ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

எட்டு மாதங்கள் ஆகியும் எட்டாத திட்டங்கள்..!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, ஓரமாக இருந்த வைக்கோல் போரில் சாய்ந்தபடி கரும்பைச் சுவைத்துக்கொன்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அவரைப் பார்க்க வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, “என்னய்யா காலங்காத்தால கரும்பு தின்னுகிட்டு இருக்க... என்ன ரேஷன்ல கொடுத்த பொங்கல் கரும்பா?’’ என்றபடி பேச்சைத் தொடங்கினார்.

‘‘ஆமாம் வாத்தியாரே... இந்தாங்க நீங்க ஒரு துண்டைக் கடிங்க’’ என்றபடி வாத்தியாருக்கு ஒரு கரும்புத் துண்டைக் கொடுத்தார் ஏரோட்டி. இருவரும் கரும்பைச் சுவைத்துக்கொண்டே பேசத் தொடங்கினர்.

‘‘எட்டு மாசமா ஆட்சிக்குக் கிடைச்சுட்டு வந்த நல்ல பேரெல்லாம் பொங்கல் பொருள் விநியோகத்துல காணாமப் போயிடுச்சாம். பல இடங்கள்ல தரமில்லாத பொருளைக் கொடுத்துட்டதா புகார் பறக்குதாம். இந்தக் கரும்புக் கொள்முதல்லயும் ஏகப்பட்ட குளறுபடி. அடுத்த வருஷமாச்சும், அரசாங்கம் நேரடியா கொள்முதல் பண்ணி விற்பனை பண்ணணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘கரும்புக் கொள்முதல்ல அரசியல்வாதி களைவிட அதிகமா சம்பாதிச்சது அதிகாரி கள்தான்னு சொல்றாங்க. பல மாவட்டங்கள்ல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களே, பினாமி பேர்ல கரும்பைக் கொள்முதல் பண்ணி அரசுக்குக் கொடுத்து காசு பார்த்திருக் காங்க’’ என்றார் ஏரோட்டி.

‘‘பயறுவகைத் திட்டம், பழமரத்தோட்டம்னு திட்டங்கள் போட்டு அரசாணை வெளியிட்டாங்க. அதுக்கான பணத்தையும் கொடுத்திட்டாங்க. ஆனாலும், இப்ப வரைக்கும் விவசாயிகளுக்கு எதுவும் போய் சேரல.’’

அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ‘‘உண்மை தான்யா... ஆட்டையைப் போடுறதுல இவிங்க நம்மளை மிஞ்சிட்டானுங்களேனு பல இடங்கள்ல அரசியல்வாதிகளே ஆச்சர்யப் பட்டுப் போயிட்டாங்களாம். அந்த அளவுக்கு அதிகாரிங்க புகுந்து விளையாடிட்டாங்களாம்’’ என்றார்.

‘‘கண்ணம்மா சொல்றது சரிதான்யா... அமைச்சருங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாங்க. ஆனா, அதிகாரிக ஆட்டம்தான் அதிகம்னு சொல்றாங்க. நம்ம விவசாயத்துறையையே எடுத்துக்க. அதுல இருக்க ஓர் உச்சமான அதிகாரி வாரவாரம் சென்னைக் கடற்கரை சாலையில இருக்க ஒரு சொகுசு இடத்துக்குப் போயிடுறாராம். இதுக்கு முன்னாடியெல்லாம் கீழ்மட்டத்துல இருக்க அதிகாரிங்கதான் கமிஷன் பணத்தை வசூல் பண்ணி மேலதிகாரிகளுக்குக் கொடுப்பாங்க. ஆனா, இந்த அதிகாரி, தானே களத்துல இறங்கி வசூல் பண்றாராம். வாரவாரம் வசூலான பணத்தோடு அங்க போயிடுவாராம்.

கடலூர்ல இருந்து அங்க வர்ற முக்கியமான நபரோட ஆளுங்ககிட்ட, தன்னோட பங்கு பணத்தை எடுத்துகிட்டு மிச்ச பணத்தைக் கொடுத்துட்டு வந்திடுறாராம். வாரவாரம் இது நடக்குது. கடற்கரை சாலையில இருக்க ஒரு சொகுசு இடத்துல தங்கிட்டு வர்றதுக்கான செலவை அந்தப் பகுதி வேளாண் அதிகாரிகள் தலையில கட்டிடுறாராம். இவனுங்க சம்பாதிக்க... நாம செலவு பண்ண வேண்டியிருக்கே’னு அங்க இருக்க அதிகாரிக புலம்புறாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘சில ‘சமயம்’ அப்படித்தான்... விடியல் ஆட்சி வந்தவுடனே, இனிமே பாருங்க... வேளாண்மைத்துறையைப் புரட்டிப் போடப்போறோம். விவசாயிகளுக்கு அதைத் தரப்போறோம்... இதைத் தரப்போறோம்னு சொன்னாங்க. ஆனா, 8 மாசமாகியும் இன்னும் எதுவும் நடைமுறைக்கு வரலைன்னு புலம்புறாங்க விவசாயிக. வீட்டுத்தோட்டம் அமைக்கக் ‘கிட்’ கொடுக்குறதப் பத்தி நாமக்கூட பேசுனோமே... அது இப்ப வரைக்கும் அறிவிப்பாதான் இருக்காம்ல’’ என்றார் ஏரோட்டி.

‘‘ஆமாய்யா... அந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் 12.5 கோடி ரூபாய். ‘கிட்’டோட மதிப்பு 1,200 ரூபாய். அதுல பயனாளிகள் 250 ரூபாய் கொடுத்திடு வாங்க. அந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தா இதுவரைக்கும் சுமார் ஒரு லட்சம் மாடித்தோட்டம் உருவாகி யிருக்கும். ஆனா, இப்ப வரைக்கும் அப்படித் தோட்டங்கள் உருவாகலையே... ஆன்லைன்ல பதிவு பண்ணுனவங்கள்ல பேருக்குக்கூட யாருக்கும் கிடைக்கலன்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘அந்தத் திட்டம் மட்டுமில்லீங்க... எல்லா திட்டமும் அப்படித்தான் பல்லிலுச்சுக் கிடக்கு... பயறுவகைத் திட்டம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, பழமரத்தோட்டம்னு திட்டங்கள் போட்டு அரசாணை வெளி யிட்டாங்க. அதுக்கான பணத்தையும் கொடுத்திட்டாங்க. ஆனாலும், இப்ப வரைக்கும் தம்ழிநாட்டுல பெரும்பாலான மாவட்டங்கள்ல வட்டார வேளாண்மை அலுவலகக் கிடங்குகள்ல எந்தப் பொருளும் இல்லையாம். அப்ப அந்தப் பணமெல்லாம் எங்கப்போச்சுனு தெரியலன்னு புலம்புறாங் களாம் நேர்மையான ஒருசில அதிகாரிகள்’’ என்றார் கண்ணம்மா.

‘‘இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இனிமேல் விவசாயிகளுக்கான மானிய விலையில பொருளைக் கொடுக்குறதை நிறுத்துங்க. அப்படிக் கொடுக்குற பொருள்ல தரமில்லாமப் போகுது. இல்லைன்னா பொருளே இல்லாமப் போகுது. அதுனால இனிமேல் விவசாயிகளுக்கான மானியத்தை அவங்க வங்கிக் கணக்குலயே அனுப்பிடுங்க. அவங்க பொருள்களை வாங்கிக்கட்டும்னு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, சுற்றறிக்கை அனுப்பியிருக்காம். பணமாக் கொடுத்தா இவங்க கல்லா கட்ட முடியாதுல்ல... அதனால அதுல எந்த முடிவும் எடுக்காம வெச்சிருக் காங்களாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘கூட்டுறவு வங்கிகள்ல வீட்டுக்கடன் வாங்குன விவசாயிகளால, இந்த ரெண்டு வருஷமா தவணை, வட்டி கட்ட முடியலையாம். கட்ட முடியாததுக்கு கொரோனா ஊரடங்கே காரணம்னு சொல்றாங்க. கடனைக் கட்டியே ஆகணும்னு கூட்டுறவு அதிகாரிகள் நெருக்கடி கொடுக் குறாங்களாம். பயிர்க் கடனுக்குத் தள்ளுபடி கொடுத்த மாதிரி நாங்க தள்ளுபடியெல்லாம் கேட்கலை. ஆனா, வட்டி, அபதார வட்டி தள்ளுபடி செய்யணும்னு கோரிக்கை வைக்கிறாங்க விவசாயிக. இதுக்கு அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகுதோ தெரியல’’ என்றார் ஏரோட்டி.

‘‘கொரொனா தொற்றுக்கு இடையிலயும் இந்த வருஷம் ஜல்லிக்கட்டை நடத்திடுச்சு அரசு. அதை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பாராட்டுறாங்க. ஆனா, அதே நேரம், ஜல்லிக் கட்டு மாடு வளர்க்க லட்சக்கணக்கில் செலவு பண்ணி காளைகளை வாங்கி வளர்த்து, பராமரிச்சு, தயார்படுத்தி ஜல்லிக்கட்டுல கலந்துக்க மாடுகளைக் கொண்டு வர்றவங் களைப் போலீஸ்காரங்களும் அதிகாரிகளும் வேதனைப்படுத்துறாங்கன்னு புலம்புறாங்க காளை வளர்க்குறவங்க.

இந்தத் தடவை மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் புக்கிங்னு சொல்லிட்டாங்க. அதுல பலபேருக்கு வாய்ப்புக் கிடைக் கலையாம். அதைவிட உள்ளூர்க்காரங்க ஜல்லிக்கட்டு பார்க்க விடாம ஏகப்பட்ட கெடுபிடியாம். அதே நேரம், போலீஸ்காரங்க, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வேண்டிய வெளியூர் ஆளுங்கதான் ஜம்முனு உக்காந்து ஜல்லிக்கட்டை பார்த்தாங்களாம். இது அலங்காநல்லூர், பாலமேடு மக்கள் கிட்ட கோபத்தை ஏற்படுத்தியிருக்கு’’ என்றார் வாத்தியார்.

‘‘சரிங்கய்யா... நான் போய் வியாபாரத்தைப் பாக்குறேன்’’ என்று காய்கறிக் கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.