Published:Updated:

"70% காய்கறி, பழங்கள் என் தோட்டத்துலயே கிடைக்குது"-Dr.கமலா செல்வராஜின் இயற்கை விவசாயம்!

டாக்டர் கமலா செல்வராஜ்
News
டாக்டர் கமலா செல்வராஜ்

"ரசாயன உரங்கள் அதிக பயன்பாட்டில் இல்லாத அந்தக் காலத்துல இயற்கை விவசாயம்தான் செஞ்சோம். காலப்போக்கில் அந்த நிலத்தில் விவசாய வேலைகளை கவனிச்சுக்க வீட்டுல யாருக்கும் நேரமில்லை. எல்லா நிலத்தையும் வித்துட்டோம்."என்கிறார் Dr.கமலா செல்வராஜ்.

"70% காய்கறி, பழங்கள் என் தோட்டத்துலயே கிடைக்குது"-Dr.கமலா செல்வராஜின் இயற்கை விவசாயம்!

"ரசாயன உரங்கள் அதிக பயன்பாட்டில் இல்லாத அந்தக் காலத்துல இயற்கை விவசாயம்தான் செஞ்சோம். காலப்போக்கில் அந்த நிலத்தில் விவசாய வேலைகளை கவனிச்சுக்க வீட்டுல யாருக்கும் நேரமில்லை. எல்லா நிலத்தையும் வித்துட்டோம்."என்கிறார் Dr.கமலா செல்வராஜ்.

Published:Updated:
டாக்டர் கமலா செல்வராஜ்
News
டாக்டர் கமலா செல்வராஜ்

“இந்த உலகத்துல இயற்கைதான், மன அமைதிக்கான மிகச்சிறந்த மருந்து. மருத்துவரா வேலை செஞ்சாலும், வீட்டு நிர்வாகம், சமையல், இசை, புத்தக வாசிப்பு உட்பட நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நிதானத்தையும் நிம்மதியையும் ஒருபோதும் இழக்கமாட்டேன். அதுக்குக் காரணம், என் தோட்டங்கள்தான். என் பெற்றோர் எப்போதும் ஏதாவதொரு வேலையைச் செய்துகிட்டே இருப்பாங்க. அவங்க ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை. அவங்களுக்கும் தோட்டப் பராமரிப்புதான் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருந்துச்சு. எனக்கும் தோட்டப் பராமரிப்புனா, அளவற்ற பிரியம்” – உற்சாகமாகப் பேசுகிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

கமலாவின் கொடைக்கானல் வீடு
கமலாவின் கொடைக்கானல் வீடு
நடிகர் ஜெமினி கணேசனின் மகள். சோதனைக் குழாய் கருத்தரிப்பு மகப்பேறு மருத்துவத்தில் புகழ்பெற்ற மருத்துவர். சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை ஒட்டியும் கொடைக்கானலிலும் வீடு, தோட்டம் வைத்திருக்கிறார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஆர்ப்பரிக்கும் கடற்கரை ஓசை செவிகளை நிரப்புகிறது. அரை ஏக்கரில் தோட்டம் செழிப்பாக இருக்கிறது. காம்பவுண்டுக்குள் மினி கடல்போல பெரிய நீச்சல் குளம். அதில், தூய்மையான நீர் ததும்பி நிற்கிறது. மொட்டைமாடியில் நின்று பார்த்தால் தொலைவில் கடல் அலைகள் துள்ளி விளையாடும் காட்சி மனதைக் கவர்கிறது.

கமலாவின் வீடு
கமலாவின் வீடு

டாக்டர் கமலா செல்வராஜ், தனது தோட்டப் பராமரிப்பு அனுபவங்களைப் புன்னகையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

“எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்குப் பக்கத்துல அப்பாவின் விவசாயத் தோட்டம் இருந்துச்சு. சினிமா பணிகளால அப்பாவால விவசாய வேலைகளை கவனிச்சுக்க முடியலை. நான் கொஞ்சக்காலம் தோட்டப் பொறுப்புகளைக் கவனிச்சுக்கிட்டேன். நெல், நிலக்கடலை, பருப்பு உட்பட பல பயிர்களைச் சாகுபடி செஞ்சேன். ரசாயன உரங்கள் அதிக பயன்பாட்டில் இல்லாத அந்தக் காலத்துல இயற்கை விவசாயம்தான் செஞ்சோம். காலப்போக்கில் அந்த நிலத்தில் விவசாய வேலைகளை கவனிச்சுக்க வீட்டுல யாருக்கும் நேரமில்லை. எல்லா நிலத்தையும் வித்துட்டோம். அதேநேரம், நுங்கம்பாக்கத்துல இருந்த எங்க வீட்டுல பெரிய தோட்டம் வெச்சிருந்தோம்.

அம்மாவுக்குத் தோட்டப் பராமரிப்புல அதிக ஆர்வம். நிறைய பூச்செடிகளை வளர்த்தோம். பூச்செடிகள்னா எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்பவே இஷ்டம். பூக்களைப் பார்க்கும்போது, மனசிலுள்ள பாரமெல்லாம் குறைஞ்சுடும். வீட்டுக்குப் பின்னாடி தொழுவத்துல கோழிகள், நாலு பசுக்கள், ஒரு எருமை மாட்டை வளர்த்தோம். வீட்டுலயே சின்னக் குளத்துல அலங்கார மீன்களும் இருக்கும். இப்படி வீட்டைச் சுற்றி இயற்கையான சூழலைப் பராமரிச்சோம். அந்த ஆர்வத்துல திருமணத்துக்குப் பிறகு எங்க வீட்டுலயும் தோட்டம் அமைச்சேன்.

தோட்ட வேலையில் கமலா செல்வராஜ்
தோட்ட வேலையில் கமலா செல்வராஜ்

20 வருஷத்துக்கு முன்னால ஈஞ்சம்பாக்கம் பங்களாவை வாங்கினோம். அப்போ தென்னை மரம் உட்பட கொஞ்சமா சில மரங்கள் இருந்துச்சு. இடம் நிறையவே இருக்கிறதால, வீட்டைச் சுத்தி பசுமையா வெச்சுக்கலாம்னு முடிவு செஞ்சேன். வெளியில இருந்து செம்மண், இயற்கை உரங்களை வாங்கி எல்லாத்தையும் கலந்து நிலத்தைச் சமன்படுத்தினேன். காய்கறிகள், கீரைகள், பழங்கள், பூக்கள்னு செடிகள், மரங்களை வளர்க்க ஆரம்பிச்சேன். அதிலிருந்து பல வருஷமா ஆரோக்கியமான காய்கறிகளும் கீரைகளும் பழங்களும் கிடைக்குது. வீட்டுக்குள்ளயும் வீட்டுக்கு வெளியேயும் இயற்கையின் தரிசனம். இதனால் மனசும் இயற்கையோடு இணைஞ்சு எப்போதும் சுறுசுறுப்பாவே இயங்குது” என்பவரின் முகம் புன்னகையால் பூரிக்கிறது.

சப்போட்டா, கொய்யா, அத்தி, நாவல், பலா, மாதுளை, எலுமிச்சை, பன்னீர் கொய்யா, ஆரஞ்சு, சீத்தா, மா உள்ளிட்ட ஏராளமான பழ வகை மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தென்னை, தேக்கு மரங்களும் அதிகளவில் உள்ளன. முருங்கை, அகத்தி, வல்லாரை, மணத்தக்காளி உட்பட பல்வகையான கீரைகளும் விளைகின்றன.
தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்

“ஆரம்பத்துல பலவகையான காய்கறிகள் நல்லாவே விளைஞ்சது. குறிப்பா, புடலை, பீர்க்கன், அவரைனு கொடி வகை பயிர்கள்ல மகசூல் அருமையா இருந்துச்சு. இங்க கடல் காத்து அதிகம் இருக்கும். நிலத்தடி நீர்ல கொஞ்சம் உப்புத்தன்மையும் இருக்கும். அதனால, இப்போ சில காய்கறிகள் மட்டும் சரியா வர்றதில்லை. மண்ணின் தன்மையை அடிக்கடி சோதனை செய்கிறேன். இந்தச் சூழல்ல நல்லா விளையிற பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரியா பராமரிக்கிறேன். பலா மரத்துல பழங்கள் கிடைக்குது. போன வாரம்தான் ஒரு பலாப்பழத்தைப் பறிச்சோம். சுவை அபாரம்! சமீபத்துலதான் வெள்ளை நாவல் மரத்துலயும் சில பழங்கள் பறிச்சு சாப்பிட்டோம்.

வாரத்துல ஆறு நாள்கள் எனக்கு மருத்துவமனை வேலைகள் இருக்கும். சனிக்கிழமை மதியம்வரைதான் வேலை. அன்னிக்கு மருத்துவமனையில இருந்து நேரா பீச் வீட்டுக்கு வந்திடுவேன். ஒன்றரை நாள் முழுக்கவே எனக்கானது. தோட்டப் பராமரிப்புலதான் அதிக கவனம் செலுத்துவேன். அதனால என் மனசுக்கு ரொம்பவே புத்துணர்ச்சி கிடைக்கும். அங்க 25 தென்னை மரங்கள் இருக்கு. அதிலிருந்து இளநீர் பறிக்கச் சொல்லி நிறையவே குடிப்பேன்.

தோட்டத்தில் கமலா செல்வராஜ்
தோட்டத்தில் கமலா செல்வராஜ்

திங்கட்கிழமை காலை அங்கிருந்து நேரா மருத்துவமனை போயிடுவேன். கூடவே, ஒருவாரத்துக்கான தேங்காய், காய்கறிகள், பழங்களையும் வீட்டுக்குக் கொண்டுவந்திடுவேன். இதுதான் என்னுடைய பலவருடச் செயல்பாடு” என்பவரின் பேச்சு கொடைக்கானல் பக்கம் திரும்பியது.

கொடைக்கானல் டாப்ஸ் ரோட்டில், மூன்றரை ஏக்கரில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது சகோதரிகள் மூவருக்குச் சொந்தமான வீடுகளும் தோட்டமும். அதில் ஓர் ஏக்கர் கமலாவுடையது. அரை ஏக்கரில் தோட்டம் அமைத்திருக்கிறார். 250-க்கும் அதிகமான ரோஜா மலர்கள் உட்பட கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மலரும் அத்தனை வகையான மலர்களும் இவரின் தோட்டத்தில் பூத்துக்குலுங்குகின்றன.
கமலாவின் கொடைக்கானல் வீடு
கமலாவின் கொடைக்கானல் வீடு

வீட்டைச் சுற்றி அலங்கார மரங்களும், அனைத்து திசைகளிலும் பச்சைப்பசேலெனப் புல்வெளி தரைகளுமாக, வீட்டுக்குள் ‘மினி கொடைக்கான’லை வடிவமைத்திருக்கிறார். காலிபிளவர், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, கொத்தமல்லி, பீன்ஸ், பட்டர் பீன்ஸ், பெங்களூரு கத்தரிக்காய், பட்டாணி, பூண்டு, நெல்லி, திராட்சை, குக்கிங் ஆப்பிள், ப்ளம்ஸ், முள்ளங்கி உட்பட ஏராளமான காய்கறிகள், பழங்களும் தோட்டத்தில் விளைகின்றன.

கொடைக்கானல் வீட்டைப் பற்றியும் அதிலுள்ள தோட்டத்தைப் பற்றியும் கூறும்போதே கமலாவின் முகம் குளிர்கிறது. “கொடைக்கானல்ல அப்பாவின் மூன்றரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. பசுமையான இடம். வீட்டைச் சுற்றிலும் பலவகையான செடிகள் இருக்கும். அப்பா இருக்கும்போதே அங்கேபோய் அடிக்கடி தங்குவோம். எனக்குத் தோட்டப் பராமரிப்புல ஆர்வம் அதிகமானதால, அவர் இருக்கும்போதே அதில் ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அங்கு என் வீட்டைச் சுற்றி, அரை ஏக்கர் நிலத்துல பெரிய தோட்டம் அமைச்சேன். என் நிலத்தைச் சுத்தி, மீதமுள்ள இரண்டரை ஏக்கர் நிலம் சகோதரிகளுடையது. மொத்த நிலமும் ஒரே காம்பவுண்டுக்குள்தான் இருக்கும்.

தோட்டத்து வேலைகள் செய்றப்போ எல்லாத்தையும் மறந்து புது உலகத்துல இருக்கிற உணர்வு கிடைக்கும். அந்த ரெண்டு நிலமும் வெறும் வீடும் தோட்டமும் மட்டுமல்ல. எங்க அப்பாவின் நினைவாலயம். அதை என் காலம் உள்ளவரை அழகா பராமரிப்பேன்
டாக்டர் கமலா செல்வராஜ்

கொட்டைக்கானல் தாவரவியல் பூங்காவில் வளரும் பூச்செடிகள்ல பெரும்பாலான வகைகள் என் தோட்டத்துலயும் இருக்கு. 250 வகையான ரோஜாச் செடிகள், பலநூறு வகையான மற்ற பூச்செடிகளையும் நிலத்தில்தான் வளர்க்கிறோம். எல்லாமே ஆள் உயரத்துல இருக்கும். அந்த வீட்டுக்குப் புதுசா யாராச்சும் வந்தா, திரும்பிப்போகவே மனசு வராது. அவ்வளவு பசுமையா இருக்கும். கொடைக்கானல்ல ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடக்கும். அந்த நேரத்துல சிறந்த வீட்டுத்தோட்டத்துக்கும் பரிசு கொடுப்பாங்க. தொடர்ந்து பல வருஷமா என்னோட பூந்தோட்டம்தான் முதல் பரிசை வாங்குது. ‘உங்க தோட்டம் மினி தாவரவியல் பூங்கா மாதிரி இருக்கு’ன்னு தோட்டக்கலைத்துறை அதிகாரிகளே சொல்வாங்க.

தக்காளி, வெண்டை, வெங்காயம், பச்சைமிளகாய், கீரை வகைகள் உட்பட அதிக வெப்பம் தேவைப்படுற காய்கறிப் பயிர்கள் மட்டும் அங்க விளையாது. மத்தபடி பூக்கள், பழங்கள், குளிர்பிரதேசத்தில் விளையும் காய்கறிப் பயிர்களின் விளைச்சல் அபாரமா இருக்கும். அங்கயும் இயற்கை விவசாயம்தான் செய்றேன். அடிக்கடி கொடைக்கானல் போவேன். களை எடுக்கிறது, காய்கறிகள், பூக்கள் பறிக்கிறது, செடிகளுக்குத் தண்ணீர் விடுறதுனு நாள் முழுக்கத் தோட்ட வேலைகளைச் செய்வேன்.

கமலாவின் கொடைக்கானல் வீடு
கமலாவின் கொடைக்கானல் வீடு

அங்க இருக்கும்போது நானே காய்கறிகளை நறுக்கிக் கொடுத்துடுவேன். என்னோட மேற்பார்வையிலதான் சமையல் வேலை நடக்கும். நானும் சமையல் செய்வேன். குக்கிங் ஆப்பிள்னு ஒருவகையான ஆப்பிள் மரம் இருக்கு. அது ரொம்ப புளிச்சுவையுடன் இருக்கும். அதைக் காய்கறிகள் மாதிரி சமையலுக்குப் பயன்படுத்துவோம். சட்னியும் செய்வோம்.

சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு கார்ல போய்ட்டு வரும்போதெல்லாம் அங்க விளையும் காய்கறிகளையும் கொண்டுவருவேன். தவிர, அங்கிருந்து பத்து நாளைக்கு ஒருமுறை காய்கறிகளைச் சென்னைக்கு பஸ்ல ஏத்திவிட்டுடுவாங்க. வேலையாட்கள்ல ஒருத்தர் அதை வீட்டுக்கு எடுத்துட்டு வந்திடுவாங்க. அதனால, வீட்டுத் தேவைக்கான காய்கறிகள், பழங்கள்ல 70 சதவிகிதம் என் ரெண்டு தோட்டத்துலயே கிடைச்சுடும். வருஷம்தோறும் மே மாசம் முழுக்கவே அங்கதான் தங்கியிருப்பேன். இந்த லாக்டெளன் சமயத்துல என்னால கொடைக்கானல் போக முடியலை. அதுதான் கொஞ்ச வருத்தமா இருக்கு.

கொடைக்கானல் தோட்டம்
கொடைக்கானல் தோட்டம்

கடையில காய்கறி, பழங்கள் வாங்கி வெச்சு பயன்படுத்துறதுக்கும், அன்றாடத் தேவைக்கு அப்பப்போ செடிகள்ல பறிச்சு சமையல் செய்றதுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. சுவை, வாசனை, சத்துல இருந்து நிறையவே ஆரோக்கியமான மாற்றங்களைக் கண்கூடப் பார்க்கிறேன். தோட்டத்து வேலைகள் செய்றப்போ என் மருத்துவத் தொழிலையும் என்னையும் மறந்து புது உலகத்துல இருக்கிற உணர்வு கிடைக்கும். அந்த ரெண்டு நிலமும் வெறும் வீடும் தோட்டமும் மட்டுமல்ல. எங்க அப்பாவின் நினைவாலயம். அதை என் காலம் உள்ளவரை அழகா பராமரிப்பேன்” என்பவர் நெகிழ்ச்சியாகிறார். தோட்டத்துப் பூங்காற்றால் மீண்டும் புன்னகையை உதிர்க்கிறார்.