Published:Updated:

சேதமான 3 கண்மாய் மதகுகள்; திண்டுக்கல்லில் பல ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கும் அபாயம்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் மூன்று மதகுகள் சேதமடைந்துள்ளதால் பல ஏக்கர் விளைநிலங்களும் பயிர்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 13-ம் தேதி மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சராசரியாக 70 முதல் 90 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மொத்தம் 120 நாள்கள் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால் ஆத்தூர் வட்டத்தில் 6,583 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறும்.

மடை
மடை

இதில் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தாமரைக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 44.5 ஹெக்டேர் ஏக்கர் பரப்பு கொண்ட இந்தக் கண்மாய்க்கு 3 மதகுகள் உள்ளன. மதகு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் போதிய பராமரிப்பின்றி இருந்ததாலும், அவை சேதமடைந்துள்ளன. இதனால் கண்மாயில் நீர் தேங்காமல் சேதமடைந்துள்ள மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

கண்மாயில் நீர் முழுகொள்ளளவை எட்டினால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செய்யலாம் என்ற நோக்கில் இப்பகுதி விவசாயிகள் மணல் மூட்டைகளை மதகுகளில் அடுக்கினர். இருப்பினும், மதகுகள் வழியாக நீர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

`முதல்வர் உத்தரவிட்டும்கூட சம்பா பயிர்க்கடன் கிடைக்கவில்லை!' - விவசாயிகள் ஆதங்கம்

ஒரு ஏக்கருக்கு இரண்டரை டன் வரை நெல் சாகுபடி நடக்கும். மொத்தமாக பார்த்தால் 1,250 டன் கிடைக்கிறது. இந்நிலையில், தொடர்மழை பெய்தாலோ, வரத்து அதிகரிப்பின் காரணாக கண்மாய் நிரம்பினாலோ வழுவிழந்துள்ள மதகுகள் உடையும் அபாயம் உள்ளது. அவ்வாறு உடையும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கும் நிலை உண்டாகும் என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மூத்த விவசாயிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரிகளின் அலட்சியம்

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி குமார், ``இந்தக் கண்மாயை நம்பி அய்யங்கோட்டை, புதூர், தங்கரெட்டிகோட்டை, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 252 ஹெக்டேர் பரப்புக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மருதாநதியிலிருந்து வரும் நீரால் கண்மாய்க்கு வரத்து அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே நீர் பற்றாக்குறை இன்றி விவசாயம் செய்யலாம். தற்போது அதிக பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் செழித்து வளர்த்து அறுவடைக்குத் தயாராகும் வரை நெல்லுக்கு தண்ணீர் தேவை. இத்தகையைச் சூழலில் கண்மாயில் தண்ணீரைச் சேமிக்க வழி செய்யாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். முன்பு வரை 3 போகம் நெல் சாகுபடி செய்து வந்தோம். ஆனால், சில ஆண்டுகளாக ஒரு போகம் விளைவிக்கவே பெரும் சிரமமாக உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலரும் பெரு விவசாயிகள் அல்லர். சிறு, குறு விவசாயிகள்தாம். இதனால்தான் என்னவோ அதிகாரிகள் எங்கள் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்'' என்றார்.

வீணாக வெளியேறும் நீர்
வீணாக வெளியேறும் நீர்
மூடப்படும் புதுக்கோட்டை ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறுகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ``தமிழக அரசின் ஆணைக்காகக் காத்திருக்கிறோம். கிடைத்ததும் தாமரைக்குளம் கண்மாயின் சேதமடைந்த மதகுகளை முழுவதும் அகற்றிவிட்டு புதிதாக அமைக்க உள்ளோம். இதேபோல அதேபகுதியில் உள்ள கருங்குளம், புளியங்குளம் ரெங்கசமுத்திரம் குளம் கண்மாய்களுக்கு கான்கிரீட் மடை அமைக்க உள்ளோம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு