Published:Updated:

`மேட்டூரைத் திறந்தால் மட்டும் போதாது, பங்காளியோட மனசையும் தொறக்கணும்!’ -முதல்வருக்கு டெல்டா கோரிக்கை

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு குறுவை சாகுபடிக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக முதல்வரின் அறிவிப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரிநீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், போதிய அளவு நீர் இருப்பு இல்லாத ஆண்டுகளில், மேட்டூர் அணை திறப்பு பல வாரங்கள் தள்ளிப்போன வரலாறும் உண்டு. இதனால் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டு, மிகுந்த மன உளைச்சல் அடைவார்கள். இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, டெல்டா விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், குறுவை சாகுபடி வெற்றிகரமாக நடைபெற, தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில யோசனைகளையும் முன் வைக்கிறார்கள்.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் பேசியபோது, ``ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை மனதார வரவேற்கிறோம். டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு குறுவை சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக முதல்வரின் அறிவிப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்கள், இடுபொருள்களை வழங்க வேண்டும்.

குறுவை மற்றும் சம்பா சாகுபடி காலம் முழுமைக்கும், மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பையோ, பருவ மழையையோ முழுமையாக நம்பியிருக்க முடியாது. எனவே, கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு சட்டப்படி தர வேண்டிய காவிரி பங்கு நீரை பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு உரிய பங்கு நீரை கர்நாடகாவிடமிருந்து தமிழக அரசு பெற வேண்டும்’’ என்றார்.

வீரசேனன்
வீரசேனன்

தஞ்சை மாவட்டம் பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் சங்கத் தலைவருமான வீரசேனன் பேசுகையில், ``காவிரி மற்றும் கல்லணைக் கால்வாயில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஆறுகளின் கரைகள் பலவீனமாக உள்ளன. கரைகளை பலப்படுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை. எனவே, மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டாலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேருமா என இப்பகுதி விவசாயிகளுக்கு சந்தேகமாக உள்ளது. இதை அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார், ``கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் அதே நேரத்தில் தலைமடை பகுதியிலும் தண்ணீரைப் பகிர்ந்து வழங்க வேண்டும். கல்லணை அருகே பாலம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ``மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள உத்தரவாதம் வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குறுவை நெல் அறுவடை நேரத்தில் பெய்யக்கூடிய மழையால் நெல்மணிகள் ஈரமாகிறது. இதைக் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகள் சிரமம் அடைகிறார்கள்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஈரமான நெல்மணிகளை உலர்த்தக்கூடிய நவீன இயந்திரங்களுடன் உலர் களங்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். மேலும், குறுவைக்குத் தேவையான குறுகிய கால விதைகள் தரமானவையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கவும், ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட வேளாண் நகைக் கடன்களுக்கு ஈடான நகைகளை விவசாயிகளுக்கு திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு