Published:Updated:

வேளாண் வளர்ச்சி திட்டமா, ஊழல் ஊக்குவிப்புத் திட்டமா?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

ன்றைய தினசரியை ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும். அப்போது வாடிக்கையாளர் ஒருவருக்குக் காய்கறிகளைக் கொடுக்க, அந்த வழியாக வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, வாத்தியார், ஏரோட்டி இருவரையும் பார்த்ததும், மாநாட்டை ஆரம்பித்துவிட்டார்.

‘‘அப்படியென்ன செய்தி வாத்தியாரே... ரெண்டு பேரும் ஆர்வமா படிச்சுகிட்டு இருக்கீங்க’’ என்றார் காய்கறி.

‘‘ஆர்வமா ஒண்ணும் பார்க்கல. விவசாயம் சம்பந்தமா ஒரு செய்தி இருந்துச்சு. அதைப் பார்த்துகிட்டு இருந்தோம். இந்தா இந்தச் செய்தி தான்’’ என்ற வாத்தியார், செய்தித்தாளைக் காய்கறியிடம் காட்டினார். அதில், கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது.

‘‘விவசாய பட்ஜெட்ல உழவர் நலத்துறை அமைச்சர் இதைத்தான் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மாதிரி அருமையான திட்டம்னு பேசுனாரே... இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போகுதா, அப்ப நம்ம கிராமமும் முன்னேறிடுமா’’ ஆர்வமாகக் கேட்டார் காய்கறி.

‘‘அதெப்படி முன்னேறும். இப்ப ஒரு இளையராஜா பாட்டு கேக்குற... அது மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும். அப்புறம் அதை மறந்துட்டு வேலையைப் பார்க்க போயிடுவில்ல. அதுமாதிரிதான் அரசாங்கம் அறிவிக்குற திட்டங்களும். கேட்கும்போது சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்தோடு அதை மறந்துட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போயிடணும். அதையே நினைச்சுகிட்டு இருக்கக் கூடாது’’ யதார்த்தத்தைச் சொன்னார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘இந்தத் திட்டம் பத்தி கேட்டா... நீ என்னென்னமோ உளறிகிட்டு இருக்க’’ எரிச்சலாகக் கேட்டார் காய்கறி.

‘‘அவர் அந்தத் திட்டம் பத்திதான் பேசுறாரும்மா... எதையாவது செஞ்சி, வேளாண்மைத்துறையை வளர்ச்சிப் பாதையில திருப்பி விடணும்னு உச்சத்துல இருக்க ரெண்டு, மூணு அதிகாரிகள் திட்டம் போடுறாங்க. ஆனா, சில அல்லக்கை அரசியல் வியாதிகளும், கமிஷன் எலும்புக்கு நாக்கைத் தொங்கப் போட்டுகிட்டு இருக்க அதிகாரிகளும் திட்டத்தைச் சிதைச்சிடுறாங்களே... அதைத்தான் ஏகாம்பரம் சொல்றாரு’’ என்றார் வாத்தியார்.

‘‘புரியும்படி சொல்லுங்க வாத்தியாரே’’ என்றார் காய்கறி.

‘‘இந்தத் திட்டம் வந்தா கிராமங்கள் தன்னிறைவு அடையும்னு சொன்னாரு அமைச்சர். ஆனா, சில அதிகாரிகளும் அரசியல்வாதி களும்தான் தன்னிறைவு அடைவாங்கபோல. இந்தத் திட்டத்துல பனை விதைகள், வேளாண் கருவிகள், தென்னை நாற்றுகள் உள்ளிட்ட பல பொருள்களைக் கொடுக்கப்போறாங்களாம். அதுக்கான பொருள்கள கொள்முதல் செய்றதுலதான் ஏகப்பட்ட முறைகேடு நடக்குதாம்.

இ-டெண்டர் மூலமா கொள்முதல் செஞ்சா, தரமான பொருள்கள் குறைவான விலையில விவசாயிகளுக்குக் கிடைக்கும்னு வேளாண்மைத் துறையில வேலைப்பார்க்குற நேர்மையான சில அதிகாரிகள் சொல்றாங்க.

பொதுவா 1,500 ரூபாய் மதிப்பிலான பொருள்களையெல்லாம் டெண்டர்ல 4,000 ரூபாய், 6,000 ரூபாய்னு மதிப்புப் போடுறாங்களாம். கூடுதலா அரசு பணம் கொடுத்தாலும், பல மட்டத்துல கமிஷன் போகக் கடைசியில தரமில்லாத பொருள்கள்தான் பயனாளிகளுக்குக் கிடைக்கப்போகுது. அதனால, இந்தப் பொருள்களையெல்லாம் இ-டெண்டர் மூலமா கொள்முதல் செஞ்சா, தரமான பொருள்கள் குறைவான விலையில கிடைக்கும்னு வேளாண்மைத்துறையில வேலைபார்க்குற நேர்மையான சில அதிகாரிகள் புலம்புறாங்க. அதைத்தான் ஏரோட்டி சொல்றாரு’’ என்றார் வாத்தியார்.

‘‘சாமியே வரம் கொடுத்தாலும்... பூசாரி இடம் கொடுக்க மாட்டாங்கபோல’’ வேதனைப்பட்டார் காய்கறி.

‘‘இயற்கை விவசாயம் செய்யச் சொல்லிப் பிரதமர் மோடி, அமித்ஷானு அறிக்கை விட்டுகிட்டு இருக்காங்களே... அவங்க நினைச்சா இயற்கை விவசாயத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு போக முடியாதா? அறிக்கை விட்டா... அவரைக்காய்க்கு விலை கிடைச்சிடுமா?’’ என்றார் ஏரோட்டி.

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவோம்னு சில திட்டங்களை அறிவிச்சாங்க. ஆனா, அது எல்லாமே திட்டமாதான் இருக்கு. அதைச் செயல்படுத்த சில முன்னெடுப்புகளை எடுக்குறாங்க. ஆனா, அந்த வேகம் பத்தாது. இன்னும் தீவிரமா செயல்படுத்தணும்.

அதே போல மத்திய அரசு தன்னோட அக்கறையை அறிக்கையோடு நிறுத்திக்காம, இயற்கை விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்றது, இயற்கை விவசாயி களுக்கு மானியம், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும். அப்பத்தான் இயற்கை விவசாயம் வளர்ச்சிப் பாதைக்குப் போகும்’’ என்றார் வாத்தியார்.

‘‘இந்த வருஷம் மழை நல்லா பெய்ஞ்சிருக்கு. கிணறு, பண்ணைக்குட்டைகள்ல எல்லாம் தண்ணி தளும்பி நிக்குது. இதைப் பயன்படுத்தி மீன் வளர்க்கலாம். கிணத்துல மீன் வளர்த்தா கிணறு சுத்தமா இருக்கும். சாப்பிட மீனும் கிடைக்கும். பண்ணைக்குட்டையில வளர்க்குற மீன்களை விற்பனையும் செய்யலாம். நான் கிணத்துல மீன் குஞ்சுகளை வாங்கி விடலாம்னு இருக்கேன். மீன் குஞ்சுகள் எங்க கிடைக்கும் வாத்தியாரே?’’ என்றார் காய்கறி.

‘‘பவானிசாகர்ல இருக்க அரசு மீன் பண்ணையில கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை மீன்களை உற்பத்தி பண்ணி விற்பனை செய்றாங்க. ஒண்ணேகால் இன்ச் வளர்ந்த 1,000 மீன் குஞ்சுகள் 600 ரூபாய் விலையில கொடுக்குறாங்க. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டும்தான் குஞ்சுகளைக் கொடுப்பாங்க. அதுக்கேத்த மாதிரி போய் வாங்கிக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

“நல்ல தகவல் சொன்னீங்க... நான் வீட்டுக்காரரை அனுப்பி வாங்கிக்கிறேன்’’ என்று காய்கறி கிளம்ப,

‘‘நானும் போய் வேலையைப் பார்க்குறேன்’’ என ஏரோட்டியும் புறப்பட முடிவுக்கு வந்தது மாநாடு.

‘வழுக்குப்பாறை' பாலு
‘வழுக்குப்பாறை' பாலு

இயற்கையில் கலந்த போராளி

கோயம்புத்தூர் மாவட்டம், வழுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. ‘வழுக்குப்பாறை பாலு’ என்று விவசாயிகளால் அன்போடு அழைக்கப்பட்டவர். ‘விவசாயிகள் என்றோர் இனம் இங்கே வாழ்கிறது’ என்று, 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆள்வோருக்கு எடுத்துக்காட்டியவர், விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு. அவர் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டவர் இந்த பாலு. விவசாயப் பிரச்னைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்வார். விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றித் தொடர்ந்து அங்கு பதிவு செய்துகொண்டே இருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 19.12.2021 அன்று இயற்கையில் கலந்தார். அவருக்குப் பசுமை விகடன் அஞ்சலியைச் செலுத்துகிறது.