Published:Updated:

`விவசாய சட்டங்களால் நுகர்வோரும்தான் பாதிக்கப்படுவார்கள்!' - சென்னையில் நடைபெற்ற போராட்டம்

Farmers Protest
Farmers Protest

டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு உடனடியாக வேளாண் விரோதச் சட்டங்களை கைவிட வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றன.

டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு உடனடியாக வேளாண் விரோதச் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் தி.மு.க, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதோடு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இயற்கை விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சேவை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் ஒன்றான பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசியபோது, ``நுகர்வோர் கோணத்திலும் இந்த மூன்று சட்டங்களைப் பற்றியுமான புரிதல் ஏற்பட வேண்டும் என்றே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். உணவுப் பொருளை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமல்ல, அதை வாங்கிச் சாப்பிடுபவர்களும் இந்த வேளாண் சட்டத்தால் பாதிக்கப்படத்தான் போகிறார்கள். அதை வலியுறுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை அழைத்த மத்திய அரசு திறந்த மனத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களிலும் திருத்தம் செய்வதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். பெண்கள் அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இன்றைக்கு நாடு முழுவதும் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு