Published:Updated:

நாட்டுக்கோழி வளர்ப்பு... மாதம் ரூ.60,000 லாபம்... மாற்றுத்திறனாளியின் அசத்தல் முயற்சி!

கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்

கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு... மாதம் ரூ.60,000 லாபம்... மாற்றுத்திறனாளியின் அசத்தல் முயற்சி!

கோழி வளர்ப்பு

Published:Updated:
கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்

தஞ்சாவூர் நகரப்பகுதியான நாஞ்சிக் கோட்டை சாலையில் அமைந்துள்ளது, ஆசிரியர் காலனி. இங்கு வசித்து வரும் அன்பழகன் தன் வீட்டின் வளாகத்தில் உள்ள 2,400 சதுர அடி காலிமனையில் நாட்டுக்கோழி வளர்த்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார். இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞரான இவருக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே இவர் வருமானம் ஈட்டி வருவது இப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு மாலைப் பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்த அன்பழகன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘டவுனுக்குள்ளார, அதுவும் வீடுகள் நிறைஞ்ச பகுதியில அதிக எண்ணிக்கையில நான் நாட்டுக்கோழி வளர்க்குறதை பலரும் ஆச்சர்யமா பார்க் குறாங்க. ஆனா, ஒரு யதார்த்தத்தைச் சொல்லணும்னா, இது டவுன்ங்கறதுனால தான் என்னோட நாட்டுக்கோழிகளையும் முட்டைகளையும் மக்கள்கிட்ட நேரடியா நல்ல விலைக்கு விற்பனை செஞ்சு, ஈஸியா லாபம் பார்க்க முடியுது. கிராமப்புறங்களை விட, நகரங்கள்லதான் இதுக்கு வரவேற்பு அதிகம்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல் களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்
கோழிகளுக்குத் தீவனமிடும் அன்பழகன்

‘‘என்னோட அப்பா வேளாண்மைத் துறையில வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். நான் பாலிடெக்னிக் கல்லூரியில கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு முடிச்சதும் வேலை தேட ஆரம்பிச்சேன். என்னோட படிப்புக்கேத்த வேலை கிடைக்கலை. சம்பளமும் குறைவா இருந்துச்சு. அதனால வேலை தேடுறதுலயே மூணு வருஷம் ஓடிப்போயிடுச்சு. வேலைக்கே போகாம எவ்வளவு நாள்தான் வீட்ல சும்மாவே இருப்பனு சொந்தக்காரங்க கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பதான் சொந்தமா ஏதாவது தொழில் செய்யலாம்ங்கற முடிவுக்கு வந்தேன். எங்க பகுதியில ஒரு வீட்ல அஞ்சாறு கோழிகள் வளர்த்துக்கிட்டு இருக்காங்க. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. இதையே நாம பெரிய அளவுல செஞ்சுப் பார்க்கலாம்னு தோணுச்சு.

என்னோட யோசனையை அப்பா கிட்ட சொன்னேன். ‘கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு கோழி வளர்க்கப் போறியா’னு அதிர்ச்சியா கேட்டார். ‘வேற ஏதாவது செய்யலாம்... பொறுமையா இரு’னு சொன்னார். ஆனா, நான் என்னோட முடிவுல உறுதியாவும் தெளிவாவும் இருந்ததுனால, ‘உனக்குச் சரியா வரும்ங்கற நம்பிக்கை இருந்தா, எந்தத் தயக்கமும் இல்லாம செய்’னு என்னை உற்சாகப் படுத்தினார்.

கோழிக் கூண்டுகள்
கோழிக் கூண்டுகள்

44 கோழிகள் வாங்கினேன்

அப்பா கொடுத்த பணத்துல எங்க வீட்டை ஒட்டியுள்ள எங்களுக்குச் சொந்தமான 2,400 சதுர அடி காலிமனையில் கொட்டகைகள் அமைச்சு 2018-ம் வருஷம் சிறுவிடை, பெருவிடை ரகங்களைச் சேர்ந்த 40 தாய் கோழிகளும், 4 சேவல்களும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். படிபடியா பெருகி, இப்ப 250 கோழிகள் இருக்கு.

தீவனம்

ஒரத்தநாடு பக்கத்துல உள்ள தெக்கூர்ல எங்களுக்கு விவசாய நிலம் இருக்கு. நெல் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். அதுல ஒதுங்கக்கூடிய தரமற்ற நெல், கோழிகளுக்குத் தீவனமா பயன்படுது. இதனால் தீவன செலவு பெருமளவு குறையுது. இந்த 250 கோழிகளுக்கும் மொத்தமா சேர்த்து தினமும் 10 கிலோ நெல் தீவனமா போடுறேன். கடைகள்ல கிடைக்கக் கூடிய தரம் குறைவான அரிசி 4 கிலோ, 2 கிலோ கோதுமை, ஒரு கிலோ கேழ்வரகும் போடுறேன். எங்க வயல்லயே கோ-4, கோ-6 புல் சாகுபடி செய்றோம். அதைப் பசுந் தீவனமா தினமும் கொடுக்குறேன். முருங்கைக் கீரையும் கொடுப்பேன். இதனால் என்னோட நாட்டுக்கோழிகள் நல்லா ஆரோக்கியமா வளருதுங்க. குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் கடைகள்ல கிடைக்கக்கூடிய குஞ்சு தீவனம் கொடுக்குறேன்.

முட்டைகள்
முட்டைகள்

முட்டைக்கு சிறுவிடை.. இறைச்சிக்குப் பெருவிடை

சிறுவிடை கோழிகள்ல முட்டை அதிகமா கிடைக்கும். 16 - 20 நாள்களுக்குத் தினமும் ஒரு முட்டை வீதம் கிடைக்கும். ஆனா, அஞ்சாறு மாசமானாலும் ஒண்ணேகால் கிலோதான் எடை இருக்கும். பெருவிடை கோழியில முட்டைகள் குறைவா கிடைக்கும். 11 - 15 நாள்கள் வரைக்கும்தான் முட்டை இடும். ஆனா, நல்ல சதை பத்தா, உடல் எடை இரண்டே கால் கிலோவுக்கு மேல இருக்கும். இறைச்சி விற்பனைக்காகக் கோழி வளர்க் கணும்னு நினைக்குறவங்க, பெருவிடை வளர்க்கலாம். முட்டை விற்பனை மூலம் வருமானம் பார்க்கணும்னு விரும்பக் கூடியவங்கள் சிறுவிடை வளர்க்கலாம்.

ஒய்வுக்காலம்

தாய்க்கோழி முட்டையிட்டு முடிச்சதும் அடுத்த ஓரு வாரத்துக்கு ஓய்வுல இருக்கும். அதுக்குப் பிறகு சேவலோடு சேரும். அடுத்த ஒரு வாரம் கழிச்சு முட்டையிட ஆரம்பிக்கும். முட்டைகளை இன்குபேட்டர்ல 21 நாள்கள் வச்சிருந்தோம்னா, குஞ்சுகள் பொரிச்சிடும். அந்தக் குஞ்சுகளை 15 - 20 நாள்களுக்குப் புருடர் வச்சிருந்து அதுக்குப் பிறகு, கொடாப்புல விடுவேன்.

ஆடுகள்
ஆடுகள்

முட்டை, குஞ்சு, கோழி... எல்லாமே விக்கிறேன்

முட்டை, குஞ்சு, வளர்ந்த நிலையில உள்ள கோழிகள்னு மூணு விதமாவும் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இதனால பராமரிக்க எளிமையா இருக்கு. மக்கள் இங்கயே தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. ஒரு முட்டை 15 ரூபாய்ங்கற விலையில மாசத்துக்கு 1,500 முட்டைகள் விற்பனை செய்றேன். ஒருநாள் வயசுடைய குஞ்சு 60 ரூபாய் விலையில மாசத்துக்கு 300 குஞ்சுகள் விக்கிறேன். ஒரு மாச வயசுடைய குஞ்சு 95 ரூபாய் விலையில 200 குஞ்சுகள் விற்பனை செய்றேன். 140 - 150 நாள்கள் வயசுல ஒரு கிலோவுக்கு மேல எடையுள்ள பெரிய கோழி 370 ரூபாய் விலையில 30 கோழிகள் விற்பனை செய்றேன். ஆக ஒரு மாசத்துக்கு 70,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனம் உள்ளிட்ட செலவுகள் போக 60,000 ரூபாய் நிகரலாபமா கையில கிடைக்குது. வீட்டுக்குப் பக்கத்துலயே இதைச் செய்றதுனால எந்த நேரமும் இதை நான் நல்லா கவனிச்சிக்க முடியுது, விற்பனைக்கும் வசதியா இருக்கு. முழுமையான உழைப்புச் செலுத்துறதுனால தான் இந்த அளவுக்கு நிறைவான லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. நான் வெளியில எங்கயாவது வேலைக்குப் போயிருந்தாகூட இந்தளவுக்கு வருமானம் கிடைக்குமானு சொல்ல முடியாது. இது ரொம்பவே மனசுக்கு நிறைவா இருக்கு’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, அன்பழகன்,

செல்போன்: 70948 69626

கொட்டகையும் மேய்ச்சலும்!

‘‘22 அடி நீளம், 11 அடி அகலத்துக்குக் கொட்டகை அமைச்சிருக்கேன். மூணு அடி உயரத்துக்கு ரெடிமேட் சிமென்ட் காம்பவுண்டுல சுற்றுச்சுவர்கள் அமைச்சு அதுக்கு மேல 6 அடி உயரத்துக்குக் கம்பி வலைகள் அடைச்சிருக்கேன். மேற்கூரைக்குத் தகர சீட் போட்டுருக்கேன். கொட்டகையோட உயரம் தரையில இருந்து 9 - 10 அடி. இது பெரிய கோழிகளுக்கான கொட்டகை. குஞ்சுகள் வளர்ப்புக்காக, 10 அடி நீளம், 4 அடி அகலம், 7 அடி உயரத்துக்குக் கம்பி வலைகளால் கொட்டகை அமைச்சிருக்கேன். இதை 8 அறைகளா பிரிச்சிருக்கேன். இந்தக் கொட்டகைக்கு ஓடுகளால மேற்கூரை அமைச்சிருக்கேன். இந்த இரண்டுக்கும் மொத்தம் ரூ.74,000 செலவாச்சு.

தேடி அலைஞ்சு வாங்கினேன்

கிராமப்புறங்கள்ல உள்ள வீடுகள்ல விவசாயிகள் வளர்க்கக்கூடிய ஒரிஜினல் நாட்டுக்கோழிகளை வாங்கித்தான் வளர்க்கணும்னு ஆரம்பத்துலயே முடிவெடுத்து, பல நாள்கள் அலைஞ்சு திரிஞ்சி வாங்கினேன். சிறுவிடை, பெருவிடை ரகங்கள்ல 40 பெட்டைக் கோழிங்களும், நாலு சேவல்களும் வாங்கிட்டு வந்தேன். ஒரு கோழிக்கு 250 ரூபாய் வீதம் 11,000 ரூபாய் முதலீடு செஞ்சேன்.

மேய்ச்சல்

காலையில பொழுது விடிஞ்சதும் கொட்டகையைத் திறந்து விட்டுடுவேன். இந்தக் காலி மனையோட மொத்த பரப்பு 2,400 சதுர அடி. இதுல 250 சதுர அடி பரப்பை மட்டும்தான் கொட்டகைக்குப் பயன்படுத்தியிருக்கோம். மீதியுள்ள 1,950 சதுர அடி இடம் கோழிகள் மேய்றதுக்குத் தாரளமா போதும். காம்பவுண்டு சுவரை தாண்டி கோழிகள் வேற எங்கயும் பறந்து போயிடாம இருக்கு. அதுக்கு மேல 6 அடி உயரத்துக்குப் பச்சைநிற துணி வலை கட்டியிருக்கோம். திறந்த வெளியில மேய்ச்சல்ல இருக்குறப்ப, வெயிலோட தாக்கத்தைக் குறைக்க, ஒரு வேப்ப மரமும் பலா மரமும் இங்க இருக்கு’’ என்கிறார் அன்பழகன்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

கோழி வளர்ப்பு கொடுத்த 2 ஏக்கர்!

‘‘மழைக்காலத்துல கோழிகள் முட்டையிடும் திறன் குறைஞ்சிடும். நோய்த்தாக்குதல்களால் பாதிப்புகள் ஏற்படுறதுக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால மழைக்காலம் நெருங்க ஆரம்பிச்சதுமே, வழக்கமான எண்ணிக்கையில இருந்து, 25 சதவிகிதம் கோழிகளைக் குறைச்சிடுவேன். அதாவது, அதுக்கேத்தபடி முன் கூட்டியே விற்பனை செஞ்சிடுவேன்.

வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் பாதுகாக்க... மஞ்சள் தூள், மிளகு, சீரகம், இஞ்சி, வேப்பிலை, குப்பைமேனி இதையெல்லாம் ஒண்ணா கலந்து மிக்ஸியில போட்டு அரைச்சு... நெல், அரிசி மாதிரியான ஏதாவது ஒரு தீவனத்துல பிசைஞ்சு கொடுப்பேன். கொடாப்புல இருந்து காலை நேரத்துல கோழிகளைத் திறந்து விடும்போது வயிறு காலியாக இருக்கும். அந்தச் சமயத்துல இந்த மருந்தைக் கொடுப்பேன். இது வெள்ளைக்கழிச்சல் நோயை முற்றிலும் கட்டுப்படுத்துது.

வெயில் காலங்கள்ல, உடல் உஷ்ணமாகி, பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெந்தயம், நெல்லிக்காயை அரைச்சு தண்ணீரில கலந்து கொடுப்பேன். கோழிக்கு சளி பிடிச்சா, அதைக் கட்டுப்படுத்த குப்பைமேனி, ஆடா தொடை இலைகளை ஒண்ணா கலந்து அரைச்சு, அதுல இருந்து சாறு எடுத்துத் தண்ணீரில் கலந்து கொடுப்பேன்.

நாட்டுக்கோழிகள், ஆடுகள்
நாட்டுக்கோழிகள், ஆடுகள்

ஆடு வளர்ப்பு

கடந்த ஒன்றரை வருஷமா ஆடுகளும் வளர்த்துக்கிட்டு இருக்கேன். இப்ப எட்டு ஆடுகள் இருக்கு. ஆடுகள் குட்டி போட்டதும் ஆறு மாசம் வரைக்கும் வச்சிருந்து வளர்த்து அதுக்குப் பிறகு விற்பனை செய்றேன். ஒரு கிலோ உயிர் எடை 450 ரூபாய்ங்கற விலையில கணக்குப் போட்டு விற்பனை செய்றேன்.

நாட்டு மாடுகள்

இங்க ரெண்டு நாட்டுப் பசுக்களும் கன்றுக்குட்டிகளும் வளர்த்துக்கிட்டு இருக்கேன். தினமும் ஒரு லிட்டர் பால் கிடைக்குது. இதை எங்க வீட்டு தேவைக்குப் பயன்படுத்துகிறோம். மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு எல்லாத்தையும் எங்க வயலுக்கு உரமாகப் பயன்படுத்துகிறேன்.

கோழி வளர்ப்பு கொடுத்த 2 ஏக்கர் நிலம்

கோழி வளர்ப்பை காட்டி வங்கியில 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தப் பணத்தை வச்சு, 2 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயமும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். கோழி வளர்ப்பு மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்துல இருந்து 12,000 ரூபாய் எடுத்து வங்கிக்குத் தவணை கட்டிக்கிட்டு இருக்கேன்’’ என்கிறார் அன்பழகன்.