நாட்டு நடப்பு
Published:Updated:

வெடிக்காத வேட்டுக்கு இவ்வளவு பெரிய திரியா? ஊட்டம் தரும் காய்கறித் திட்டம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

கோழிகளைப் பிடிக்க துரத்திக்கொண் டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். தோட்டத்துக்குப் போவதற்காக அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமி, ஏரோட்டியின் ஓட்டத்தைப் பார்த்து அங்கு வந்தார். வியாபாரத்துக்காகச் சென்ற ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து இவர்களோடு சேர ஆரம்பமானது மாநாடு.

“ஒருவழியா மூணு வேளாண் சட்டங்களையும் நாடாளு மன்றத்துல கொண்டு வந்து ரத்து பண்ணியிருக்கு மத்திய அரசு. வேளாண் சட்டங்கள பிரதமர் மோடி வாபஸ் வாங்குகிறோம் என்று சொன்னபோதே விவசாயிகள் இரண்டு கோரிக்கைகள முக்கியமா வச்சாங்க. ஒண்ணு நாடாளு மன்றத்துல கொண்டுவந்து நீக்கணும், இன்ணொண்ணு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யணும்னு. இதுல ஒண்ணு நிறைவேறிடுச்சு. இன்னொண்ணு எப்ப நிறைவேறும்னு தெரியல. ஆனா, டெல்லி போராட்டக்களத்துல இருந்து விவசாயிகள் இன்னும் முழுமையா கிளம்பல. குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒரு சட்டம் கொண்டு வரணும்னு இன்னும் களத்துல இருந்துகிட்டுதான் இருக்காங்க. பார்ப்போம் மத்திய அரசு என்ன செய்யப்போகுதுனு” என்றவர், அடுத்த செய்திக்குத் தாவினார்.

“பெப்சிகோ கம்பெனியின் உருளைக்கிழங்கு விதை விஷயத்துல, விவசாயிகள இனி ஏமாத்த முடியாதுங்குறது உறுதியாகியிருக்கு” என்றார் வாத்தியார்.

“விவரமா சொல்லுங்க வாத்தியாரே” என்றார் காய்கறி.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு

“பெப்சிகோ நிறுவனத்தோட உருளைக் கிழங்கு விதைகளை ‘விவசாயிகள் சாகுபடி செய்யக் கூடாது, அதற்கான உரிமம் எங்களிடம்தான் உள்ளது’னு குஜராத் விவசாயிகளை மிரட்டி கோர்ட்டுக்கெல்லாம் இழுத்துச்சு லேஸ் (Lays) உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கிற பெப்சிகோ நிறுவனம். இந்த நிலையில பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் - 2001 (PPVFR)படி பெப்சிகோ நிறுவனத்தோட விதைகள விவசாயிகள் சாகுபடி செய்யலாம், விற்பனை செய்யலாம் என்று சொல்லி விதைக்கான காப்புரிமையை ரத்து செய்து டிசம்பர் 3-ம் தேதி உத்தரவிட்டுருக்குப் பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்ட ஆணையம்.”

“விவசாயிகளுக்கு நல்லது நடந்தா சரிதான்” என்றார் காய்கறி.

“ ‘ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்’னு ஒரு திட்டத்தைத் தமிழக அரசு, அறிவிச்சிருக்கு. மானிய விலையில மாடித்தோட்ட பைகள், காய்கறி விதைகள், உயிர் உரங்கள் எல்லாம் கொடுக்குறாங்களாம். அதே மாதிரி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகளும் (பைகள்) கொடுக்குறாங்களாம். அதுல மூலிகைச் செடிகள், நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் வளர்க்க செடிகள் இருக்குமாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘போன ஆட்சியில முளைக்காத விதையைக் கொடுத்த அதிகாரிகள்தான் இப்பவும் விதையைக் கொடுக்கப் போறாங்க. அதை வாங்கி என்ன பண்றது?’’

‘‘உண்மையிலயே எனக்கு இப்ப கோவம் வருது வாத்தியாரே... வேணாம் விட்டுடுங்க... வேற எதாவது பேசுவோம்’’ என்றார் ஏரோட்டி.

‘‘என்னய்யா ஆச்சு. இப்படிப் பொங்குற’’ என்றார் வாத்தியார்.

‘‘மாடித்தோட்ட பை கொடுக்குறோம், உயிர் உரம் கொடுக்குறோம்னு இவங்க சம்பாதிக்க இப்படித் திட்டத்தை அறிவிப்பாங்க. அதெல்லாம் கேட்குறதுக்கு தான் நல்லா இருக்கும். ஆனா, வேலைக்கு ஆகாது. ஒண்ணு, அறிவிப்பைப் பார்த்துட்டு அக்ரி ஆபீஸ் போனா, ‘ஸ்கீம் முடிஞ்சு போச்சு’னுதான் சொல்லுவாங்க. இல்லைன்னா அவங்க கொடுக்குற விதைகள் முளைக்காது. தப்பித் தவறி முளைச்சாலும் காய் வைக்காது. போன தடவை என்னோட நண்பர் வாங்கி வச்ச வெண்டைக்காய், காய் உருவாகும்போதே முத்துன காய் மாதிரி வந்துச்சு. உயிர் உரங்கள்னு அவங்க கொடுக்கறது எல்லாமே ஒண்ணுக்கும் ஆகாது. பயன்படுத்துற காலம் முடிஞ்ச உயிர் உரங்களைத் தலையில கட்டிடுவாங்க.

இந்தத் திட்டம் ஒண்ணும் புதுத்திட்டம் இல்ல. போன ஆட்சியிலும் மானிய விலையில மாடித்தோட்ட விவசாயத்துக்கு பை, உரங்கள், விதைகள் எல்லாம் கொடுத்தாங்க. அதை இந்த ஆட்சியில வேறொரு பேர்ல கொடுக் குறாங்க அவ்வளவுதான்’’ வெடித்தார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘இந்தத் திட்டத்துக்கு 6.75 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்களாம். இந்தத் திட்டம் யாருக்கு பயன்படுதோ இல்லையோ அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் பயன்படும். உண்மையில இதை எத்தனை பேருக்குக் கொடுத்தாங்க. அதோட தரம் என்னன்னு யாரும் ஆராய்ச்சி பண்ணப்போறதில்ல. போன ஆட்சியில முளைக்காத விதையைக் கொடுத்த அதிகாரிகள்தான் இப்பவும் விதையைக் கொடுக்கப் போறாங்க. அதை வாங்கி என்ன பண்றது’’ காய்கறியும் கரித்துக் கொட்டினார்.

‘‘நீங்க சொல்றது உண்மைதான். இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்னு பட்ஜெட்ல சொன்னாங்க. அதுக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்துல ஒரு மையமும் தொடங்கப்படும்னு சொன்னாங்க. ஆனா, அந்த அறிவிப்பு இன்னும் அறிவிப்பா தான் இருக்கு.

அதுக்கான முயற்சி முன்னெடுக்கப்படுறதா தெரியல. ஆதாயம் இருக்குற திட்டங் களுக்குத்தான் முன்னுரிமைக் கொடுப்பாங்க போல. ஆட்சி மாறுனாலும் காட்சி மாறாதுங்கறது தமிழ்நாட்டோட தலையெழுத்து’’ என்றார் வாத்தியார்.

‘‘யாரைச் சொல்லி என்ன பண்ண... அவங்க பொழப்பை அவங்க பாக்குறாங்க. நம்ம பொழப்பை நாமதான பார்க்கணும்’’ என்றபடி கூடையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு விற்பனைக்காகக் கிளம்பினார் காய்கறி. மற்ற இருவரும் அவரவர் வேலைக்குக் கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.