குதான் கொள்முதலை ஆரம்பிக்குறாங்க. தினமும் ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்றாங்க. இதுவே ரொம்பக் குறைவு. சில கொள்முதல் நிலையங்கள்ல இந்தளவுக்குக் கூட கொள்முதல் செய்யப்படுறதில்லை. இப்ப ஏற்பட்டுள்ள பிரச்னையை சமாளிக்க, தினமும் காலையில 6 மணிக்கே கொள்முதலை ஆரம்பிச்சிடணும். தினமும் இரண்டு சிப்ட் கொள்முதல் நடக்கணும். இதுக்கேத்த மாதிரி ஊழியர்களை பணி அமர்த்தணும். சில வருசங்களுக்கு முன்னாடி நடைமுறையில இருந்த, நடமாடும் கொள்முதல் நிலையத்தை, மறுபடியும் செயல்படுத்தணும். இதையெல்லாம் செஞ்சாதான் விவசாயிகள் தங்களோட நெல்லை ஓரளவுக்காவது விற்பனை செஞ்சி, பொருளாதார நெருக்கடிகள்ல இருந்து தப்பிக்க முடியும்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு