Published:Updated:

`புதிய விலைக்காக அக்டோபர் வரை காத்திருக்க முடியாது!' - காரீப் தொடர்பாக விவசாயிகளின் புதிய கோரிக்கை

நெல் வயல்
நெல் வயல்

விளைபொருள்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை, அக்டோபர் 1-ம் தேதியிலிருந்துதான் நடைமுறைக்கு வருகிறது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென தமிழக விவசாயிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளில் பலர், நிலத்தடி நீரை சார்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்கிறார்கள். இது ஜூலை மாத இறுதி முதல் அறுவடைக்கு வருகிறது. இதுமட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமே நிலத்தடி நீரை நம்பி ஆண்டுதோறும் கோடை பட்டத்தில் பருத்தி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு, ஜூலை மாதம் கடைசி வாரத்திலிருந்தே அறுவடைக்கு வரத் தொடங்கிவிடுகிறது. ஆனால் விளைபொருள்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை, அக்டோபர் 1-ம் தேதியிலிருந்துதான் நடைமுறைக்கு வருகிறது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென தமிழக விவசாயிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

வயல்
வயல்
நெல் கொள்முதல் லஞ்சம்: அடுத்தடுத்து பிடிபடும் அதிகாரிகள்; துணிச்சலோடு அம்பலப்படுத்தும் விவசாயிகள்!

இதுகுறித்து பேசும் தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தலைவரும், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளருமான ஆறுபாதி கல்யாணம், ``காரீப் பருவத்துக்குரிய விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இந்த புதிய விலை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 141 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்களில் 68 மில்லியன் ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசனம் உறுதியளிக்கப்பட்ட பரப்பளவாக உள்ளது. இவற்றில் 42 மில்லியன் ஹெக்டேர் நிலம், நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யும் விளைநிலங்களாகும்.

நிலத்தடி நீரை நம்பியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருத்தி உள்ளிட்ட பயிர்களையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் காரீப் பருவம் என்பது அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால், புதிய விலைக்காக 3 முதல் 5 மாதங்கள் வரை விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மத்திய அரசு காரீப் பருவத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது. அந்தக் காலத்தில் முழுவதுமாக பருவமழையை நம்பியும், ஆற்றுப் பாசனத்தை நம்பியும் சாகுபடி நடைபெற்றபோது இந்த நடைமுறை சரியாக இருந்திருக்கும். ஆனால், தற்போது நாடு முழுவதும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி முன்பட்ட காரீப் பருவ சாகுபடியை விவசாயிகள் அதிகளவில் மேற்கொள்கின்றனர்.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

உதாரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் முன்பட்ட குறுவை சாகுபடியை நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் மேற்கொள்கின்றனர். இந்த பயிர்கள் ஜூலை மாத இறுதி முதல் அறுவடை செய்யப்படும். ஆனால், அறுவடை செய்த விளைபொருட்களை உடனடியாக புதிய விலையில் விற்பனை செய்ய இயலாது. எனவேதான் காரீப் பருவம் தொடக்கத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் என அறிவித்து, புதிய விலையில் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இது தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது கோடையில் மற்ற பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நன்மை தரும். இதற்கு மத்திய அரசை, தமிழக வலியுறுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு