Published:Updated:

டெல்டாவுக்கு ஒதுக்கப்படாத விவசாய துறைகள்... ஆதங்கத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்... விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி என்பதால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தாம் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களாகப் பெரும்பாலும் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.

இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்த டெல்டாவில் இருந்து ஒரு அமைச்சர்கூட இடம்பெறாதது இப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றத்திலும் ஆதங்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இது விவசாய பூமி. எனவே, வேளாண்மை மற்றும் உணவுத்துறைக்கு டெல்டாவைச் சேர்ந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்தான் அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இத்துறைகளுக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமித்துள்ளது தி.மு.க தலைமை. விவசாயத்தோடு தொடர்புடைய மற்ற துறைகளான கால்நடை, பால்வளம், கூட்டுறவு, நீர்வளம் உள்ளிட்ட துறைகளுக்கும் கூட இப்பகுதியைச் சேர்ந்த ஒரு அமைச்சர்கூட இல்லை. இதனால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சி, ஆட்சிக்கு வந்தாலும் நிச்சயம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் முக்கிய இடம் வகிப்பது வழக்கமாக இருந்தது. இது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி என்பதால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தாம் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களாகப் பெரும்பாலும் நியமிக்கப்பட்டு வந்தார்கள். அண்ணா அமைச்சரைவில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி பொதுப்பணித்துறையாக இருந்தார். நீர்ப்பாசனம் இத்துறையின் கீழ்தான் இருந்தது. 1970-களில் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மன்னை நாராயணசாமி விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த கோ.சி.மணி வேளாண்மை, உள்ளாட்சி, புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வெவ்வேறு காலகட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா வணிக வரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதிவாணன் பால்வலத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு விவசாயத்துறைக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.காமராஜ் உணவுத்துறைக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். 2011-2016 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த வைத்திலிங்கம் பவர்ஃபுள் அமைச்சராக வலம் வந்தார். அந்தக் காலகட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால், ஜீவானந்தம் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க ஆட்சியில் டெல்டாவைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் கூட அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா
டெல்டா

மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா கண்டிப்பாக அமைச்சர் ஆக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற சாக்கோட்டை அன்பழகன், வேளாண் அல்லது உணவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனப் பரவலான பேச்சு நிலவியது. திருவையாறு தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுப்பட்டுள்ள துரை.சந்திரசேகருக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என இப்பகுதி மக்கள் நம்பினார்கள்.

திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ கோவி.செழியனுக்கு வாய்ப்பு இருப்பதாக தி.மு.க-வினர் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், இவர்களில் ஒருவருக்குக்கூட அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தி.மு.க-வின் மேல்மட்ட நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, ``அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்போது, கண்டிப்பாக டெல்டாவுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படும். தற்போது பல்வேறு துறைகளுக்கு ஒரே அமைச்சரிடம் பல துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பிரிக்கப்பட்டு, டெல்டாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்’’ எனத் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு