கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

கல்லணையைக் காப்பாற்றிய நீதிமன்றம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

‘ஏரோட்டி’ ஏகாம்பரம் தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் அங்கு வந்து சேர... ஆரம்பமானது அன்றைய மாநாடு.

“பொங்கலுக்குப் பானையெல்லாம் வாங்கியாச்சா” காய்கறியை பார்த்துக் கேள்வி எழுப்பினார் வாத்தியார். ‘‘நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க. உங்களை மாதிரி பழங்காலத்து ஆளுங்கதான் பானையெல்லாம் வாங்கிகிட்டு இருக்காங்க. நான் நாலஞ்சு வருஷமாவே குக்கர்லதான் பொங்கல் வைக்குறேன்’’

-காய்கறியின் பேச்சில் பெருமிதம் தொனித்தது.

‘‘என்ன கண்ணம்மா இப்படிச் சொல்லிட்ட. உன்னை மாதிரி இளம் வயசு ஆளுங்கதான் இப்ப ரொம்ப விழிப்பா இருக்காங்க. மண் பானையில பொங்கல் வச்சி சாப்பிட்டா, அதோட ருசியும், வாசனையுமே தனிதான்... உடம்புக்கும் நல்லதுனு பேசி, போன்ல வீடியோ எல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க. பாரம்பர்யத்தைக் கைவிட்டுடக்கூடாதுனு கம்ப்யூட்டர் படிச்ச பசங்க எல்லாம்கூடத் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்காங்க. இப்ப மண் பானைகளுக்கு மவுசு கூடிக்கிட்டே இருக்கு’’ என்றார் வாத்தியார்.

‘‘ஆமாம் வாத்தியாரய்யா... வெளிநாடுகள்ல வசிக்குற தமிழர்கள்கூட இப்பெல்லாம் மண் பானையில பொங்கல் வக்கிறதைதான் அதிகம் விரும்புறாங்களாம்’’ என்று ஆமோதித்த ஏரோட்டி, ‘‘திருநெல்வேலி மாவட்டத்துல உள்ள காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, மேலப்பாளையம் குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகள்ல இருந்து இந்த வருஷம் ஆயிரக்கணக்கான மண் பானைங்க... மலேசியா, சிங்கப்பூர்னு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுருக்கு’’ என்று சொன்னார்.

அதைக் கேட்டு அசந்துபோன காய்கறி, ‘‘அப்படியா சமாச்சாரம்..! எப்படித்தான் அவ்வளவு பானைங்களையும் உடையாம, அவ்வளவு தூரத்துக்கு எடுத்துக்கிட்டு போயி, சேர்க்குறாங்களோ’’ என்றார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“எல்லாம் பொறுப்போட செஞ்சா, நல்லாத்தான் நடக்கும். அப்படியில்லாம வேலியே பயிர மேய்ஞ்சா எதுவும் உருப்படாது’’ என்ற வாத்தியார், “நீலகிரி மாவட்டத்துல ஒரு சம்பவம் நடந்திருக்கு. ‘தீட்டுக்கல்’ங்கற ஊர்ல, தமிழக வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில மத்திய அரசாங்கத்தோட மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. பலத்த காற்று வீசினதுனால மரங்கள் கீழே விழுந்துடுச்சு. அதையெல்லாம் அகற்றணும்னு மண் ஆராய்ச்சி மையத்தோட தலைமை அதிகாரிகிட்ட வனத்துறை உள்ளூர் அதிகாரிங்க அனுமதி கேட்டுருக்காங்க. அரசு விதிகள்படி மரங்களை அப்புறப்படுத்திக்குங்கனு சொல்லிட்டு விடுமுறையில் போயிருக்கார். இந்த நிலையில, கீழ விழுந்த மரங்கள் மட்டுமில்லாம, செழிப்பா நின்னுக்கிட்டு இருந்த 370 மரங்களையும் சட்டவிரோதமா வெட்டி விற்பனை செய்ய முயற்சி நடந்திருக்கு. அந்த மரங்களோட விலைமதிப்பு 48 லட்சம் ரூபாயாம். வனத்துறை, மத்திய மண் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் எல்லாரும் கூட்டு சேர்ந்துதான் இதைச் செஞ்சதா புகார் கிளம்பியிருக்கு. காவல்துறை விசாரணை நடத்தி... வனச்சரகர், வனக்காப்பாளர் உள்பட 5 பேரை கைது செஞ்சிருக்காங்க’’ என்று சொன்னார்.

‘‘அதிகாரிங்க தப்பு பண்ணினா, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க முடியும்... ஆனா அரசாங்கமே தப்பு பண்ணினா, எந்த போலீஸ் ஸ்டேஷன்ல போயி புகார் கொடுக்குறது. கடலூர் மாவட்டத்துல உள்ள வீராணம் பகுதி விவசாயிங்க இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையிலதான் இருக்காங்க’’ என்று ஆதங்கப்பட்ட காய்கறி, அந்தத் தகவலைப் பகிரத் தொடங்கினார். ‘‘அது நல்ல செழிப்பான விவசாயப் பூமிங்கறது இந்த உலகத்துக்கே நல்லா தெரிஞ்ச விஷயம். அங்க பழுப்பு நிலக்கரி எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துறதுக்கான தீவிர முயற்சியில மத்திய அரசு இறங்கி இருக்காம். அங்கவுள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில... கனிமவள ஆய்வு நிறுவனமும், எரிவாயு எண்ணெய் நிறுவனங்களும் 500 இடங்கள்ல ஆய்வு பணிகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்களாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினா, இங்கவுள்ள விவசாய நிலங்கள் எல்லாம் நிலக்கரி சுரங்கமா மாறிப்போயிடும்னு விவசாயிகள் பதறிப்போயி கிடக்குறாங்க. இதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சி, மாவட்ட நிர்வாகத்துக்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க’’ என்றார்.

‘‘விவசாயம் செழிக்கணும்ங்கறதுக்காக ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி சோழர் கால ஆட்சியாளர்கள் அந்த ஏரியை வெட்டியிருக்காங்க. இப்ப உள்ள நம்ம ஆட்சியாளருங்க, அங்க நிலக்கரி சுரங்கம் வெட்டி, விவசாயத்தை ஒட்டுமொத்தமா அழிக்க நினைக்குறாங்க. என்ன கொடுமை இது’’ கொந்தளித்துப் போன வாத்தியார், தன் கையில இருந்த குடையைக் கோபத்துடன் தரையில் குத்திவிட்டு,

‘‘கல்லணையிலயும் இந்தக் கொடுமைதான். அணக்கட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல கொள்ளிடம் ஆத்துல மணல் குவாரி அமைக்கத் தமிழக அரசுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ? திருசென்னம்பூண்டி, கோயிலடி இப்படி இன்னும் சில பகுதியில அளவுக்கு அதிகமா மணல் எடுத்துக்கிட்டு இருக்குறதை பார்த்துப் பதறின விவசாயிங்க, பல தடவை மனு கொடுத்தும் அதிகாரிங்க கண்டுக்கவே இல்லை. பிரச்னை நீதிமன்றம் வரை போகவே, நல்ல மனசு படைச்ச நீதிபதிங்க, ‘கல்லணையில இருந்து 15 கிலோமீட்டர் தூரத்துக்கு மணல் குவாரி அமைக்கக் கூடாது’னு இடைக்காலத் தடைவிதிச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘இந்த வருஷம் பொங்கலை அந்தப் பகுதி மக்கள் ரொம்பவே சந்தோஷமா கொண்டாடுவாங்க. சரி... நான் பொங்கலுக்குப் பானை வாங்க போகணும்’’ என்று அங்கிருந்து காய்கறி கிளம்பினார். அன்றைய மாநாடு கலைந்தது.