Published:Updated:

இயற்கையில் கலந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் கே.வி.ஆனந்த்

நினைவுகள்

இயற்கையில் கலந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

நினைவுகள்

Published:Updated:
பண்ணையில் கே.வி.ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் கே.வி.ஆனந்த்

ந்தியாவுக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்தபோது அதிகம் பேசப்பட்ட தமிழ்த் திரைப்படம் ‘காப்பான்.’ இந்தியாவை அழிப்பதற்காக வெளிநாட்டினரின் சதியால் பூச்சிகளை அனுப்புவார்கள். அதைக் கதாநாயகன் முறியடிப்பார். அதே திரைப்படத்தில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவமும் பேசப்பட்டிருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும் திரைப்பட இயக்குநருமான கே.வி.ஆனந்த். இவர் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அதிகாலை இயற்கையில் கலந்தார். அவருக்கு வயது 54. பசுமை விகடனின் தீவிர வாசகரான இவர், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில், இயற்கை விவசாயமும் செய்து வந்தார். இந்தப் பண்ணையை எப்படியாவது ஒரு முன்னோடி பண்ணையாக மாற்றிவிட வேண்டும் என்று துடிப்பாக வேலை செய்து வந்தார். அதுவும் சென்ற கொரோனா ஊரடங்கிலிருந்து முழு ஈடுபாட்டோடு பண்ணை வேலைகளைச் செய்து வந்தார். அந்த விவசாய அனுபவங்கள் 2020, விகடன் தீபாவளி மலரில் வெளியானது. அதில் தன்னுடைய பண்ணை குறித்துச் சில தகவல்களைப் பேசியிருந்தார். அதோடு அதில் இடம்பெறாத தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன.

“எனக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை அடையாறுதான். எங்க அம்மாவழி பாட்டிவீடு பழவேற்காட்டில் இருந்தது. கொள்ளுபாட்டி பேரு தனக்கோட்டி. சும்மாவே இருக்காது, தொட்டியில விதை போடுறது, அதுக்குத் தண்ணி ஊத்துறதுனு எப்போதும் எதையாவது செஞ்சுகிட்டே இருக்கும். சாணம் கொட்டுற தொட்டியில கொய்யாச் செடி வளர்த்திருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிளெல்லாம் பீர்க்கன், புடலைனு சின்னச் சின்ன செடிகளை யெல்லாம் வளர்த்துட்டு இருக்கும். சின்ன செடிகளோடு வாழையும் இருக்கும். இந்தத் தோட்டம் ஒரு குடும்பத்தோட காய்கறித் தேவையைப் பூர்த்திச் செய்துவிடாது. ஆனா, இடத்த சும்மா போட்டு வைக்காமல் அதைப் பசுமையாக்கிற எண்ணமிருக்கில்ல, அதுதான் முக்கியம். அங்கே போகும்போதெல்லாம் அவங்களோட கூடவே இருந்து இதை யெல்லாம் பார்ப்பேன். அந்தச் செடிகளுக்குத் தண்ணி ஊத்துறது, கூடமாட உதவுறதுனு இருப்பேன். அதேமாதிரி கோழிகளுக்கு ‘குக்கம்’னு ஒரு வகை நோய் வரும். அது வந்தா கோழியோட தலையைப் பிடிச்சு தண்ணியில முக்கி எடுப்பாங்க. நானும் அதேமாதிரி செய்வேன். இப்படி வளர்ந்ததால விவசாயத் துக்கான விதை அப்பவே எனக்குள்ள விழுந்துடுச்சு.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

20 வருஷத்துக்கு முன்ன ஒளிப்பதிவாளரா பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஆரம் பாக்கத்துல விவசாய நிலம் இருக்கிறதா சொன்னாங்க. அப்போ கையிலிருந்த பணம், சேமிப்பை வெச்சு 15 ஏக்கர் நிலத்த வாங்கினோம். அப்போ முழுக்கவே மாந்தோட்டமா இருந்துச்சு. ஆரம்பத்துல நிலத்த வாங்கிப் போட்டுட்டோமே ஒழிய அதுல என்ன செய்யணும்னு தெரியல. வாரக் கடைசியில தோட்டத்துக்குப் போவோம். சும்மாவே நிலத்த கொத்தி விட்டுட்டு, குப்பையெல்லாம் ஓர் இடத்துல போட்டுட்டு வந்துவிடுவோம்.

திருவள்ளூர் மாவட்டத்துல மா விவசாயம் நிறைய நடக்கும். என்னோட தோட்டத்துல பங்கனப்பள்ளி, ருமானி, நீலம்னு இருந்தது. அதோடு நாங்க நிலம் வாங்கியிருக்கிற பகுதில மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகம் நடக்கும். அதனால, அந்தப் பகுதிக்கேத்த பயிராகவே மரவள்ளிக்கிழங்கு போட்டோம். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டு வந்தோம். பசுமை விகடன் வருகைக்குப் பிறகு இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். அதிலும் கடந்த சில வருஷமா தீவிரமா இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பேஸில்லஸ் சப்டிலஸ், டிரைக்கோடெர்மா விரிடி பெயர்களெல்லாம் லத்தீன் மொழி யிலிருந்து வந்தது. லத்தீன் மொழி பெயர் களைக் கொண்ட பிரெஞ்சு, இத்தாலி சினிமா இயக்குநர்கள் பெயரை மட்டுமே அறிந்திருந்த எனக்கு இது இப்போது புதுசாயிடுச்சு. அந்தளவுக்கு இயற்கை விவசாயம் மேல தீவிர ஈடுபாடு வந்துடுச்சு.

என்னுடைய ஸ்கிரிப்ட் வேலையைக்கூட ஒழுங்கா பாக்க முடியல. ‘நம்ம தொழில் சினிமாதான், விவசாயம் இல்ல; அது ஒருபகுதிதான்’னு மனசாட்சி சொன்னாலும் விவசாயத்து மேல இருக்கிற ஈடுபாடு குறையல. இந்த ஊரடங்கு வந்ததுக்கப்புறம், விவசாயத்துல இன்னும் தீவிரமாயிட்டேன். முன்னெல்லாம் மாசத்துக்கு ஓருமுறை, வாரத்துக்கு ஒருமுறைதான் போய்ட்டு வருவேன். இப்போ வாரத்துக்கு மூணு நாள்கள் போய்ட்டு வந்துடுறேன். விவசாயத்துல என்ன நடக்குது? அடுத்து என்ன செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்குது. அதை இயற்கை முறையில சரியா செய்யணும்ங்கிறதும் என்னுடைய எண்ணம்.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

முன்னாடி என்னோட தோட்டத்துல 40 அடிக்கு 40 அடி இடைவெளியில மாமரங்கள் இருந்துச்சு. அது சரியாகக் காய்க்காமல் இருந்ததுனால, அதை வெட்டி விட்டுட்டோம். தென்னாப்பிரிக்கா நாடானா கானா, இஸ்ரேல், பிரேசில் இங்கெல்லாம் மாவில் அடர்நடவு முறை ரொம்பப் பிரபலமாயிட்டு வருது. இந்த முறையில மாஞ்செடி மரமாகவே ஆகாது. செடியாக இருப்பது போலவே பராமரிச்சிட்டு வரணும். செடிகளுக்கு ரொம்ப இடைவெளி தேவையில்ல. வழக்கமா மாமரங்களுக்கு 30 அடி, 40 அடி இடைவெளியில நடுவாங்க. இந்த முறையில 13, 15 அடி இடைவெளியில நட்டே பராமரிக்கலாம். நான் 13 அடி இடைவெளியில தான் நட்டிருக்கேன். அதுக்கு சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கேன். அதேமாதிரி 4 மாஞ்செடிகளுக்கு இடையில் ஒரு செடி முருங்கை என்ற கணக்குல நட்டிருக்கேன். மகாராஷ்டிர மாநிலத்துல பிரபலமா இருக்கிற அதிக மகசூல் கொடுக்கும் திறனுள்ள ஓ.டி.சி(ODC) என்ற முருங்கை விதையை நட்டிருக்கேன். இந்த ரகம் அடர் நடவுக்கு மிகவும் ஏற்றது.

அதேமாதிரி மாவில கவாத்து அவசியம். ஒரு மரம் 7 அடி சுற்றளவுக்குத் தாண்டக் கூடாது. மரத்துக்கு நடுவுல சூரிய ஒளியும் காற்றும் தாராளமா போகணும். அதுகேத்த மாதிரி கவாத்து செய்யணும். கவாத்து செஞ்சிட்டு அப்படியே விட்டுடக் கூடாது. கிளைகள் வெட்டப்பட்ட இடத்துல நுண்ணுயிர் உரக் கலவையைப் பூசணும். மாஞ்செடிகளுக்குப் போர்வெல்ல இருந்து நேரரடியாகச் சொட்டுநீர்ப் பாசனத்துல தண்ணீர் வர்ற மாதிரி அமைச்சோம். ஆனா, அதுல பிரஷ்ஷர் வரலைங்கறதானால, ஒரு சின்ன அளவுல பண்ணைக்குட்டை அமைச்சு, அதுல தண்ணீர் விட்டு எடுத்துப் பாய்ச்சிட்டு வர்றோம். இந்தப் பண்ணைக்குட்டையில மீன்கள வளர்க்கணும்னு நினைச்சு ரூப்சந்தர் என்ற மீன் ரகத்தை 600 எண்ணிக்கையில வாங்கிட்டு வந்து விட்டோம். சில நாள்கள்ல எல்லா மீன்களும் செத்து மேலே மிதந்தது. பண்ணைக்குட்டையில இருந்த தவளை களும்கூடச் செத்து மிதந்தது. இதுக்குக் காரணம் என்னான்னு தேடினபோது பண்ணைக்குட்டை மேல தார்பாய் விரிச்சு அதுமேல தண்ணி விட்டிருந்தோம். தார்ப்பாய்ல இருந்த ரசாயனம் இதுக்கு காரணமாக இருந்திருக்கும்னு புரிஞ்சு கிட்டேன்.

பண்ணையில் கே.வி.ஆனந்த்
பண்ணையில் கே.வி.ஆனந்த்

இந்த வயசுலயும் புதுசா ஏதாவது தெரிஞ்சிட்டு இருக்கேனா அது விவசாயத் துலதான். என்னுடைய பண்ணை ஒரு முன்னோடி பண்ணைன்னு சொல்ல முடியாது. ஆனா, அந்த முன்னோடி பண்ணையா மாறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உருவாகிட்டு இருக்கு. நிறைய பேரு நிலத்த வாங்கிட்டு ‘ஆர்கானிக் பார்மிங்’னு வார இறுதியில பண்ணைக்குப் போறாங்க. ஜாலியா சமைச்சு சாப்பிட்டுட்டு திரும்பி வந்திடுறாங்க. அப்படியில்லாம, அர்ப்பணிப்போட குடும்பத்தோடு போய்ப் பண்ணையில உழைச்சா, விவசாயத்திலயும் வருமானம் பார்க்கலாம்” என்று நம்பிக்கையோடு பேசியிருந்தார் கே.வி.ஆனந்த்.

தமிழகம் ஓர் இயற்கை விவசாயியை இழந்துவிட்டது.

சத்துக் குறைபாட்டைப்
போக்கும் போன் மீல்!

“என்னோட பண்ணையில இருக்கிற மண்ணைப் பரிசோதனை செய்து பார்த்தபோது அதில் பாஸ்பரஸ் சத்து குறைவாக இருப்பதாக அறிக்கை வந்தது. இதுக்கு என்ன கொடுப்பது என்று தேடிக் கொண்டிருந்தபோதுதான், போன் மீல் (Bone Meal) என்று சொல்லப்படுற எலும்பு பவுடரை மண்ணுக்குக் கொடுக்கலாம் என்ற தகவல் கிடைச்சது. இதை அப்படியே கொடுக்காமல், கிளிஞ்சல் சுண்ணாம்பு, அடுப்புச் சாம்பல், ஹியூமிக் அமிலம் ஆகியவற்றை எருவோடு கலந்து கொடுத்தபோது நல்ல பலன் கிடைச்சது. குறிப்பா, இந்த போன்மீல் பழப்பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. மரத்தோட வயதைப் பொறுத்து அரைக் கிலோவிலிருந்து 5 கிலோ வரை மரத்தோட அடியில் போட்டுவிட்டால் போதும். இந்த எலும்பு பவுடரை வாங்க ஆன்லைன்ல தேடினபோது ஒரு கிலோ 30, 20 ரூபாய் என்று விலை போட்டிருந்தது. இது 3 தரத்துல இருக்கு. விவசாயத்துக்கு மூன்றாவது தரமே போதுமானது. உடுமலைபேட்டையில ஒரு கிலோ 7 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். பாஸ்பரஸ் சத்து குறைபாடுள்ள நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இந்தப் போன்மீல் விவசாயப் பயன்பாட்டுல இருந்துட்டு வருது. இதுலேயே மாட்டெலும்பு, ஆட்டெலும்பு, மீன் எலும்பில் தயாரிக்கப்படுற எலும்பு பவுடர் கிடைக்குது. நான் ஆட்டெலும்பு பவுடரைத்தான் பயன்படுத்தினேன்.”

மரங்களைத் துளிர்க்க
வைக்கும் முயற்சி

“சரியாகக் காய்க்காத வயதான மாமரங்களை வெட்டிவிடுவது விவசாயிகளோட வழக்கம். அப்படி வெட்டுற மரங்களை அடியோடு வெட்டிப் போட்டு விடாமல் பக்க கிளைகளை மட்டும் வெட்டிவிட்டு, அடிப்பகுதியான தண்டுப்பகுதியை அப்படியே விட்டுவிட வேண்டும். அதற்குத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் அதிலிருந்து புதிய துளிர்கள் துளிர்க்கும். இதிலிருந்து மகசூலும் எடுக்கலாம். என்னோட தோட்டத்தில் நிறைய மரங்களை இந்த முறையில் துளிர்க்க வைத்து வருகிறேன். புதிய மாமரக்கன்றை நட்டு அதை வளர்த்துப் பெரிதாக்குவதைவிட இந்த வேலை எளிதாக இருக்குது. ஆனால், இந்த முறை இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருக்குது.”