Published:Updated:

`மணல் அள்ளுபவர்களை விட்டுவிட்டு எங்களை கைது செய்வதா?' - மகனுக்காக செல்போன் டவரில் ஏறி போராடிய தந்தை

சத்திரப்பட்டி காவல் நிலையம்
சத்திரப்பட்டி காவல் நிலையம்

கிராவல் மணல் அள்ளியதை புகைப்படம் எடுத்தவர்கள் மீது கொலை முயற்சி, பி.சி.ஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தனியார் செல்போன் டவரில் ஏறி 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போரட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் கிராவல்மணல் அள்ளுவதைப் புகைப்படம் எடுத்த 8 பேரின் செல்போன் பறிக்கப்பட்டு, அந்த 8 பேரின் மீதும் கொலை முயற்சி மற்றும் பி.சி.ஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் காளிபட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் அப்பகுதியிலுள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போரட்டத்தில் ஈடுபட்டார்.

செல்போன் டவரில் ஏறிய சதாசிவம்
செல்போன் டவரில் ஏறிய சதாசிவம்
`கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி மற்றும் ஆயக்குடி போலீஸார் சதாசிவத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸார் தெரிவித்ததை அடுத்து சமரசம் ஏற்பட்டு செல்போன் டவரில் இருந்து சதாசிவம்‌ கீழே இறங்கி வந்தார்.

இதுகுறித்து சதாசிவத்திடம் பேசினோம், ``மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் மோகனபிரபு, தி.மு.க-வைச் சேர்ந்த வெங்கடாசலம் உள்ளிட்ட தி.மு.கவினர் கடந்த 28-ம் தேதி மண் அள்ளிக் கொண்டிருந்தனர். என்னோட மகன் கலைகௌதம் மற்றும் அவரது நண்பர்களுடன் சென்று போட்டோ எடுத்தபோது அங்குள்ளவர்கள் செல்போன்களை பிடுங்கி, சரமாரியாக அடித்தனர்.

டவரில் ஏறிய சதாசிவம்
டவரில் ஏறிய சதாசிவம்

இந்த நிலையில் எனது மகன் கலைகௌதம், கவியரசு,மனோஜ், ஓடை ஈஸ்வரன், வனசேகர், கார்த்தி, ராஜேஷ் உள்ளிட்ட 8 பேர் மீதும், சத்திரப்பட்டி போலீஸார் கொலை முயற்சி மற்றும் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்தனர். மண் அள்ளுபவர்களை விட்டுவிட்டு, தடுத்தவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டேன். குற்றத்தில் ஈடுபவட்டவர்களை புகைப்படம் எடுத்தவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்வது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகத்திடம் பேசினோம். ``திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி வட்டங்களில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட பெரிய குளங்களில், அனுமதி கொடுத்ததை விட பல நூறு மடங்கு அதிகமாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான நல்லதங்காள் ஓடையை வெட்டி நாசப்படுத்தி 25 அடி முதல் 40 அடி ஆழத்திற்கு மேல் தோண்டியுள்ளனர். இதனால் சுமார் 4 லட்சம் பேருக்கு நீர் ஆதாரமாக விளங்கிய நல்லதங்காள் ஓடையில் மட்டும் 4,000 லாரி லோடுக்கும் மேல் கிராவல் மண்ணை எடுத்து திருட்டுத் தனமாக ரூ.200 கோடி வரையிலும் விற்றுள்ளனர்.

சண்முகம்
சண்முகம்

ஆந்திர ரெட்டி நிறுவனங்களின் பெயர் கொண்ட டிப்பர் லாரிகள், டிராக்டர்களைக் கொண்டு கிராவல் மண் கொள்ளையடிக்கும் மாஃபியா கும்பலைச் சேர்ந்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது ஆட்கள் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கை வளத்தைச் சீரழித்து மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியைச் சார்ந்த உள்ளூர் பொதுமக்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், நாம் தமிழர் கட்சியினர் ஆகியோர் பல முறை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், ஒட்டன்சத்திரம், பழனி தாலுகாக்களின் தாசில்தார்கள் ஆகியோரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும், அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மதியம் சுமார் 12 .30 மணி அளவில் காளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர், திருட்டுத்தனமாக மண் அள்ளிக்கொண்டிருந்த வாகனங்களையும், கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டு இருந்த நபர்களையும் தங்களது அலைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.

கிராவல் மண் அள்ளப்பட்ட இடம்
கிராவல் மண் அள்ளப்பட்ட இடம்
அதிகாரிகள் உதவியுடன் ஆற்றங்கரையையே உடைத்து மணல் திருடும் கொள்ளையர்கள்; அதிர்ச்சியில் விவசாயிகள்!

அப்போது இவர்கள் படம் எடுப்பதைக் கவனித்த கிராவல் மண் கொள்ளையர்கள், அந்த இளைஞர்களை சூழ்ந்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்களது அலைபேசிகளை பிடுங்கி வைத்துக் கொண்டனர். இது சம்பந்தமாக உடனடியாக ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அவர்களிடம் நேர்மை மக்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் மூலமாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அலைபேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த மாஃபியா கும்பலைச் சேர்ந்த மஞ்சநாயக்கன்பட்டி வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, சிதம்பரம்,முத்துக்குமார் உள்ளிட்ட 15 பேர் மீது சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார்மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யாவிட்டால் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என உள்ளூர் மக்கள் கூறிய பிறகே கிராவல் மண் கொள்ளையர்கள் மீது இரவு 10.30 மணிக்கு வேண்டாவெறுப்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

செல்போன் டவர் மீது சதாசிவம்
செல்போன் டவர் மீது சதாசிவம்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடுசுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இணைந்து மணல் கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கையாக அனுப்பி, அதில் ஏற்பட்டிருக்கும் இழப்பீடு நிதியை அரசுக்கே திரும்பச் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு