Published:Updated:

கரும்பு ஊழல்... விடியல் ஆட்சியிலும் காட்சிகள் மாறவில்லை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய விளைபொருள் களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார் `ஏரோட்டி’ ஏகாம்பரம். வண்டியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொடுத்துக்கொண்டே ஏரோட்டியின் களைப்பைப் போக்கிக்கொண்டிருந்தார் `வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அப்போது அந்த வழியாக வந்த `காய்கறி’ கண்ணம்மா, காய்கறிக்கூடையை இறக்கி வைத்துவிட்டு அவரும் பேச்சில் கலந்துகொள்ள ஆரம்ப மானது மாநாடு.

‘`வருஷத்துக்கு ஒரு தடவை ஊரடங்கு வர்றது இப்ப பழக்கமாகிடுச்சு. கொரோனான்னு சொன்னாங்க... டெல்டா வைரஸ்னு சொன்னாங்க. இப்ப ஒமிக்ரான்னு சொல்றாங்க. இன்னும் புதுசு புதுசா வைரஸ் பேரைச் சொல்லி நடுங்க வெச்சுகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் விடிவே இல்லையா வாத்தியாரே?’’ சலிப்பாகக் கேட்டார் ஏரோட்டி.

‘`யாருக்குத் தெரியும். 2 வது அலையைவிட இந்த 3வது அலை கொரோனாவால உயிர்சேதம் அதிகமிருக்காதுன்னு சொல்றாங்க. ஆனாலும், மின்னல் வேகத்துல அதோட பரவலைப் பார்த்து உலகமே பதறிப்போய்க் கிடக்கு. நம்ம ஊர்ல இன்னிக்கு நிலைமைக்குக் கொரோனா பாதிப்பு குறைவா இருக்குன்னு நாம அசால்டா இருந்திடக் கூடாது. முகக்கவசம் இல்லாம வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது. அரசாங்கம் சொல்ற விதிமுறை களைக் கட்டாயம் கடைப்பிச்சாவே ஓரளவுக்குப் பாதிப்பில இருந்து தப்பிச்சுக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

‘`இனிமே இப்படித்தான் வாத்தியாரே... நாம தான் இதையெல்லாம் அனுசரிச்சு வாழப் பழகிக்கணும்’’ என்ற காய்கறி, ‘`எங்க பார்த்தாலும் கொரோனா பேச்சாதான் இருக்கு. அதை விடுங்க வாத்தியாரே... நம்ம பொழப்புக்கு ஏதாவது நல்ல தகவல் இருந்தாச் சொல்லுங்க’’ என்றார்.

‘`உண்மைதான் கண்ணம்மா. உன்கிட்ட ஆடுக இருக்கு. ஏகாம்பரத்துக்கிட்ட மாடுக இருக்கு. உங்கள மாதிரி ஆடு, மாடு, பன்றி வளர்க்குறவங்கள்ல மாவட்டத்துக்குச் சுமார் 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து 50,000 ரூபாய்ல இருந்து ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் வட்டி யில்லாக் கடன் கொடுக்குறாங்களாம். கூடுதல் விவரம் வேணும்னா அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபீஸ்ல போய்க் கேட்டுக்குங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘`விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்கப் போறோம். விடியல் தரப்போறோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க. சொன்ன மாதிரி சில திட்டங்களையும் அறிவிச்சாங்க. ஆனா, எல்லாமே 110 விதிகள்ல அறிவிக்குற அறிவிப்பு மாதிரி வெறும் அறிவிப்பாவே கிடக்குது. நல்லது செய்ற அதிகாரிகள் பலரையும் முடக்கி வெச்சுட்டு ஜால்ரா தட்டுற ஆளுங்களை வெச்சு வண்டி ஓடிகிட்டு இருக்கு. `இப்படியே போனா எப்பவும் விடியல் வராது’னு அதிகாரிகளே புலம்பிகிட்டு இருக்காங்களாம். விவசாயத்துக்குத் தனிப் பட்ஜெட் போட்ட அரசுன்னு பெருமை பேசிகிட்டாங்க. ஆனா, அதுல அறிவிச்ச திட்டங்கள் பெரும்பாலும் வெத்து அறிவிப்பு தான்னு சொல்றாங்க. இயற்கை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’னு சொன்னாங்க. ஆனா, இயற்கை விவசாயம் தொடர்பான ஃபைலை யாரும் தொடுறதே இல்லையாம். அதுனால நமக்குக் காசும் கிடைக்காது... ஒண்ணும் கிடைக்காதுனு அதை ஓரமா வெச்சுட்டாங்களாம்’’ என்றார் காய்கறி.

‘`பரவாயில்லையே... இப்பல்லாம் சூடான செய்திகளைக் கொடுக்க ஆரம்பிச்சுட்ட கண்ணம்மா’’ என்று பாராட்டிய வாத்தியார், ‘`தமிழக அரசு, குடும்ப அட்டைக்குப் பொங்கல் தொகுப்பு கொடுத்துகிட்டு இருக்கு. அதுல முழுக்கரும்பு ஒன்றும் கொடுக்குறாங்க. அந்தக் கரும்புல மட்டும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து கோடிக் கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிச்சுட்டாங் களாம். விளைய வெச்ச விவசாயி வேதனையில இருக்காங்க. ஒரு கரும்புக்கு 33 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சது அரசாங்கம். இந்தத் தடவை நமக்கு நல்ல விலை கிடைக்கப் போகுதுன்னு கரும்பு விவசாயிகளும் சந்தோஷமா இருந்தாங்க. இந்த அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே 40 சதவித விவசாயிகள் 5 ரூபாய்ல இருந்து 8 ரூபாய் விலையில கரும்பை வித்துட்டாங்க. மீதியிருக்க விவசாயிகள்கிட்ட 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைக்கும் ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு விலையில வாங்கியிருக்காங்க வியாபாரிக. இது தொடர்பா ஊடகங்கள்ல செய்தி வந்ததும், ‘அரசு அறிவிச்ச விலையை விவசாயி களுக்குக் கொடுத்துதான் கொள்முதல் செய்யணும்’னு அரசு அறிவிச்சது. ஆனாலும், எந்த விவசாயிக்கும் 33 ரூபாய் விலை கிடைக்கல. ஒரு வருஷம் வம்பாடுபட்டுக் கரும்பை விளைய வெச்ச விவசாயிக்கு 13 ரூபாய்... விவசாயிகிட்ட வாங்கி, அரசாங்கத் துக்குக் கைமாத்தி விட்ட இடைத்தரகர்களுக்கு 20 ரூபாய். அப்புறம் எப்படி விவசாயி வாழ்க்கையில விடியல் வரும்’ என்றார் வேதனையுடன்.

‘`ம்... `ஸ்டாலின் வர்றாரு... விடியல் தரப்போறாரு’ன்னு சந்துபொந்தெல்லாம் கதற விட்டாங்க... விடியல் வந்த மாதிரி கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சது. ஆனா, சில அதிகாரிக மேகம், அந்த வெளிச்சத்தை மறைச்சு இன்னும் இருட்டாவே வெச்சுருக்கு... அதைச் சரி செஞ்சாதான் உண்மையான விடியல் வரும். ம்ம்ம்... அது வரும்போது வரட்டும். நாம பொழப்பை பார்க்கலாம்’’ என்று கூடையை எடுத்துக்கொண்டு காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.