Published:Updated:

`கால்நடைகளுக்கு கழிவான காய்கறிகளை உணவாகக் கொடுக்காதீர்கள்!’- நிபுணர்கள் எச்சரிக்கை

அதிக அளவு தக்காளி, தர்பூசணி மாடுகளுக்கு வேண்டாம், ஏன்?
அதிக அளவு தக்காளி, தர்பூசணி மாடுகளுக்கு வேண்டாம், ஏன்?

"வீணான காய்கறிகளைக் கொடுக்கும்போது பசுந்தீவனம், அடர்தீவனத்தோடு கலப்புத் தீவனமாகக் கொடுக்கலாம். ஆனால், பிரதான உணவாகக் கொடுப்பதை மாடு வளர்ப்போர் தவிர்க்க வேண்டும்."

விலை இல்லாததால் வீசப்படும் தக்காளி, தர்பூசணியைப் பலர் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கிறார்கள். அதைத் தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறை விஞ்ஞானிகள் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தாக்குதல் காரணமாக சென்னையை அடுத்த திருமழிசையில் செயல்படும் தற்காலிக சந்தையில், விலையில்லாததாலும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததாலும் தக்காளி, முள்ளங்கி, கேரட், வெண்டைக்காய், தர்பூசணி உள்ளிட்டவற்றை சந்தைக்கு அருகிலேயே கொட்டிச்செல்கிறார்கள். இவை அழுகி, அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு உணவாக மாறிவருகின்றன. சிலர், இதை அள்ளிச்சென்று மாடுகளுக்கு உணவாக அளித்துவருகின்றனர். இதுசம்பந்தமாக கால்நடை பராமரிப்புத் துறை, விவசாயிகளை எச்சரிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தக்காளி
தக்காளி

அதில், 'ஆடு, மாடுகள், அதிக அளவில் தக்காளியை உட்கொள்வதால், வயிற்றில் நுண் கிருமிகள் அதிகரிக்கும். கார அமிலத்தன்மை குறைந்து, மாடுகளின் வயிற்றில் புண் தோன்றி, அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்றில் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அடைத்து ரத்தத்தின் தன்மையை மாற்றிவிடும். ஒரு கட்டத்தில், மாடுகள் தீவனம் உண்ணாது. அசை போடாது. அதனால் உடல்நிலை பாதிக்கும். எனவே, தக்காளியை ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை விரிவாக்கக் கல்வித்துறையின் தலைவரும் பேராசிரியருமான குமாரவேலுவிடம் பேசினோம். “தக்காளியில், ஆக்ஸாலிக் அமிலம் அதிக அளவு உள்ளது. அதை அதிக அளவு கொடுக்கும்போது, மாடுகளின் வயிற்றில் உள்ள நன்மை மற்றும் தீமை செய்யும் இரண்டு வகை நுண்ணுயிர்களுமே அழிந்துவிடும். இதனால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மாடுகள் பால் கறக்கும் அளவும் குறையும்.

பேராசிரியர் குமாரவேல்
பேராசிரியர் குமாரவேல்

வீணான காய்கறிகளைக் கொடுக்கும்போது பசுந்தீவனம், அடர்த்தீவனத்தோடு கலப்புத் தீவனமாகக் கொடுக்கலாம். பிரதான உணவாகக் கொடுப்பதை மாடு வளர்ப்போர் தவிர்க்க வேண்டும். ஒரு அளவோடு கொடுக்கும்வரை எந்தப் பிரச்னையுமில்லை” என்றார்.

`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி

ஓய்வுபெற்ற மரபுசார் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தியிடம் இதுகுறித்துப் பேசினோம். “வெளிநாடுகளில் அதிகமாக விளையும்போது, ஆப்பிள்களை மாடுகளுக்குக் கொட்டுவது வழக்கம். அதேபோல இங்கேயும் அதிகமாக விளையும் தக்காளி, தர்பூசணி, கேரட்டை மாடுகளுக்குக் கொடுப்பதை விவசாயிகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிக் கொடுக்கும்போது, அழுகிய தக்காளி, தர்பூசணி உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. வீணான தக்காளி, தர்பூசணியைப் பொறுத்தவரை ஒருவேளைக்கு ஒரு கிலோ என்ற அளவில் கொடுக்கும்போது பாதிப்பு எதுவும் இருக்காது. அளவை அதிகரித்துக் கொடுக்கும்போது பாதிப்பு ஏற்படும். அதேபோல கத்திரிக்காய், கேரட்டை துண்டு துண்டாக வெட்டிக் கொடுத்தால் பாதிப்பு அதிகம் இருக்காது.

கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி
கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி

காய்கறிகளை அதிகம் கொடுக்கும்போது, மாடுகளுக்கு வயிற்று உப்புசம் பிரச்னை வரும். இதனால் மாடுகளின் உயிருக்கே ஆபத்து நேர வாய்ப்புண்டு. இதற்கு 10 வெற்றிலை, 100 கிராம் இஞ்சி, 2 வற்றல் மிளகாய், 10 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்து, 100 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்துவந்தால் வயிற்று உப்புசம் நீங்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு