Election bannerElection banner
Published:Updated:

``சீக்கிரம் முன்னோடி பண்ணையா மாத்திடுவேன்!" - கே.வி.ஆனந்தின் இயற்கை விவசாய பகிர்வுகள்

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

விவசாயம் செய்வதற்காகவே திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அந்த விவசாய அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்ரல் 30-ம் தேதி) அதிகாலை காலமானார். அவர் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விவசாயம் செய்வதற்காகவே திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். தன்னுடைய விவசாயம் அனுபவம் குறித்து விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி விகடன் தீபாவளி மலரில் (2020) இடம் பெற்றிருந்தது. அப்போது விவசாயம் குறித்து அவர் பேசிய விஷயங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

கே.வி.ஆனந்தின் பண்ணை சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்பாக்கத்தில் இருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, அடர்ந்த மாந்தோட்டங்கள் நிறைந்த சாலையின் வழியே பயணித்தால் வருகிறது பண்ணை.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

சுட்டெரிக்கும் வெயிலிலும் இதமான காற்று வீச பண்ணைக்குள் சுகமான சூழல் நிலவியது. நம்மை இன்முகத்தோடு வரவேற்றவர் தான் விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்னார். ``எனக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் உள்ள அடையாறுதான். எங்கப்பா ஒரு வங்கி மேலாளர். எங்க அம்மாவழி பாட்டிவீடு பழவேற்காட்டில் இருந்தது. கொள்ளுப்பாட்டி பேரு தனக்கோட்டி. சும்மாவே இருக்காது, தொட்டியில விதை போடுறது, அதுக்கு தண்ணி ஊத்துறதுனு எப்போதும் எதையாவது செஞ்சுகிட்டே இருக்கும்.

சாணம் கொட்டுற தொட்டியில கொய்யாச் செடி வளர்த்திருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிளெல்லாம் பீர்க்கன், புடலைனு சின்னச் சின்ன செடிகளையெல்லாம் வளர்த்துட்டு இருக்கும். சின்ன செடிகளோடு வாழையும் இருக்கும். இந்தத் தோட்டம் ஒரு குடும்பத்தோட காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்துவிடாது. ஆனா, இடத்த சும்மா போட்டு வைக்காமல் அதைப் பசுமையாக்கிற எண்ணமிருக்கில்ல, அதுதான் முக்கியம். அங்கே போகும்போதெல்லாம் அவங்களோட கூடவே இருந்து இதையெல்லாம் பார்ப்பேன். அந்தச் செடிகளுக்கு தண்ணி ஊத்துறது, கூடமாட உதவுறதுனு இருப்பேன். அதேமாதிரி கோழிகளுக்கு குக்கம்னு ஒரு வகை நோய் வரும். அது வந்தா கோழியோட தலையைப் பிடிச்சு தண்ணியில முக்கி எடுப்பாங்க. நானும் அதேமாதிரி செய்வேன். இப்படி வளர்ந்ததால விவசாயத்துக்கான விதை அப்பவே எனக்குள்ள விழுந்துடுச்சு.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

ப்ளஸ் டூ படிச்சிட்டிருக்கும்போது, அடையாறுல ஒன்றரை கிரவுண்டுல சொந்த வீடு வாங்கி குடியேறினோம். வீட்டைச் சுற்றி காலி இடம் நிறைய இருந்தது. அந்த இடத்துல நிறைய செடிகள வளர்க்க ஆரம்பிச்சோம். அந்த நேரத்துல சென்னையில இருந்த பல நர்சரிகளுக்குப் போய் செடிகளையும் விதைகளையும் வாங்கிட்டு வந்து விதைப்பேன். தோட்டக்கலை சார்பா ஜெமினி மேம்பாலம் பக்கத்துல அடிக்கடி மலர்க் கண்காட்சி நடக்கும். அங்கே போயும் மலர்ச் செடிகள வாங்குவேன். இப்படிச் செடிகள வளர்க்கிறதுல ஆர்வத்த வளர்த்துக்கிட்டேன். ஆரம்பத்துல இந்தத் தோட்டம் போடுறது மட்டுமே நான் விவசாயம்னு சொல்லிக் கொள்ளும்படியா இருந்தது.

அப்போதே `எருவுன்னா மட்கி இருக்கணும், விதைன்னா வீரியமா இருக்கணும். அதேசமயம் விதையை எப்படி விதைக்கணும்’னு ஒரு அடிப்படை அறிவைத் தெரிஞ்சுகிட்டேன். இந்த அனுபவம்தான் விவசாயத்துல இன்னைக்கு கைகொடுக்குது. இந்த அனுபவத்தை வெச்சே ப்ளஸ் டூவுக்குப் பிறகு பி.எஸ்ஸி அக்ரி படிக்கணும்னு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்துக்கு விண்ணப்பிச்சேன். அது கிடைக்காததால பி.எஸ்ஸி இயற்பியல் சேர்ந்தேன். பிறகு ப்ரீலான்சர் போட்டோகிராபரா இந்தியா டுடே, கல்கி, இல்லஸ்ட்ரேட் வீக்லி பத்திரிகைகளுக்கு வேல செஞ்சேன். அதன்பிறகு ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து சினிமா ஒளிப்பதிவாளரானேன். தொடர்ந்து ஒளிப்பதிவாளரா இருந்தபோது தடாவுக்கு பக்கத்துல இருக்கிற ஆரம்பாக்கத்துல விவசாய நிலம் இருக்கிறதா சொன்னாங்க. அப்போ கையிலிருந்த பணம், சேமிப்பு வெச்சு நிலத்த வாங்கினோம். அது முழுக்க மாந்தோட்டமா இருந்துச்சு. 2000-ம் வருஷத்துக்குப் பிறகு சென்னையில மாடித்தோட்டம் பிரபலமானது. அதையும் வீட்டுல போட ஆரம்பிச்சோம்.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

நான் ஒரு திடீர் விவசாயி. ஆரம்பத்துல நிலத்த வாங்கிப் போட்டுட்டோமே ஒழிய அதுல என்ன செய்யணும்னு தெரியல. வாரக் கடைசியில தோட்டத்துக்குப் போவோம். சும்மாவே நிலத்த கொத்தி விட்டுட்டு, குப்பையெல்லாம் ஓர் இடத்துல போட்டுட்டு வந்துவிடுவோம். வேலையாட்கள் அதைச் சரியா பராமரிக்கிறாங்களானுகூட தெரியாது. இங்க மொத்தமா 15 ஏக்கர் நிலம் இருக்கு. மா விவசாயத்தோடு நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கும் போடுவோம். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டு வந்தோம். பிறகு, இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். கடந்த சில வருஷமா தீவிரமா இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றேன்.

இயற்கை நுண்ணுயிர் உரங்களான அசோஸ் ஸ்பைரில்லம், பேஸில்லஸ் சப்டிலஸ், டிரைக்கோடெர்மா விரிடி பெயர்களெல்லாம் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. லத்தீன் மொழி பெயர்களைக் கொண்ட பிரெஞ்சு, இத்தாலி சினிமா இயக்குநர்களை பெயரை மட்டுமே அறிந்திருந்த எனக்கு இது இப்போது புதுசாயிடுச்சு. அந்தளவுக்கு இயற்கை விவசாயம் மேல தீவிர ஈடுபாடு வந்துடுச்சு. என்னுடைய ஸ்கிரிப்ட் வேலையைக் கூட ஒழுங்கா பார்க்க முடியல. `நம்ம தொழில் சினிமாதான், விவசாயம் இல்ல; அது ஒருபகுதிதான்’னு மனசாட்சி சொன்னாலும் விவசாயத்து மேல இருக்கிற ஈடுபாடு குறையல. இந்த ஊரடங்கு வந்ததுகப்புறம், விவசாயத்துல இன்னும் தீவிரமாயிட்டேன். முன்னெல்லாம் மாசத்துக்கு ஒருமுறை, வாரத்துக்கு ஒருமுறைதான் போய்ட்டு வருவேன். இப்போ வாரத்துக்கு மூணு நாள்கள் போய்ட்டு வந்துடுறேன். விவசாயத்துல என்ன நடக்குது? அடுத்து என்ன செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்குது. அத இயற்கை முறையில சரியா செய்யணும்னுங்கிறதும் என்னுடைய எண்ணம்.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

எப்போதுமே எனக்குப் புடிச்ச விஷயத்தைத்தான் செய்வேன். அது உணவாக இருக்கட்டும், சினிமாவா இருக்கட்டும். அதேமாதிரிதான் விவசாயமும் பிடிக்கும். தோட்ட வேலைகளெல்லாம் நானே இறங்கி செஞ்சிடுவேன். நிறைய விவசாயம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்ல இருக்கேன். பசுமை விகடன்ல தெலங்கானா விவசாயி நாகரத்தின நாயுடு சொன்ன ஒற்றை நாற்று நெல் நடவு முறையில பயிரிடலாம்னு இருக்கேன். என்னுடைய விவசாயப் பயணத்துல பசுமை விகடனோட பங்கு முக்கியமானது. இயற்கை விவசாயத்துக்குனு ஒரு பத்திரிகை இருக்கிறது ரொம்பவே அவசியம். குறிப்பாக, புதுசா விவசாயத்துக்கு வர்றவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. விகடன் குழுமத்துல சில பத்திரிகைகள் நிறுத்தியபோது பசுமை விகடன் மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்று எண்ணிணேன். இந்த 53வது வயசுலயும் புதுசா ஏதாவது தெரிஞ்சிட்டு இருக்கேனா அது விவசாயத்துலதான். என்னுடைய பண்ணை ஒரு முன்னோடி பண்ணைனு சொல்ல முடியாது. ஆனா, அந்த முன்னோடி பண்ணையா மாறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உருவாகிட்டு இருக்கு.

நிறைய பேரு நிலத்த வாங்கிட்டு `ஆர்கானிக் பார்மிங்’னு வீக் எண்டுல பண்ணைக்குப் போறாங்க. ஜாலியா சமைச்சு சாப்பிட்டுட்டு திரும்பி வந்திடுறாங்க. அப்படியில்லாம, சின்சியரா குடும்பத்தோடு போய் பண்ணையில உழைச்சா, விவசாயத்திலயும் வருமானம் சம்பாதிக்கலாம். இன்னைக்கு விவசாயத்துல நிறைய கருவிகள் வந்துடுச்சு. விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கிறது சிரமமா இருக்கு.

அதுவும் நல்ல ஆட்கள் கிடைக்கிறது இன்னும் சிரமமா இருக்கும். யாரோ ஒருத்தரு காட்ற கணக்குதான் நாம ஏத்துக்க வேண்டியதா இருக்கு. இப்போ மூணு வருஷமா நாமே இறங்கி செய்றதால, லாப நஷ்ட கணக்கு தெரியுது. இதுவரைக்கும் செஞ்ச செலவுக்கு பணம் வந்துவிட்டதா என்றால் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல முடியும். இன்னும் சில வருஷங்கள் கழிச்சுதான் வருமானம் கிடைக்கும். அதுக்கான முயற்சியைப் போட்டுட்டு வர்றேன்.”

கே.வி.ஆனந்தின் பண்ணை குறித்தான வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு