Election bannerElection banner
Published:Updated:

கொள்ளிடம்: ஆக்கிரமிப்புகளால் அழிந்து வரும் தொட்டால் சிணுங்கி... நடவடிக்கை எடுக்குமா அரசு?

தொட்டால் சிணுங்கி மூலிகை
தொட்டால் சிணுங்கி மூலிகை

``தொடர்ந்து இதை இப்படியே விட்டுவிட்டால் தொட்டால் சிணுங்கி என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகும். எனவே, தொட்டால் சிணுங்கி செடியை அழிவிலிருந்து காக்கவும் அதைப் பயிரிடவும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும், வாய்க்கால் கரை ஓரங்களிலும் அபூர்வ மூலிகையான தொட்டால் சிணுங்கி செடிகள் வளர்ந்துள்ளன. பெரும்பாலும் நீர் நிலைகளையொட்டி வளர்ந்துள்ள இந்தச் செடிகள் வளர்ந்து, கொடியாகத் தரையில் அடர்த்தியாகப் படர்ந்து காணப்படுகின்றன.

Touch Me Not Plant
Touch Me Not Plant
Image by Krishnendu Pramanick from Pixabay

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நீர்நிலைகள் நிறைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வளர்ந்திருந்த தொட்டால்சிணுங்கி செடிகள் தற்போது குறைந்து வருகின்றது. இதைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால் வருங்காலத்தில் இந்த அபூர்வ மூலிகைச் செடிகள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படலாம்.

இதுபற்றி அம்மாபேட்டையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

"தொட்ட உடனேயே சுருங்கக்கூடிய தன்மை வாய்ந்த இந்த மூலிகைச் செடிகள் சிறுநீரக பிரச்னைக்கு எளிய தீர்வு தரக்கூடியதாகவும் ரத்த அழுத்தத்தைப் போக்கக் கூடியதாகவும் உள்ளது. சிறுநீரகக் கல், சிறுநீரகம் பழுது ஆகுதல் போன்ற பிரச்னைகளுக்கும் இது பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு அரிய மருந்தாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதாகவும், மலட்டுத் தன்மையை நீக்க வல்லதாகவும் உள்ளது. ஆண்மைத் தன்மை மற்றும் உயிர் சத்தை ஊக்கப்படுத்தும் மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொட்டால் சிணுங்கி மூலிகை
தொட்டால் சிணுங்கி மூலிகை

மூலிகைகளிலேயே சிறந்த சஞ்சீவி மூலிகையாக இந்த தொட்டால் சிணுங்கி மூலிகை இருந்து வருகிறது. இதன் இலை மற்றும் வேர்ப்பகுதி மருத்துவ குணம் வாய்ந்ததாகும். தொட்டால் சிணுங்கி செடிகள் காலப்போக்கில் குறைந்து வருகிறது. நீர்நிலைகளை ஒட்டி ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் இவை தற்போது அழிந்து வரும் தாவரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இதை இப்படியே விட்டுவிட்டால் தொட்டால் சிணுங்கி என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகும். எனவே,  தொட்டால் சிணுங்கி செடியை அழிவிலிருந்து காக்கவும் அதைப் பயிரிடவும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு