Published:Updated:

நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

கடந்த சில இதழ்களாக மக்கள் மருத்துவர் பி.எம்.ஹெக்டேயின் மாத்தியோசிக்க வைக்கும் நல்வாழ்வு அனுபவங்கள் குறித்துப் பார்த்து வருகிறோம். இந்த இதழில் அவரின் வாழ்க்கை யைப் புரட்டிப்போட்ட நிகழ்வு பற்றிப் பார்ப்போம். இதைப் பற்றிப் பேசும்போது, அவர் குரலும் முகமும் வேறு வடிவம் பெறுகின்றன.

‘‘அன்பானவர்களே, நான் ஆரம்பக் கல்வியைப் பள்ளி சென்று கற்கவில்லை. என் கிராமமும் என்னைச் சுற்றியிருந்தவர்களிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். அதுதான் உண்மையான கல்வி. ஐம்புலன்களைத் திறந்து வைத்தால், சுற்றிலும் நிறையவே கற்றுக்கொள்ள முடியும். இன்றைய கல்வி முறை மனப்பாடத்துக்கு மட்டும் முக்கியத் துவம் கொடுக்கிறது. இதனால், அறிவாளிகள் அதிகம் உருவாவதில்லை. படிப்பாளிகளைத்தான் கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. என் அனுபவத்தில் பள்ளி சென்றவுடன் கற்பது நின்றுபோனது. படிக்கத் தொடங்கினேன். எல்லாம் ஏட்டுக் கல்விதான்.

1964-ம் ஆண்டு மங்களூரில் என் மருத்துவப் பணியைத் தொடங்கினேன். என் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் என்னை சிறந்த மாணவன் என்பார்கள். இதனால், எனக்குத் திமிரும் கூட இருந்தது. இதைத் திமிர் என்று சொல்வதைவிட, செருக்கு என்று கூறலாம். இதய மருத்துவ அனுபவத்தை உலகின் சிறந்த மருத்துவமனைகளில் பெறும் அரிய வாய்ப்பை பெற்றேன். லண்டனில் மிடில்செக்ஸ், ஹார்வேர்டு... போன்ற புகழ் பெற்ற மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றேன். சென்ற இடங்களில் பாராட்டு களையும் வெற்றிகளையும் குவித்தேன்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

உலகையே அறிந்துகொண்டதாக மங்களூரில் உலா வந்தேன். ஆனால், அது வெகுகாலம் நீடிக்கவில்லை. இதய நோய் சிகிச்சைக்காக தேவண்ணா என்ற 30 வயது இளைஞன் என்னிடம் வந்தான். என் வாழ்க்கையை இவன்தான் மாற்றினான்.

நல்ல ஆரோக்கியமான இளைஞன். மருத்துவர்கள் சொல்லும் அத்தனை பரிசோதனைகளும் செய்துகொள்வான். எந்தக் குறையும் இன்றி வாழ்ந்தான்.

ஒரு நாள் காலை உயிர் இழந்த நிலையில் அவனைத் தூக்கி வந்தார்கள். பரிசோதித்துப் பார்த்தேன்; மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. சிகிச்சை அளித்தும் அவனைக் காப்பாற்ற என்னால் முடியவில்லை. அவனுடைய இளம் மனைவி கதறி அழுதாள். திடீரென என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இந்த இளம் வயதில் ஏன் டாக்டர் என் கணவர் இறந்துபோனார்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

எப்படி இறந்தார்? என்று கேட்டிருந்தால், நீண்ட பதிலையும் பக்கம் பக்கமாக மருத்துவ அறிக்கையும் என்னால் கொடுத்திருக்க முடியும். ஆனால், ஏன் இறந்தார் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. என் வாழ்வில் முதல் முறையாகப் பதில் சொல்ல முடியாமல் நின்றேன். அந்த இளம் பெண்ணின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அந்தக் கணத்தில் என்னை அறிந்து கொண்டேன்.

பள்ளி, கல்லூரிகளில் பெற்ற சான்றிதழ்கள், பட்டங்கள் எல்லாம் வெறும் அலங்காரக் காகிதங்கள் என்பதை உணர்ந்தேன். சென்னையிலும் லண்டனிலும் மனித உடல், அதன் இயக்கம் குறித்து படித்ததில் நான் முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடியது என்பதெல்லாம் வெறும் செய்திகளின் தொகுப்பாகத் தெரிந்தன. அந்தத் தகவல் தொகுப்புகளை வைத்துக்கொண்டு, ஓர் அப்பாவிப் பெண்ணின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது என்று புரிந்துகொண்டேன். தன்னடக்கமே பெரிய கல்வி என்பதை அறிந்து கொண்டேன்.

புத்தகம்
புத்தகம்

‘அறிவின் பிரகாசத்தில் ஞானத்தைத் தொலைத்தோம்; செய்திகளின் தொகுப்பில் அறிவை இழந்தோம்’ டி.எஸ். எலியட்டின் கவிதை என் நெஞ்சைத் தொட்டது. பிறரின் கருத்துகளைக் கொண்டு நம் மூளையை நிறைத்து அதையே அறிவு என்கிறோம். நம் மூளையில் உதிப்பதே ஞானம் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டோன். நான் என் மூளையைக் குடைந்து தேடிக் கொண்டே இருக்கிறேன். மதங்கள், தத்துவங்கள், வேதங்கள், விஞ்ஞானம், எதிர்காலம்... என அனைத்திலும் ஆழமாக மூழ்கித் தேடி அலைந்து கொண்டே இருக்கிறேன்.

‘உடன்பாடு அறிவியல் மூலம் ஏன் என்பதற்கான பதிலைக் கொடுக்க முடியாது. எப்படி, எந்த அளவு என்பதற்கான பதிலைக் கூட ஓரளவுக்குத்தான் கொடுக்க முடியும். இதயம் எப்படிச் சுருங்கி விரிகிறது என்பதை விளக்கலாம். ஆனால், ஏன் என்பதைச் சொல்ல முடியாது’ என்கிறார் சார்லஸ் ஷெரிங்டன் என்ற அறிஞர். இவரின் தத்துவம் உடல் இயங்கிய லுக்கும் பொருந்துகிறது.

நவீன மருத்துவம் மீதான என் அணுகுமுறை, தேவண்ணாவின் மரணத்துக்குப் பின் விமர்சன ரீதியாகவே இருந்து வருகிறது. இந்த மருத்துவர்கள் அப்பாவி நோயாளிகளுக்குத் தரும் விளக்க மும் அறிவுரைகளும் போலி யானவையே என்பதை உணர்ந்து கொண்டேன். நவீன மருத்துவ அறிவியலில் மறைந்துள்ள இந்த அறியாமையின் ஆபத்தை உணர்த்தவே தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நோயாளி யும் இருக்கிறார்; அதைக் குணமாக்கும் மருத்துவரும் இருக்கிறார்.


கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவத்துறை நோயாளியைச் சாதாரணப் படுக்கையிலிருந்து, அதிநவீன உயர் தொழில்நுட்ப கருவிகளுக்குள் படுக்க வைத்துவிட்டது. தொழில்நுட்பம் என்பது பணியை எளிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் பலன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனால், மருத்துவத்துறையில் உள்ள தொழில் நுட்பங்கள், நாளுக்கு நாள் எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் வேலை யைத்தான் செய்து வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பணம் உள்ளவர் களுக்குதான் மருத்துவம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. மருத்துவத்துறை மனிதாபிமானமற்றதாக மாற்றப்பட்டு விட்டது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நோயாளி யும் இருக்கிறார்; அதைக் குணமாக்கும் மருத்துவரும் இருக்கிறார்.

அம்மை நோயை உண்டாக்கும் அம்மனும், அதைக் குணமாக்கும் அம்மனும் ஒருவர் தான் என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள். இது எவ்வளவு பெரிய உண்மை.

ஆனால், இந்த அரிய உண்மையை இன்றைய நவீன மருத்துவம் உணர மறுக்கிறது. கூடவே, நோயாளியின் உள்ளே இருக்கும் குணமாக்கும் தன்மையை அழிக்கவும் நினைக் கிறது. மருந்து, மாத்திரைகள், தொழில்நுட்பங்கள் மூலம் அனைத்தையும் சரிசெய்துவிட வேண்டும் எனும் வேட்கையில் மனிதனை அணுகி வருகிறது. இது பல சமயங்களில் பலனளிப்பதில்லை. மேலும், நோயாளிக்கு இந்த அணுகுமுறை தீங்கைத்தான் செய்து வருகிறது. இதை மருந்து உண்டாக்கும் மருந்து நோய் (Iatrogenic Disease) என்கிறோம். நவீன மருத்துவம் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், இந்த நோய் அதிகரித்து வருகிறது.

நண்பர்களே! கடந்த நூற்றாண் டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? மனிதனின் அறியாமை பற்றிய கண்டுபிடிப்புதான். ஆனால், மருத்துவர்களுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இது இன்னும் புரியவில்லை.

டாக்டர் என்பது Docere என்ற வேர்ச் சொல்லின் விரிவே ஆகும். D-ocere என்றால் ‘கற்றுக் கொடு’ என்று பொருள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நல்ல ஆசிரியர் என்பவர் தனக்குத் தெரியாது என்பதைத் தெரிந்தவர்தான். மாணவர் களுடன் உடன் இருந்து தான் அறியாததைக் கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்தான் நல்லாசிரியர். இப்படி உள்ள ஆசிரியர்கள் தான், இந்த உலகுக்குத் தேவை.

Education எனும் சொல் E வெளியே, Ducena-பெற்றெடு என்பதன் தொகுப்பே. ஒரு குழந்தையைத் தாய்தான் பெற்றாக வேண்டும். அதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தால் போதும். அதுபோல நோயாளி தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவன். தன் உடலினுள் உறைந்துள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை (Immune) நோயாளி தட்டி எழுப்பிக் கொள்ள முடியும்.

பத்ம விபூஷன் விருது பெறும்போது
பத்ம விபூஷன் விருது பெறும்போது

‘நவீன விஞ்ஞானம் மூலம் என்ன அறிந்துள்ளோம் என்பதையே சொல்லிப் பெருமைப்பட வேண்டாம். நாம் இன்னும் என்ன அறியாமலிருக்கிறோம் என்பதை ஆய்ந்து தெளிவதே பயன்தரும்’ என்கிறார் புகழ் பெற்ற மருத்துவ அறிஞர் லூயிஸ் தாமஸ்.

வாழ்க்கை நமக்குத் தேவையானதைக் கற்றுத் தருகிறது. காதுகளைத் திறந்து, கண்களை விழித்து வைத்து, நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை என்ற மாபெரும் சக்தியின் துகள் நாம். படைப்பு சக்தியே நம் பேராற்றலின் மூலம். அந்த ஆற்றலே நம்மை வழி நடத்துகிறது.

நமக்கு உணர்வும் உறுதியும் இருக்குமானால் எதையும் அடையவும் அறியவும் முடியும். எல்லையற்ற ஆற்றல் நம் உள்ளே உண்டு. கற்றல் என்பது வாழ்நாள் முழுதும் தொடரும் முடிவற்ற தேடல். ஆகையால், வாழ்நாள் முழுக்கக் கற்போம்’’ என்று சிந்திக்க வைக்கிறார் பி.எம்.ஹெக்டே.

இந்தியாவில் உள்ள பாரம்பர்ய மருத்துவ முறை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகள் சிறப்பானவைதான். அதைத்தான் கண்டு கொண்ட விதத்தை அவருக்கே உரித்தான விதத்தில் சொல்கிறார்.

‘‘முன்பு நம் பாரம்பர்ய மருத்துவத்தின் பலத்தை அறியாதவனாக இருந்தேன். பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் சொல்லிய ஓர் ஆய்வு முடிவு என்னை உண்மையிலேயே வெட்கி தலைகுனிய வைத்தது. அதன் பிறகு, இந்த மண்ணின் மருத்துவ மகத்துவத்தைக் கற்கத் தொடங்கினேன்’’ என்று பி.எம்.ஹெக்டே நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

அப்படி என்ன, பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் சொல்லியது? அதை அடுத்த இதழில் பார்ப்போம்.